அதிகம் இனிப்பு உட்கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்… தவிர்ப்பது எப்படி?


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வயது வித்தியாசமில்லாமல் ஈர்ப்பது இனிப்பு. இதைத் தெரிந்தே சேர்த்துக்கொள்வது இருக்கட்டும்; தெரியாமலேயேகூட நாம் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். `நான் இப்போல்லாம் சர்க்கரையை சேர்த்துக்குறது இல்லை’ என்று சொல்பவர்கள், முதலில் நம் அன்றாட உணவுகளோடு கலந்துவிட்டிருக்கும் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும். சாக்லேட், பிஸ்கட், ஐஸ் க்ரீம், ஜூஸ் வகைகள் என நாம் ஸ்நாக்ஸாக, ரெஃப்ரெஷ் செய்வதற்காக உட்கொள்ளும் அனைத்திலும் இனிப்பு கலந்திருக்கிறது.

உணவுகள் மற்றும் திண்பண்டங்களில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை பலரும் கவனிப்பதில்லை. `உடலில் சர்க்கரை அதிகமாவதால், பெரியவர்களைவிடக் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ‘சர்க்கரை சாப்பிட்டால், குழந்தை ஹைப்பர்-ஆக்டிவ் ஆகிடும்’, ‘சர்க்கரை சாப்பிட்டா சர்க்கரை நோய் வரும்’ என சில நம்பிக்கைகள் நம்மிடம் இருக்கின்றன. இவை எந்தளவுக்கு உண்மை, குழந்தைகள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் செல்வன் ரத்தினசாமியிடம் கேட்டோம்…

இனிப்பு

“சர்க்கரை, மூன்று வழிகளில் உடலுக்கு கிடைக்கிறது. இயற்கையாகவே பழங்கள், பால் போன்றவற்றிலிருந்து கிடைப்பது; வீட்டில் செய்யப்படும் இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள், உணவுகள் மூலம் கிடைப்பது; கடைகளில் வாங்கிச் சாப்பிடும் பிஸ்கட், சாக்லேட், ஐஸ் க்ரீம் போன்றவற்றிலிருந்து கிடைப்பது. உலக சுகாதார நிறுவனம், `ஒருவர் ஒருநாளைக்கு, 10 சதவீத கலோரிகளுக்கு மேல் இனிப்பு உட்கொள்ளக் கூடாது’ என்கிறது. அதாவது, ஐந்து டீஸ்பூன் சர்க்கரைதான் உட்கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் இது பொருந்தும் என்றாலும், வயதுக்கேற்ப மாறுபடலாம்.

குழந்தைகள் இனிப்பு உட்கொள்வது குறித்து பெற்றோரிடையேயிருக்கும் சில நம்பிக்கைகளும், உண்மைகளும் இங்கே…

இனிப்பு சாப்பிட்டால் குழந்தைகள் ஹைப்பர்ஆக்டிவாக இருப்பார்களா?

சர்க்கரை அதிகம் சாப்பிடும் குழந்தைகள், ஹைப்பர்-ஆக்டிவாக நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை சிலரிடையே உண்டு. இது, நேரடிக் காரணமாக இருக்காது என்றாலும், சர்க்கரை உடலில் ஏறற்படுத்தும் மாற்றத்தினால், குழந்தை துறுதுறவென ஹைப்பர்-ஆக்டிவாக நடந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் கொடுக்க நினைக்கும் இனிப்பு பொருளை, சரியான அளவு குறித்துவைத்துக்கொள்ளவும். இனிப்பை பொறுத்தவரை, அளவாகக் கொடுத்தால் எந்தக் கெடுதலும் இல்லை.

சர்க்கரை சாப்பிட்டால், சர்க்கரை வியாதி வருமா?

முதல் வகை சர்க்கரைநோய், இன்சுலின் அளவு குறைவாகச் சுரப்பதால் ஏற்படுவது; இதற்கும், இனிப்பு உட்கொள்வதற்கும் தொடர்பில்லை.

இரண்டாவது வகை சர்க்கரைநோய், மாவுச்சத்து அதிகமாக உட்கொள்வதன் காரணமாக ஏற்படக்கூடும். காரணம், சர்க்கரை அதிகமாக உடலில் சேரும்போது, கொழுப்பாக மாறும். உடலில் சேரும் அந்தக் கொழுப்புச்சத்து, உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்தும். உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்கு, வளர்சிதை மாற்றங்கள், சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள், உடலில் கெட்ட கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

 

இரவில் இனிப்பு சாப்பிடக் கூடாதா?

இரவில் உணவின் மூலமாக உட்கொள்ளும் கலோரியின் அளவுக்கு ஈடாக, தேவையான உடலுழைப்பு தரப்படுவதில்லை. எனவே, குழந்தைகளுக்கு காலையில் இனிப்பு வகைகளைக் கொடுப்பது நல்லது. இனிப்பின் மூலம் கிடைக்கும் கலோரிகள் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியை அந்த நேரத்தில் தரும். அளவுக்கு அதிகமான கலோரிகள் உடலில் சேர்ந்தால், உடல் எடை அதிகரிக்கும்.

இனிப்பு சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையென்றால், அதிலிருந்து பரவும் கிருமிகள் மூலம் பல் சொத்தை ஏற்படலாம். இரவில் இனிப்பு சாப்பிட்டுவிட்டு, தூங்கப்போனால், பல் பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதற்காகவும் இது சொல்லப்படுகிறது. காலை-இரவு இரண்டு வேளையும் பல் துலக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு சொல்லித் தந்தால், பிரச்னையில்லை.

பிறந்து சில வருடங்களுக்கு குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுப்பார்கள் சிலர். அப்படிக் கொடுக்கும்போது, இரவுவில் சில பெற்றோர்கள் பால் பாட்டிலோடு தூங்கிவிடும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். சர்க்கரை சேர்க்கப்பட்ட பாலை தூக்கத்திலும் வாயிலிருந்து எடுக்காத குழந்தைக்கு, அடுத்த சில வருடங்களிலேயே சொத்தைப் பல் ஏற்படும். இதை, `நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (Nursing bottle caries) எனச்சொல்லுவோம். பெற்றோர்கள் இதிலும் கவனமாக இருக்கவும்.

அதிக இனிப்பு உட்கொள்ளும் குழந்தைகளை அதிலிருந்து மீட்பது எப்படி?

* உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவும்.

* வெளியிலிருந்து வாங்கிவரும் தின்பண்டங்கள், ஸ்வீட்ஸ், ஐஸ் க்ரீம், சாக்லேட், பிஸ்கட், குறிப்பாக தயிர் ஆகிவற்றைத் தவிர்க்கவும்.

* பல வீடுகளில் பெற்றோர், குழந்தைகளைச் சாப்பிடவைப்பதற்காக, டி.வி., போன் போன்றவற்றைப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அந்த நேரத்தில் வரும் தின்பண்ட விளம்பரங்கள், தகவல்கள் குழந்தையின் மனதில் நஞ்சைத்தான் விதைக்கும். எனவே, அவற்றை குழந்தையிடமிருந்து தள்ளியே வைத்திருங்கள்.

குழந்தை பால்

*குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் ஸ்நாக்ஸின் லேபிளைப் பாருங்கள். அதிலுள்ள சர்க்கரை, கலோரி அளவுகளைத் தெரிந்துக்கொண்டு அதற்கேற்ற அளவில் கொடுக்கவும்.

* பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. அவற்றுக்கு பதில், வீட்டிலேயே பழச்சாறுகளை செய்து கொடுக்கலாம். பழமாகவே கொடுப்பது, கூடுதல் நலல்து. இனிப்பு தின்பண்டங்களை விரும்பும் குழந்தைகளுக்கு, வீட்டிலேயே பலகாரம் செய்து கொடுக்கலாம்.

* பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்கிறார் செல்வன் ரத்தனசாமி.

 

நன்றி : ஜே.நிவேதா | ஆனந்தவிகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *