மலேசியாவில் தேடுதல் வேட்டை: அகதிகள் உள்பட 36 வெளிநாட்டினர் கைது


மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் இரு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஐ.நா.அகதிகள் அடையாள அட்டையைக் கொண்ட அகதிகள் உள்ளிட்ட 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மசாஜ் பார்லரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், மியான்மரைச் சேர்ந்த 14 பேர், மற்றும் ஒரு பிலிப்பைனியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ஐ.நா.வழங்கியுள்ள அகதிகள் அடையாள அட்டைகளை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவது கடும் குற்றமாகும். தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் அகதி அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி குடிவரவுத்துறை பரிந்துரைக்கும்,” எனக் கூறியுள்ளார் குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத்.

ஐ.நா.வின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத நாடாக மலேசியா இருந்து வருகின்றது. இதனால் சர்வதேச அளவில் அகதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் மலேசியாவில் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதே போல், அகதிகள் சட்டரீதியாக மலேசியாவில் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், பல அகதிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சட்டவிரோதமாக பணியாற்றி வரும் நிலை அங்கு இருந்து வருகின்றது.

மலேசிய குடிவரவுத்துறை நடத்திய மற்றொரு தேடுதல் வேட்டையில் 21 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வியாட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் முறையான விசாயின்றி மலேசியாவில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *