இலங்கையில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே கைகலப்பு : ஒருவர் மரணம்


இலங்கையின் வெலிவேரிய என்ற பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

இப்பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைகளினால் அயலில் உள்ள குடிநீர் கிணறுகளில் இரசாயனம் கலக்கப்படுவதாகவும் உடனடியாக இப்பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளை மூடக்கோரியும் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட முறுகல் நிலையில் பாதுகாப்பு தரப்பிலிருந்து கண்ணீர்ப்புகை வீசப்பட்டு துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இதில் பலர் காயமடைந்து கம்பஹா மற்றும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குடிநீரில் ஏற்படும் இப்பாதிப்பு தொடர்பாக அரசிடம் உரிய முறையில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததனால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவொரு சிறு பொறியாக அமைந்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று இச் சிறு போராட்டம் பெரும் அலையாக மாறி ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்துமா என பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *