ஜம்மு-காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு – தொடங்கி வைக்கும் மோடி


தொடர்புடைய படம்

ஜம்மு-காஷ்மீரில் தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து 24 மணி நேரம்கூட ஆகாத நிலையில், தற்போது அதிரடி முடிவு ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக அறிவித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அதேபோல் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமித் ஷா

இதனால் காஷ்மீரில் இனி யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும். இதற்கு முன் காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க அனுமதி இல்லாமல் இருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடிவெடுத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் காஷ்மீரில் கொஞ்சம் கொஞ்சமாக பிற மாநில மக்கள் குடியேற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில்தான் வரும் அக்டோபர் 12 முதல் 14-ம் தேதி வரை, காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 12-ம் தேதி ஸ்ரீநகரில் மோடி தொடங்கி வைக்கும், இந்த முதலீட்டாளர் மாநாடு, 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் முடிவடைகிறது. ஜம்மு-காஷ்மீரில் தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் இனி வரும் நாள்களில் வேகமாக முன்னேற்றம் அடையும் என்றும், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஐடி நிறுவனங்கள் உட்பட தொழிற்சாலைகள் நிறைய தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எழுதியவர் – செ.கார்த்திகேயன். நன்றி விகடன்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *