2020 மனித உரிமை அறிக்கையின் படி ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான அகதிகள் சிக்கியுள்ளனர்.


ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயலும் அகதிகளை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்த மாட்டோம் என்னும் நிலைப்பாட்டில் அந்நாட்டு அரசு தொடர்ந்து உறுதியாக இருந்து வருவதை மனித உரிமை கண்காணிப்பகத்தின் 2020 உலக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறையின் மூலம் படகு வழியாக வர முயன்ற அகதிகள் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ‘பப்பு நியூ கினியா மற்றும் நவுரு’ ஆகிய தீவு நாடுகளில் சிறைப்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, இத்தீவுகளில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் படி, 600க்கும் மேற்பட்ட அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்கிறது இந்த மனித உரிமை அறிக்கை.

2013ம் ஆண்டு முதல் இதுவரை, தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 12 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே போல், 2019 ஆஸ்திரேலிய தேர்தலின் போது அகதிகள் உடலை வருத்திக் கொண்டதும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதும் அதிகரித்து காணப்பட்டதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் அமைந்திருக்கும் தீவுகளில், அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு தேவையான சிகிச்சையை வழங்குவதற்கான வசதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளின் மருத்துவ தேவைக்காக கொண்டு வரப்பட்ட மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் மூலம், 135 அகதிகள் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற முகாமிலிருந்து மாற்றப்பட்டுள்ளனர். இந்த சூழலில், கடந்த டிசம்பர் மாதம் இச்சட்டத்தை ஆளும் அரச நீக்கியுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்ட அகதிகள் நிரந்தர விசா வழங்கப்படாத நிலையில் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை மீள்குடியேற்றவதற்கு நியூசிலாந்து அளிக்கும் சலுகையை ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இம்முகாம்களில் நீடித்து வரும் நிச்சயத்தன்மையற்ற நிலை, மேலும் பல அகதிகளை பாதிக்கும் என்கிறார் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் மனநல பேராசிரியர் நிக்கோலஸ் ப்ரோக்டர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *