அன்னதானத்தில் அடங்கியுள்ள புண்ணியம் .


கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட – தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன? என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சொர்க்கத்திற்கு  அனுப்பப்பட்டவன்.
அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சொர்க்கத்தின்  தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் – எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை? – எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.
தலைவனோ – கர்ணா! நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மணியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் – எப்போதாவது யாருக்கேனும்  அன்ன தானம் செய்திருக்கிறாயா? – எனக் கேட்டான்.
கர்ணனுக்கு அன்ன தானம்  செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது உன் வயிற்றுப்பசி அடங்கவில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி? எனக் கேட்ட போது – தலைவன் கூறினான் – உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் – பசி அடங்கி விடும் என்றான்.
கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா? – என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் – வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப – பசி உடனே அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன் – இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க – தலைவன் கூறினான் – அன்பின் கர்ணா – நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க – நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ! இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் – நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.
தோழிகளே!  நாமும் பிறந்த நாள்  திருமண நாள்  என்று கொண்டாடும் போதெல்லாம் முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *