புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்!


புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்!

தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று சகல கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழீழம் உருவாகிய, வேளையில், காலம் சந்தர்ப்பம் பார்த்திருந்த ஒநாய்கள், முள்ளிவாய்காலை நினைவுகூரும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியின் பின்னர் சில துறைகள், நிலைகள், மேடைகளில் நவீன தலைவர்களாக, ஆலோசகர்களாக, வழிநடத்துபவர்களாக பார்க்க வேண்டிய துர்பாக்கித்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்.

இன்று முள்ளிவாய்க்காலின் பத்தாவது வருடத்தை நாம் அனுஷ்டிக்கும் இவ்வேளையில், எங்கு பார்த்தாலும் தமிழீழ மக்களிடையே ஒற்றுமையின்மை பற்றி நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் உரையாடப்படுவதை காணக்கூடியதாக உ ள்ளது.

பத்து வருடமாகியுள்ளது இன்னும் இப்படி பயணிக்க முடியாது என்போரும் இம்முறை முள்ளிவாய்கால் நிகழ்வுடன் தன்னும் நாம் ஒன்றுபட வேண்டும் என்போரும் ஒற்றுமையை பல வடிவங்களில் தேடுகிறார்கள்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியின் பின்னர், தொடர்ந்து, குறைந்தது இரு வருடங்களாக ஒற்றுமை ஆகுங்கள் என பல கட்டுரைகளை பத்திரிகைகள், இணைய தளங்களில் எழுதி எழுதி களைத்த பின்னரும், வேற்றுமையில் ஒற்றுமையாக சில வேலைதிட்டங்களை முன்னெடுங்களென கூறியும் தோல்வி கண்டதை தொடர்ந்து, தமிழீழ மக்களிடையே ஒற்றுமை என்பதற்கு இனி ஒரு பொழுதும் சாத்வீகம் இல்லை என்ற கருத்துடன், குறைந்தது கடந்த ஆறு வருடங்களாக செயற்படுகிறேன்.

இதன் காரணமாக மற்றவர்களுடன் இணையாது, மற்றவர்களை பகைக்காது, எம்மால் முடிந்த வரையில், சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து, சர்வதேசத்தை நோக்கி எமது வேலை திட்டங்களை நகர்த்துகிறோம் .

ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர், மிக நீண்டகாலமாக விடுதலை போராட்டத்திற்கென இருந்து வரும் கட்டமைப்பின், நம்பிக்கைகுரிய நண்பர்களுடன் பயணிப்பதில் தவறு இருக்க முடியாது.

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், திடிரென உருவான எந்த செயற்பாட்டாளருடனோ, நவீன தலைவர்களுடனோ, நாம் கைகோர்பதற்கோ நட்பாக வேலை திட்டங்களை முன்னெடுக்கவோ தயாராக இல்லை என்பதை இவ்விடத்தில் மிக தெட்ட தெளிவாக கூறவிரும்புகிறேன்.

இதற்கு காரணங்கள் பல. எமது ஆய்வில் உதயமான உண்மைகளை இங்கு சுருக்கமாக பகிர்வதனால் மாறுபட்ட சிங்கள பௌத்த அரசுகளின் வேறுபட்ட புலனாய்வு மையங்களின் வெற்றியே, தமிழீழ மக்களிடையே உள்ள ஒற்றுமையின்மை .

இவர்களிடையே ஒற்றுமை என்பது இனிமேலும் வர முடியாதவாறு பல திட்டங்களை அவர்கள் வகுத்து செயற்படுகின்றனர்.

இங்கு கூறப்படும் ஒற்றுமை என்பது தமிழீழ விடுதலை போராட்டத்தில் பின்னி பிணைத்தவர்களுடனான ஒற்றுமை பற்றியது. ஓட்டுக்குழுக்களுடனான ஒற்றுமை பற்றியது அல்ல.

ஒற்றுமையின்மை என்பது ஒரு நோய் உண்மையை கூறுவதனால் ஒற்றுமையின்மை என்பது ஒரு பயங்கர நோய் இது ஓர் நோயாக காணப்படுவதனால் இவ் நோய் எப்படியாக என்ன காரணிகளினால் உருவானது என்பதை 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியின் பின்னர் உருவான அமைப்புக்கள் ஆராய தவறியுள்ளன.

இவர்கள் விரும்பினார்களோ இல்லையோ, சிங்கள பௌத்தவாத அரசுகளின் புலனாய்வு பிரிவுகளின் தரகர்களே இவர்களை கையாளுகின்றனர் .

அவர்கள் தமிழீழ மக்களிடையேயான ஒற்றுமையை நாசமாக்குவதற்கான ஆலோசனைகளை நாளுக்கு நாள் மறைமுகமாக கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை சில மேற்கு நாடுகள், 2009ஆம் ஆண்டு மே மாதம் பின்னர் உருவான சில அமைப்புக்களை மட்டும் ஏன் மறைமுகமாக தட்டி கொடுக்கின்றனர் என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

ஒருவரது நோயை கண்டு பிடிப்பதற்கு இரத்தம் சலம் எக்ஸ்ரே போன்றவற்றை பாவித்து கண்டுபிடிப்பது போல், பகுத்தறிவு படைத்த ஒவ்வொருவரும், தமிழீழ மக்களிடையே இருந்த ஒற்றுமை எப்படியாக இல்லாமல் சென்றது என்பதை ஆராய வேண்டும் .

இதை செய்து, அதற்கான பரிகாரம் காணது ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை ஆவோம் வருங்களென கதைப்பது மடைமை தனம் .

அண்மையில் ஒற்றுமை பற்றி கருத்துக்கள் பரிமாறப்பட்ட இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு ஒற்றுமையை உருவாக்கும் வழிகள் பல கடுமையாக ஆராயப்பட்டது .

அதே கூட்டத்தில் எனக்கு நன்றாக அறியப்பட்ட, இலங்கை புலனாய்விற்கு வேலை செய்யும் ஒருவரும் காணப்பட்டார்.

இவர் என்னை கண்ட நிமிடத்திலிருந்து மௌனமாகி விட்டார். இதைவிட வேடிக்கை என்ன இருக்க முடியும்? யாவற்றையும் பார்த்து மனதிற்குள் சிரித்து கொண்டிருந்தேன் .

இதை தான் சொல்வார்கள் மாற்றப்படுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்களென. ஆங்கிலத்தில் கூறுவார்கள் (Conversation is an information) உரையாடல் என்பது ஓர் தகவல் பரிமாற்றம் .

பின்னணிகளை அறியாது தெரியாது, காத்தான் பூத்தான்களை கூட்டங்களிற்கு அழைப்பது, மிக ஆபாயம் நிறைந்த செயற்பாடு .

விசேடமாக இலங்கையில் இருந்து வருகை தரும் சிலரது செயற்படானது மிகவும் மோசமானது என்பதை பலர் அறியவில்லை போலும்.

இச் சம்பவம் நடைபெற்று சில நாட்களில், இலங்கையின் வெளிநாட்டு புலனாய்வின் தரகர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு, சந்திக்க வேண்டுமென கூறினார்கள் .

இவர்களது சிந்தனை நோக்கங்களை தெரிந்து கொண்ட காரணத்தினால் அவர்களை தவிர்த்து கொண்டேன். வாழ்க அவர்களது கபடமான பணி.

தமிழீழ விடுதலை போராட்டம் குறைந்தது முப்பது வருடங்களாக நடைபெற்ற வேளையில் இல்லாத அக்கறை, திடீரென சிலருக்கு விசேடமாக 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் எப்படியாக வர முடியும் என்ற கேள்விக்கு நாம் முதலில் விடை காண வேண்டும் .

இதேவேளை, தமிழீழ விடுதலைபோராட்டம் வீறுநடை போட்ட வேளையில், சர்வதேசத்தின் அளுத்தங்கள் புலம்பெயர்வாழ் தேசங்களில் ஏற்பட்ட பொழுது, அவற்றிற்கு துணை போன குழுவினரையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

புலம்பெயர் நவீன தலைவர்ககள் பத்து வருடங்களிற்கு முன்னர், முள்ளிவாய்க்கால் படுகொலைகளை, சிங்கள பௌத்த அரசு – சீனா இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் வெற்றிகாரமாக மேற்கொண்ட வேளையில், புலம்பெயர் வாழ் தேசங்களில் பாரீய அளவில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள், மேற்கு நாடுகளை திகில் கொள்ள வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது .

இதன் காரணமாக – புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் ஒற்றுமையாக நிகழ்ந்தால், தங்களிற்கு மாபெரும் இடைஞ்சல்கள் ஏற்படும் என சில நாடுகள் எண்ணும் காரணத்தினால், புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களிடையே ஒற்றுமை என்பது உருவாகதவாறு, பல செயற் திட்டங்களை இவ் நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

போராட்ட காலத்தில் முன்னிலை வகித்த செயற்பாட்டாளர் பலர், முள்ளிவாய்காலை தொடர்ந்து, ‘ பிச்சை வேண்டாம் நாயை பிடி ’ என்று கூறி, சுயநலத்தின் அடிப்படையில் தங்கள் குடும்பம் தங்கள் வேலையென ஒதுங்கியுள்ளனர் .

இதன் காரணமாக அன்று சாதரண வேலைகளை செய்து கொண்டிருந்த சிலர், நவீன தலைவர்களாக மாற்றம் பெற்றனர்.

இவர்கள் ஒரு பொழுதும் ஒற்றுமை விரும்பியவர்கள் அல்ல. காரணம், யாவரும் முன்பு போல் ஒற்றுமையானால், தமது செயற்பாட்டிற்கும் தகுதிக்கும் மேலாக தமக்கு கிடைத்த பதவிகள் தலைமைத்துவம் பறிபோய் விடலாம் என்ற தாள்வு மனப்பான்மை இவர்களை குடி கொண்டுள்ளது .

உதாரணத்திற்கு – சில நிகழ்வுகளில் எனது பங்களிப்பை கண்டு பீதி கொள்ளும் சில நவீன தலைவர்களதும், அண்மைகால செயற்பாட்டாளர்களதும் நடவடிக்கைகளை நேரில் கண்டுள்ளேன் .

இது நிட்சயம் ஓர் இனத்திற்கான பங்களிப்பாக யாரும் கொள்ள முடியாது . இவை – சுயநலத்தின் அடிப்படையில் தமது குடும்பம், தமது உறவினர், தமது பதவி, தமக்கு பணம் என்ற அடிப்படையில், அவர்களால் மேற்கொள்ளப்படும் வேலை திட்டம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை .

இதில் இன்னுமொரு பிரிவினர், போராட்ட காலத்தில் 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை போராட்டத்திற்கு செய்த சில மோசடிகளிற்காக, விடுதலை போராட்டத்தின் முன்னோடிகளினால் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் .

இவர்கள் தற்பொழுது சரித்திரம் அறியாதவர்களுடன் உறவுகளை மேற்கொண்டு, தாம் விடுதலை போராட்டத்திற்கு செய்துள்ள துரோகத்திற்கு, “ ஞானஸ் ஞானம் ” பெற முயற்சிப்பதுடன், தமது பிழைப்பிற்கான தகவல்களையும் சேகரித்து கொள்கின்றனர் .

இவற்றை அனுமதிப்போர், விடுதலை போராட்டத்தின் முன்னொடிகளிற்கு தாம் செய்யும் , தூரோகம் என்பதை உணர வேண்டும் .

ஆனால் ஒன்று – இவர்கள் அவர்களையும், அவர்கள் இவர்களையும் திட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தகவல் சேகரிப்பு யாவரும் அறிய வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், புலனாய்வு அமைப்புகளிற்கு தகவல் சேர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை, நீங்கள் எவ்வளவு தூரம் எட்ட வைத்தாலும், துரத்தினாலும், அவர்கள் தொடர்ந்து உங்களை சுற்றியே வந்து கொண்டிருப்பார்கள் என்பதே யாதார்த்தம் .

இதில் நகைப்பிற்கு வேடிக்கைகுரிய விடயம் என்னவெனில், 2006ஆம் ஆண்டின் பின்னர் விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்ததாக கூறும் முன்னைய இளைஞர் எனப்படுவோர், சரித்திரங்களை அறியாது ஆராயாது, தாம் தான் புலம் பெயர் தேசத்தில் விடுதலை போராட்டத்தை கட்டி எழுப்பியது போல் ‘ கிணற்று தவளையாக ’ புலம்புகின்றனர்!

இப்படியான எண்ணம் உள்ளோர், காலப்போக்கில் விடுதலை போராட்டத்தின் முன்னோடிகளையும் விமர்ச்சிக்க கூடியவர்கள்.

விடுதலை போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஒரு ஓட்டுக்குழுவின் தலைவரான, முன்னாள் தமிழ் அமைச்சரின் வலது கையாளக விளங்கும், புலம் பெயர் தேசத்தில் உள்ள ஒரு தனி நபரை, இவர்கள் கதாநாயகர் ஆக்குவதன் நோக்கம் என்ன? இங்கும் ஒநாய்களின் நடமாட்டம் உள்ளது !

அன்று தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பலம் சேர்ப்பதற்காக போராட்டத்தின் நிதிகளில் ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்கள், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், தனி நபர் தாக்குதலிற்காக பாவிக்கபடுவதன் மர்மம் என்ன என்பதை யாவரும் சிந்திக்க வேண்டும் .

இவை விடுதலை போராட்டத்தை மாசு படுத்துவதையும், தனிநபர் ஊடகமாக மாற்றம் அடைவதைவதையும் எதிர்த்து – இனத்தை மக்களை, விடுதலையை நேசிக்கும் சகலரும் கிளர்ந்து எழ வேண்டும்.

இவ் ஊடகங்களின் கணக்கு வழக்குகள், லாப, நஷ்டங்களை உரியவர்கள் பொதுமக்களிற்கு காண்பிக்க தவறும் பட்சத்தில், இவ் ஊடகங்களிற்கு நேரடியகவோ மறைமுகமாகவோ நிதி கொடுப்பவர்களை, பொதுமக்கள் சந்தித்து உரையாட வேண்டும்.

சுருக்கமாக கூறுவதனால் – இவ் ஊடகங்கள் கைமாறாது, தமது தனிநபர் இருப்புக்களை சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் நிலைத்து கொள்வதற்காக, ஊடகத்தின் நோக்கத்தை திசை திருப்புகின்றனர் ‘கோடரி காம்புகள் .

தனிநபர்களை தாக்குவதன் மூலம், மக்களை திசை திருப்ப முடியாது என்பதை, ஊடக தர்மம் தெரியாது ஊடகத்தை கையாளுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

“ யானை தன் கையால் தனக்கு மண்ணை போட்டது போல் ” தங்களை தாங்களே நீதிமன்றங்கள் செல்லும் நிலைக்கு தள்ளுவது வியப்பிற்குரியதல்ல .

நவீனா தலைவராக நடிக்க ஆரம்பித்தால் நீதி மன்றம் அல்ல மாமியார் வீடும் செல்ல தயாராக இருப்பார்களென நம்புகிறேன்.

“ குதிரையின் குணம் அறிந்து தான் குதிரைக்கு கொம்பு கொடுக்கபடவில்லை” . இவர்களது ஊடக கொள்கை என்பது ‘ எனக்கு மூக்கு போனாலும் பறவாயில்லை, எமது திட்டங்களை அறிந்தவர்களிற்கு சகுனம் பிழைத்தால் சரி .

பாதிக்கபடப்போபவர் பதிவில் உள்ளவர் என்பதை அவர் அறிவாரா ? எவ்வளவு காலத்திற்கு மற்றவர்கள் மீது சவாரி செய்ய போகிறார்கள் ? மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில், தமிழீழ மக்களிடையே நிலவிய ஒற்றுமை பறிபோனதற்கும், இனிமெலும் ஒன்றுபட முடியாமல் உள்ளதற்கு முக்கிய காரணிகள் :

ஒன்று – சிங்கள பௌத்த அரசுகளின் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து இயங்கும் ஒநாய்களும்,

இரண்டு – தாள்வு மனப்பான்மை கொண்ட நவீன தலைவர்களும், சில அண்மைகால செயற்பாட்டாளர்களும் மூன்று முன்னோடிகளினால் ஒதுக்கி வைக்கப்பட்ட இரட்டை நாக்கு, இரட்டை வேடம் கொண்ட கலகக்காரர்களும், சில வெளிநாடுகளும் தமிழீழ மக்களிடையே ஒற்றுமை உருவாக நிட்சயம் அனுமதிக்க போவதில்லை .

இவ் வேலை திட்டத்திற்கு, சிங்கள பௌத்த அரசுகள் பெரும் தொகையான நிதியை ஒதுக்கியுள்ளனர் என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் .

நாட்டிலும், அங்கு உள்ள ஓநாய்களினால் மேற்கொள்ளப்படும் பாரீய திட்டங்களினால், மக்களிடையேயான ஒற்றுமை சிதைக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவார்கள்.

இதற்கான பாரிய பங்கை, சில ஊடக விசமிகளும், மக்களால் தெரிவு செய்யப்படாத அரசியல் விசமிகளும் முக்கிய காரணகர்த்தாக்கள் என்பதை மக்களுக்கு தெரியவரும் காலம் துரத்தில் இல்லை

எழுத்தாளர் S.V KirubaharanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *