எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞரணி!


எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞரணி!

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எங்களது விடுதலைப்போரில் இளைஞர்களும் பங்கேற்க கூடியவர்களாக ஜனநாயக நடைமுறைகளில் இந்த இளைஞர்களை பங்குபற்றக்கூடியவர்களாக இளைஞர் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழரசுக் கட்சியின் இளைஞரணிக்கான நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்றுவரை, இலங்கை அரசியலில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அரசியல் அமைப்பு நெருக்கடிகள், அவற்றுக்கப்பால் தமிழர்களுடைய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது மற்றும் தமிழர்களுடைய பிரதேசங்களிலே அதிலும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாமல் உள்ளார்கள்.

இந்த அடிப்படையைக் கொண்டு 30/1 என்ற மனித உரிமை பேரவை தீர்மானம் 2015 ஆம் ஆண்டும் அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டும் தற்போது 2019 ஆம் ஆண்டு 30/1 என்ற தீர்மானமும் 34/1 என்ற தீர்மானமும் 40/1 என்ற தீர்மானமும் மனித உரிமை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அவற்றை இலங்கை அரசு தாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கின்றது. தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கிவிட்டு, ஜனாதிபதியும் அரசாங்கமும் கூட தமக்கு அதில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளமையால் நிறைவேற்ற மாட்டோம் என ஒரு புறத்திலும் எங்களால் முடிந்ததை நிறைவேற்றுவோம் என்றும் கூறி வருகின்றார்கள்.

ஆகவே எங்களுடைய மாநாட்டில் இனப்பிரச்சினைத் தீர்வு எட்டப்படாத நிலையிலும் மனித உரிமைப் பேரவையில் எட்டப்பட்ட தீர்மானங்களையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்த வேண்டியிருக்கும்.

இனப் பிரச்சினைக்கும் மனித உரிமை பேரவைக்கும் இந்த அரசு செவிசாய்த்து இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்கான அவகாசம் ஒன்று விதிக்கப்படும்.

இதனடிப்படையில் வேண்டிய தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்.

இந்நிலையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தவேண்டுமானால் அத்தகைய தீர்மானங்களையும் நாங்கள் எடுக்கவேண்டும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *