இரணிலின் வடக்கு விஜயமும் அனல் பறக்கும் சம்பூர் விவகாரமும் | இதயச்சந்திரன்


இடைக்காலப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வடமாகாண விஜயம் குறித்தும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுடன் பிரதமர் நடாத்தும் பனிப்போர் குறித்தும் பரவலாகப்பேசப்படுகிறது.

முதல்வர் நிறைவேற்றிய ‘இன அழிப்பு’ தீர்மானம், பேரினவாத சிங்களத்தின் உளவியல் மீது ஏற்படுத்திய கடும் தாக்கத்தின் எதிர்வினையாற்றலாக, ரணிலின் வடபகுதி சுற்றுலாக்களைப் பார்க்கலாம்.

இலங்கையின் பிரதமர் என்கிற வகையில் இவர் மேற்கொள்ளும் மக்கள் சந்திப்புக்கள், அரச நிறுவன ஊழியர்கள் உடனான உரையாடல்கள் யாவும், வடக்கில் இரு அரசுகள் செயற்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

அரச யந்திரத்தின் இராணுவப்பிரிவுகளும், சிவில் நிர்வாக காவல்துறையும் இணைந்து பிரதமர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களின் பின்னால் வாக்களித்த மக்கள் திரண்டு நிற்கின்றனர்.

இராணுவத்தினர் தங்களை அச்சுறுத்துவதாக, ‘புனர்வாழ்வு(?) அளிக்கப்பட்ட விடுதலைப்புலி போராளிகள் கூறுவது பொய்’ என்று  இராணுவம் கூறுவதை, இரணில் ஏற்றுக்கொள்கிறார். அதேவேளை வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி மக்களின் இயல்பு வாழ்வினை மீளுறுதி செய்ய வேண்டுமென விக்கினேஸ்வரன் வலியுறுத்துவதை, இரணிலும் இந்திய ஊடகர் நாராயணனும் புலிகளின் மீட்சிக்கான பாதை என்கிறார்கள்.

இராணுவத்தை அகற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்கிற முதல்வரின் நிலைப்பாடே, இம்முரண் நிலை உருவாக்கத்தின் பிரதான காரணியாகிறது.

6500 ஏக்கர் 1100 ஆகி, பின்னர் 400  ஆக மாறும் விந்தை, முதலமைச்சருக்கு சலிப்பினை ஏற்படுத்துகிறது.

இராணுவத்தை அகற்றாமல் அரசியல் செய்ய வேண்டுமாயின் முதலமைச்சரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். அதைத்தான் இரணில் செய்கிறார்.

அதேவேளை நேரில் சந்தித்தால், 13 இல் இருக்கும் குறைந்தபட்ச காணி உரிமையையும் கேட்டு தன்னை அரசியல் இக்கட்டுக்குள் முதல்வர் தள்ளிவிடுவார் என்கிற அச்சமும் ஒரு காரணமாக இருக்கும்.

அரசியல் கைதிகள் விடயம் குறித்து முதல்வர் பேசும்போது, இரகசிய இராணுவ முகாம்கள் இல்லை என்று பிளேட்டைத் திருப்பிப்போட முயற்சிக்கிறார் பிரதமர்.

ஆனால் திருக்கோணமலை கடற்படை முகாம், கோட்டை இராணுவ முகாம் மற்றும் வன்னியிலுள்ள பல முகாம்களில், 2009 இல் சரணடைந்தவர்களும், இடையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்டவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜே.டி.எஸ் (JDS)என்ற சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு கடந்த செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவற்றிக்கு அப்பால் இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்,

‘இன அழிப்பு’ தீர்மானத்தை நிறைவேற்றினால் ‘அது புலிகளின் குரல்’.

‘ நாட்டில் இரு தேசங்கள் (nations) வாழ்கின்றன’ என்று கூறினால், அது புலிகளின் அரசியல்.

‘ இராணுவத்தை வெளியேற்று, அபகரிக்கப்பட்ட நிலங்களை திருப்பிக்கொடு ‘ என்று போராடினால் அது புலிகளின் போராட்டம்.

மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்போது , அது விடுதலைப்புலிகளின் குரலாக சிங்களத்திற்கும், சில தமிழ் தலைவர்களுக்கும் தென்படுகிறது.  எதன் அடிப்படையில் அதனை நிராகரிக்கின்றார்கள் என்றாவது அம் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

திருக்கோணமலையில் நடந்த சந்திப்பொன்றில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள், ‘இரு தேசங்கள்’ என்று கூறுவதன் ஊடாக இனவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றார் என்று இரா.சம்பந்தன் அவர்கள் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பந்தன் அவர்களின் இக்கூற்று, தாயக- புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான விவாதக் களமொன்றினை தோற்றுவித்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

Nation (தேசம்) இற்கும், State இற்கும் உள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியும்.

இங்கு ஒரு பூர்வீக தேசிய இனத்தின் ‘இறைமை’ ( sovereignty) என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.

இறைமையுள்ள இரண்டு தேசங்கள் இணைந்த கூட்டாட்சி அமைவதையே கஜன் குறிப்பிடுகின்றார். இங்கு முக்கியமான விவகாரம், தமிழ் தேசத்தின் இறைமையை அங்கீகரிப்பது என்பதாகும்.

திம்புவின் முதல் மூன்று கோட்பாடுகளும் ( தாயகம்,தேசியம்,தன்னாட்சி) தேசிய இனத்தின் இறைமையை வலியுறுத்துகிறது.

இந்நிலையில், முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமைக்கு ‘சவால்’ விடக்கூடாதென்பதா சம்பந்தர் அவர்களின் அரசியல் நிலைப்பாடு?.

எமது அடிப்படை உரிமைக் கோட்பாட்டினை முன்வைக்கும்போது அது எவ்வாறு இனவாதக் கருத்தியலாக உணரப்படும்?.

ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு, உரிமை கோரும் தமிழ் பேசும் மக்கள் இனவாதிகளாகத்  தென்படுவது ஆச்சரியமல்ல.

ஆனால் அவர்கள் ( சிங்களம்)அப்படி நினைத்துவிடுவார்கள் என்பதால், அது பற்றி பேசாமல் தவிர்ப்பதைச் சரியென்று நினைத்தால், இந்நிலைப்பாடானது மக்களின் அரசியல் அபிலாசைகளை,  அவர்களின் பிறப்புரிமையான இறைமையை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்.

இவைதவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டி தீர்வில், ‘தமிழ் தேசத்தின் இறைமை’ உள்ளடக்கப்பட்டிருக்கிறதா? சிங்கள இறைமையின் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்பதுதானா அதன் உள்ளீடு?என்பதையும் கூட்டமைப்பின் அரசியல் பீடம் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

 

இதெல்லாம் பெரிய ROCKET science இல்லை. இதைப் புரிந்துதான் ஆயிரமாயிரம் மண்ணின் புதல்வர்கள் தமதுயிரை ஈகம் செய்துள்ளார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், federal system என்பது இறைமையுள்ள இரு தேசங்கள் இணைந்த கூட்டாட்சி. அதாவது ஒரு நாட்டிற்குள் இரு தனித்துவமான தேசங்கள் இணைந்த கூட்டாட்சி என்பதையே கஜன் குறிப்பிடுகின்றார் என நினைக்கின்றேன்.

மீண்டும், ரணில்- விக்கி பனிப்போர் குறித்து நோக்கினால், ரணிலோடும் சந்திரிக்காவோடும் இணக்க அரசியல் செய்ய  விரும்பும் சில தமிழ் தலைமைகள், குறைந்தபட்சம் முதல்வர் விக்கினேஸ்வரனின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்  என்பது தெளிவாகிறது.

மாறாக, ‘ நீக்கி விடுவோம் ‘ என முதல்வரை அச்சுறுத்தும் செய்திகள் அவ்வளவு ஆரோக்கியமான அரசியல் போல் தென்படவில்லை.

அதேபோல, பிரயோசனமற்ற வகையில் இந்தியாவிற்கு முண்டு கொடுப்பதற்கும், சந்திரிகா தலைமையில் உருவாகும்  ஆணைக்குழு தீர்வினை வழங்குமென மக்களிடையே நம்பிக்கை ஊட்டுவதற்கும் பெரிய வேறுபாடில்லை  போல் தெரிகிறது.

400 மில்லியன் டொலருக்கு இந்தியா currency swap செய்யும்போது, அந்த நெருங்கிவரும் இந்திய-இலங்கை உறவைக் கெடுக்கும் வகையில், ஏன் சம உரிமைகள் பற்றி பேசுகிறீர்கள்? என்று சிலர் இந்தியா சார்பாகப் பேசலாம்.

ஆனால் இவர்கள் எப்போதுமே ஒடுக்கப்படும் மக்கள் சார்பாகப் பேசுவதில்லை என்பதனை இங்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

இந்த வல்லரசுகளின் தரகர்கள், அழிப்பவனின் நலன் சார்ந்து செயற்படுவதோடு சரணாகதி அரசியலுக்கு நியாயம் கற்பிக்கும் பிதாமகர்களாகவும் இருப்பார்கள்.

இலங்கையை தனது பிடிக்குள் வளைத்துப்போட இந்திய தேசமானது எல்லாவிதமான அணுகுமுறைகளையும் மேற்கொள்ளும் என்பது பூகோள அரசியலின் அடிப்படையைப் புரிந்து கொள்பவர்களுக்குத் தெரியும்.

இந்த இந்திய- இலங்கை வர்த்தக மற்றும் மூல கேந்திரோபாய உறவுக்குள் நம்மவர்கள் தலையைப் புகுத்தி ஆகப்போவது என்ன?. இவர்கள் என்னதான் சீனாவிற்கு எதிரான முழக்கங்களை வைத்தாலும், ‘இவர்கள் நம்ம ஆட்கள்’ என்று முடிவெடுத்து இலங்கை அரசின் மீது இந்தியா அழுத்தம் கொடுக்கப்போவதில்லை.

ஈராக் போரின் போது, ‘ நீங்கள் அந்தப்பக்கமா? இல்லை இந்தப்பக்கமா?’ என்று கேட்டு தனது நேசநாடுகளையே  திக்குமுக்காடச் செய்த ஜோர்ஜ் புஷ் போலத்தான், தமிழ் தேசக்கூட்டமைப்பை நோக்கி ‘நீங்கள் என்னை நம்புகிறீர்களா?  இல்லையா? என்று நரேந்திர மோடி கேட்கிறார்.

‘இன அழிப்பு’, ‘சர்வதேச சுயாதீன விசாரணை’, ‘இராணுவத்தை வெளியேற்றல்’, ‘தமிழ் தேசம்’, ‘ சுயநிர்ணய உரிமை’ போன்ற சொல்லாடல்களைக் கேட்டால் சிங்களம் கொதிப்படையும் என்பதால், அவற்றை முன்னிலைப்படுத்தும் தமிழர் தரப்பின் மீது இந்தியாவிற்கு வெறுப்பு ஏற்படுகிறது. வடஇந்திய ஊடகர் பலரின் கட்டுரைகள் இதற்கமைவாகவே எழுதப்படுகிறது.

இவைதவிர,  இந்திய அரசிற்கும் வடமாகாண சபைக்கும் இடையே உருவாகியுள்ள முறுகல் நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள, அரச தரப்பொன்று முயற்சி செய்வதை யாழில் காணக்கூடியதாக இருக்கிறது.

முரண்பாடுகளை அவதானிப்பதும், அதனுள் இறங்கி அந்த இருதுருவ நிலையினை சிங்களம் ஆழப்படுத்துவதும் கடந்தகால இலங்கை வரலாற்றில் கண்ட யதார்த்தங்கள்.

கிழக்கு மாகாணசபையைப் பொறுத்தவரை, அண்மைக்கால இழுபறி நிலை தணிந்து கூட்டமைப்பிற்கும் அமைச்சுப் பதவிகள் கிடைத்து விட்டது. ஆனால் மீள்குடியேற்றம் நடைபெறாமல் புறக்கணிக்கப்படும் ஒரு மாகாணமாக கிழக்கு உள்ளது என்கிற ஆதங்கத்தை அடிக்கடி வலியுறுத்தியபடியுள்ளார் நா.உ. அரியநேந்திரன்.

சம்பூர் அனல்மின் நிலைய விவகாரத்தில் கூட்டமைப்பின் மேல்மட்டம் மௌன விரதத்தைக் கடைப்பிடிக்கிறது.

ஏற்கனவே மலடாக்கப்பட்ட நிலத்தை மேலும் சிதைக்கும்வகையில் சம்பூர் அனல் மின்நிலையம் அமைவது, இங்கு  வாழும் எதிர்காலச் சந்ததிகளைப் பாதிக்குமென பசுமை திருக்கோணமலை (Green Trincomalee) அமைப்பின் செயற்பாட்டாளர் கோபன் அவர்கள் ஒரு வானொலி நேர்காணலில் குறிப்பிடுவதை நோக்க வேண்டும்.

ஒட்டு மொத்தமாக 4 அனல் மின் நிலையங்களை  நிறுவப்போகிறார்கள்

இதிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், திருக்கோணமலை நகர்ப்புறமும் சுற்றாடலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மலையகமெங்கும் பரவி, மகிந்தரின் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் தொட்டுவிடும்.

கார்பரேட் முதலாளிகளுக்கு, சுற்றுப்புறச் சூழல் மாசடைவதால் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும் என்பது குறித்தான அக்கறை இருக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. இலாபத்தை மட்டுமே எதிர்பார்த்து, தமது முதலீடுகளை நகர்த்தும் கார்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?.

இந்திய நாகலாந்து, மணிப்பூரில் நிலக்கரிச் சுரங்க உற்பத்தி ஆரம்பித்துள்ள செய்தியோடு, சம்பூர் ( புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் இவ்வூரை ‘சாம்பூர்’ என்கிறார்) அனல்மின் நிலைய நிர்மாணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் , கார்பொரேட்களின் விரிவான வணிக நோக்கம் புரியும்.

மேற்குலகமே தனது நிலக்கரி உற்பத்தியை நிறுத்திய நிலையில், தமது நிலக்கரி உற்பத்திகளை சிறிய வறிய நாடுகளின் தலை மீது சுமத்த இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் அனல் மின் நிலையங்களைத் தேடுகின்றது.  அதாவது அனல் மின் நிலையமானது இந்திய கார்பொரேட் களின் நிலக்கரிச் சந்தையாக மாறுகிறது.

பசுமைத் திருக்கோணமலை அமைப்பு சொல்வது போன்று இம்மின்னிலையம் இயங்கினால், திருமலைக் கடல், நிலம்.. ஏன் வானமும் கூட மாசுபடும். கடல் வளங்கள், குறிப்பாக மீன்களின் இனவிருத்திக்கு உறுதுணையாக இருக்கும் கொட்டியாரப் பவளப்பாறைகள் அழிவுறும்.

 

மேலதிகமாக, உரச்சந்தையில் உலக ஜாம்பவனாக இருக்கும்  கனேடிய பன்னாட்டு நிறுவனமான Potash கார்பொரேசன் தயாரிக்கும் இரசாயன உரங்களால் மலடான திருமலை மண், நிரந்தர அழிவினை எதிர் கொள்ளும்.

இதனை எதிர்கொள்ளும் வகையில், என்னவிதமான எதிர்காலத்திட்டத்தினை திருக்கோணமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், அதன் தலைவர்களும், பிரதேசபைகளும், உள்ளூர் சிவில் சமூகத்தினரும் வைத்திருக்கிறார்கள் என்பதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இல்லையேல் இவ் அழிவிற்கு எதிராக, எதிர்காலச் சந்ததிகளின் பாதுகாப்பிற்காக, மக்கள் போராடும்போது ‘ நாம் அரசோடு பேசுகிறோம்’ என்கிற வழமையான கதையாடல்களை சொல்லாதிருக்க வேண்டும்.

 

 

– இதயச்சந்திரன்‏ –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *