இளையராஜா.. எனக்கு விடை கொடுங்கள்! மனுஷ்ய புத்திரன்************
இளைய ராஜாவிடமிருந்து 
ஏ.ஆர் ரகுமானுக்கோ
யுவன் சங்கர் ராஜாவுக்கோ
நான் மதம் மாறிவிடவேண்டிய நேரம்
வந்துவிட்டதென்றே நினைக்கிறேன்

என் காயங்களின் மேல்
அவர் கண்ணீரின் உப்பைத் தடவுகிறார்

நான் குழப்பமான பாதைகளின் வரைபடத்தை
அவர் இன்னும் குழப்பமாக்குகிறார்

என் மயக்கங்களின் மூட்டங்களில்
அவர் ஒரு பனிப்படலத்தைக் கொண்டு வருகிறார்

நான் என் கொலைக்கருவியை கூர் தீட்டும்போது
அவர் ஒரு ஆப்பிளை கொண்டுவந்து வைக்கிறார்

என் பழைய காதலிகளிடமிருந்து தப்பிச் செல்லும்போது
அவர் அவர்களை இன்னும் வசீகரமாக்குகிறார்

என் புதிய காதல்கள் மேல்
அவர் எனக்கு அதீதமான நம்பிக்கைளை ஊட்டுகிறார்

என் தற்கொலைக் கயிறின் முடிச்சுகளை
அவர் ஒவ்வொரு முறையும் அவிழ்த்து விடுகிறார்

கசப்பின் புதர் மண்டிய உலகில்
அவர் என்னை ஒரு தொட்டாற்சிணுங்கியாக மாற்றுகிறார்

நான் ஒரு துரோகத்தைச் செய்யும்போது
அவர் என் கைகளை நடுங்க வைக்கிறார்

என் பயணவழிகளில்
அவர் என்னை ஊர்போய்ச் சேரவிடாமல் தடுக்கிறார்

நான் திரும்பவிரும்பாத என் பால்யத்திற்கு
அவர் திரும்பிப் போகச் செய்கிறார்

என் மோகத்தின் நெருப்பில்
அவர் என்னை ஒரு விறகாகப் பயன்படுத்துகிறார்

நான் மழையில் நனையும்போது
மழையின் சப்தத்தில்
அவர் தன் வயலினைக் கலந்துவிடுகிறார்

நான் உறுதிமிக்க மனிதனாக
இதயமற்ற மனிதனாக
கண்ணீரற்ற மனிதனாக இருக்க விரும்புகிறேன்
இளையராஜாவுக்குத் தெரியாமல்
நான் எங்கே ஒளிந்து கொண்டாலும்
இளைய ராஜா அங்கே வந்துவிடுகிறார்.

மனுஷ்ய புத்திரன்

10.7.2017
மாலை 4.57Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *