யுத்தத்தினால் தாய் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் ரணில் அழைப்பு!


 

இலங்கையில் இடப்பெற்ற யுத்தத்தினால் தாய் நாட்டில் இருந்து வெளி நாடுகளுக்கு சென்ற அனைவரும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமருடனான வாய்மூல கேள்வி நேரத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த யுத்தக்காலத்தில் நாட்டில் இருந்து வெளி நாடுகளுக்கு சென்றவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும்.

அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தமிழகத்தில் யுத்த காரணத்தால் அகதிகளாக உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, அவர்களது உடமைகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இந்திய அரசாங்கம் கடல்வழி போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளது.

தமிழக முகாம்களில் வாழும் ஈழ அகதிகள் 3 ஆயிரத்து 815 பேர் நாடு திரும்ப விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளக்கான முகவரகத்தின் அனுசரனையின் கீழ் இதுவரை 9 ஆயிரத்து 509 ஈழ அகதிகள் நாடு திரும்பியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், தமிழகத்தில் இருந்து நாடு திரும்புகின்றவர்களின் உடமைகளை கொண்டு வருவதாற்கான கடல்வழி போக்குவரத்துக்கான நிதியை அவுஸ்திரேலியாவின் ஊடாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு வழங்கவிருந்தது.

எனினும் இந்தியா கடல்வழி போக்குவரத்துக்கான ஒழுங்குகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா வழங்கத் தயாராக உள்ள நிதியை, நாடு திரும்புகின்ற அகதிகளின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை வெளிவிவகார அமைச்சின் ஊடாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு திரும்புகின்றவர்களுக்கான வாழ்வாதார கொடுப்பனவுகள், வீடு மற்றும் உடமைகளுக்கான மாதாந்த கொடுப்பனவு என்பன மீள்குடியேற்றத்துறை அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தமிழ்நாட்டில் பிறக்கின்ற இலங்கை ஏதிலிகளின் குழந்தைகளுக்கு, அங்குள்ள துணைத்தூதரகத்தின் ஊடாக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தூதரகத்துடனான பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான நிதி வளம் இல்லாத ஈழ அகதிகளின் நலன் கருதி, விசேட வர்த்தமானியின் ஊடாக குறித்த தூதரக கட்டணம் இல்லாது செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தமது பதிலில் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப விரும்புகின்ற அகதிகள் விடயத்தில் ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் தலைமையில், மீள்குடியேற்றத்துறை அமைச்சு, கடற்படை, காவற்துறை, பதிவாளர் திணைக்களம் மற்றும் குடிவரவுத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்துக்கு மேலதிமாக, இன்னும் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் ஒன்றுக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *