8 வருடத்தில் 2724 முறை நிலநடுக்கம்… ஓக்லஹோமாவின் இந்த நிலைக்குக் காரணம் என்ன?


ங்கள் ஊரில் வருடத்திற்கு இத்தனை முறை மழை பெய்தது என்று கூறுவது வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால், இத்தனை முறை நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதைக் கணக்கிட்டு கூறுவது வலி மிகுந்த ஒன்றுதானே? அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான ஓக்லஹோமாவின் மக்கள் அந்தப் பரிதாப நிலையில்தான் தற்போது இருக்கின்றார்கள். பரந்து விரிந்த சமவெளிகள், மலைகள், ஏரிகள், காடுகள் என இயற்கையின் அத்தனை சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியது ஓக்லஹோமா. ஆனால், இந்த வருடம் (2018) ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிவதற்குள் அங்கே இதுவரை 62 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலும் இது ரிக்டர் அளவில் 3.0 என்றே பதிவான சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் என்றாலும், ஓக்லஹோமாவின் மேற்பரப்பைச் சற்று அதிகமாகவே பாதித்து இருக்கிறது. அது மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களின் மனதில் பயத்தையும், அங்குள்ள வர்த்தகத்தை கணிசமான அளவு பாதித்தும் ஓர் அரக்கனாக உருவெடுத்து இருக்கிறது இந்த நிலநடுக்கப் பிரச்னை.

ஓக்லஹோமா எண்ணெய் கிணறு

கடந்த 2010-ம் ஆண்டிலிருந்தே தொடங்கிய இந்தப் பிரச்னை, மூன்று வருடங்களுக்கு முன், அதாவது 2015-ம் ஆண்டில் அதன் உச்சத்தில் இருந்தது. அந்த வருடம் மட்டும், 903 நில அதிர்வுகள், எல்லாம் ரிக்டர் அளவில் 3.0-திற்கும் மேல் என்கிறது வரலாறு. 2009-ம் ஆண்டு வரை, ஒருமுறை அல்லது இரண்டு முறை நிலநடுக்கம் வருவதே பெரிய விஷயம் என்று இருந்த ஓக்லஹோமாவில் இன்று இப்படியொரு நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம்?

ஓக்லஹோமாவின் அஸ்திவாரம் ஆட்டம் காண்பதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, உள்ளே அங்கேயும் இங்கேயும் அலைபாயும் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள்தான். ஆனால், எந்த ஒரு செயலும் காரணி இல்லாமல் நடந்துவிடுமா என்ன? இப்படி ஏற்பட என்ன காரணம் என்று அந்த மாநில புவியியல் ஆராய்ச்சிக் குழு ஆராய்ந்தபோது ஓர் அதிர்ச்சி தகவல் வெளியே வந்துள்ளது. அங்கே இருக்கும் பெரும்பாலான வியாபாரிகள் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை தங்கள் கிணறுகள் நோக்கி இழுத்து வர ஓர் ஆபத்தான முறையைக் கையாளுகின்றனர்.

அதன்படி, உள்ளிருக்கும் பாறைகள் விரிசல் அடையும்போது அதனுள் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் வெளியேறும். அவ்வகை விரிசல்களைச் செயற்கையாகவும், அதே சமயம் அதிகப்படியாகவும் ஏற்படுத்த அந்தப் பாறைகளின் மீது கழிவு நீரைப் பாய்ச்சுவார்கள். இதை ஆங்கிலத்தில் fracking என்று அழைப்பார்கள். இதனால், கழிவு நீரில் இருக்கும் ரசாயனங்கள், அந்தப் பாறைகள் மீது வினைப்புரிந்து விரிசல்களை ஏற்படுத்துகின்றன. உடனே எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் அதிலிருந்து வெளியேறி அருகில் இருக்கும் கிணற்றுக்குள் தஞ்சம் புகுந்து விடும். அதை வியாபாரிகள் எடுத்துப் பயன்படுத்தி கொள்வார்கள்.

எண்ணெய் கிணறு, நிலநடுக்கம்

இந்த உண்மையைக் கண்டறிந்த பின்பு அத்தகைய செயல்களை குறைத்துள்ளனர். அதன் பின்னரே நில அதிர்வுகளின் எண்ணிக்கை சற்றே குறைந்து உள்ளது. இருந்தும், அவ்வப்போது குறைவான அளவு நிலநடுக்கங்கள் எட்டிபார்த்து கொண்டுதான் இருக்கின்றன. அதிகபட்சமாக, கடந்த செப்டம்பர் 2016-ம் ஆண்டு, பாணீ (Pawnee) என்ற நகரில், ரிக்டர் அளவில் 5.8 என்று பதிவாகியுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இயற்கை வளத்தை அதிகமாக உறிஞ்ச பல்வேறு செயற்கை முறைகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்றான பெருந்துளைகள் ஏற்படுத்தி உறிஞ்சும் பணியின்போது. சில சமயங்களில் நிலத்தடி நீர், கழிவு நீராக மாறி மேலே வரும். அப்படி வரும் நீரை அந்த நிறுவனங்கள், மீண்டும் நிலத்தடியில் இருக்கும் பாறைகளை நோக்கிப் பாய்ச்சுகின்றனர். இதனால் அவற்றில் விரிசல் ஏற்பட்டு உள்ளேயிருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் வெளியேற்றப்படுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இதில் பிரச்னை இல்லையென்றுதான் தோன்றும். ஆனால், இதனால் எதிர்காலத்தில் நிறைய பிரச்னைகள் ஏற்படும்.

ஓக்லஹோமாவின் இன்றைய நிலைக்குக் காரணமே, 2004 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிகமான அளவு கழிவு நீரை உள்ளே செலுத்தியதுதான். இது இப்போதிருக்கும் நிலையைவிட இரண்டு மடங்கு கழிவு நீர்! இவர்கள் செலுத்தும் இந்தக் கழிவு நீர் சென்றடையும் பாறைகள், சரியாக அடிமட்டத்தில் இருக்கும் கிரானைட் பாறைகளின் மேலே உட்கார்ந்துள்ளன. உள்ளே செலுத்தப்படும் கழிவு நீரானது அந்தக் கிரானைட் பாறைகள் வரை செல்லும் திறன் கொண்டது. அப்படி அது உள்ளே செல்லும்போது, அங்கிருக்கும் பிளவுகளையும் தொடுகிறது. அவ்வகை அடிமட்டப் பாறைகளை சேர்த்துப் பிடித்திருக்கும் அழுத்தம் இந்தக் கழிவு நீரால் குறைந்து போகிறது. இதனால் அந்த அடிமட்டப் பாறைகள் நகர, நிலநடுக்கமாக அது உருமாறுகிறது.

அங்கிருக்கும் ஆய்வாளர்கள் பலர், தற்போது இந்தக் கழிவு நீரை உள்ளே செலுத்துவது குறைந்து விட்டதாகவும், தற்போது ஏற்படும் சிறு சிறு அதிர்வுகள், முன்னர் செய்த காரியங்களின் எதிரொலி என்றே கருதுகின்றனர். அதே சமயம் வேறு சில ஆய்வுகள், இந்த அதிர்வுகளுக்குக் கழிவு நீர் மட்டுமின்றி, வெட்டப்படும் கிணறுகளும் ஒரு காரணம்தான் என்று கூறுகின்றன. பெரும் ஆழத்திற்கு தோண்டப்படும் இந்தக் கிணறுகள், அடிமட்டப் பாறைகளை நிச்சயம் சீண்டுகின்றன. அதனாலே நில அதிர்வுகள் ஏற்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, பல்வேறு சட்டதிட்ட மாற்றங்களுக்குப் பிறகு, தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஓக்லஹோமாவில் இருந்து பின்வாங்கிவிட்டன. இனி அந்த மாகாணம் மீண்டு எழும் என்று நம்பலாம்.

 

நன்றி : ர.சீனிவாசன் | விகடன்

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *