ஆல்கஹாலும் கேன்சர்தான்!


மது… மயக்கம் என்ன ?

 

புகையிலைப் பொருள் நிறுவனங்கள் மட்டுமல்ல… மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களின் சிறந்த வாடிக்கையாளர்களைக் கொன்று விடுகின்றன!குடிகேடுகள் பற்றி எத்தனையோ விஷயங்களை நாம் அறிவோம். எனினும், அதையும் தாண்டிய அதிர்ச்சியை அளிக்கிறது நியூசிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு.

அதாவது… மதுவின் காரணமாக மனித உடலில் 7 வித கேன்சர்கள் ஏற்படக்கூடிய அபாயம் அறியப்பட்டுள்ளது.உலக சுகாதார நிறுவனம், உலக கேன்சர் ஆராய்ச்சி நிதியம் உள்பட பல அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு 10 ஆண்டுகாலம் நீடித்தது.புள்ளிவிவரங்களைத் தாண்டிய உண்மை பிணைப்பு கேன்சருக்கும் மதுவுக்கும் இருப்பதையே இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், மலக்குடல், மார்பு ஆகிய 7 பகுதிகளில் கேன்சர் ஏற்படுவதற்கு மதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.இந்த ஆய்விலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்தான் மிக முக்கியம்.

*கேன்சரில் ஏராளமான வகைகள் இருப்பதால், இதுதான் கேன்சருக்கு காரணம் எனத் தெள்ளத்தெளிவாக வரையறுக்க முடியாத ஒரு சூழலே இதுவரை நிலவி வந்தது. எதனாலும் கேன்சர் வரலாம், கேன்சர் ஏற்பட ஏராளமான காரணங்கள் உண்டு(ஒன்றுக்கு மேற்பட்டவை) போன்ற கருத்துகள் இனி மாறத் தொடங்கும். ஆய்வுகள் அடுத்த கட்டத்தை எட்டும் போது, ஒவ்வொரு கேன்சருக்கும் தெளிவான பின்புலங்கள் வரையறுக்கப்படும்.

*சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களே கேன்சர் ஏற்பட பிரதான காரணம். எனினும், மதுவும் இப்பட்டியலில் மிகத்தீவிரமாக இடம்பிடிக்க இருப்பதன் அடையாளத்தையும் இந்த ஆய்வு சொல்லிச் செல்கிறது.

*சுகாதாரத் துறைகள் மற்றும் அரசுகள் இதுவரை அறிவுறுத்தி வந்த மது பருகும் வழிகாட்டி அளவுகள் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்கிற சூழ்நிலையையும் இந்த ஆய்வு கொண்டு வந்திருக்கிறது. உதாரணமாக… சில நாடுகளில் வாரம் 21 யூனிட் மது வரை பாதகம் இல்லை என்று கூறப்பட்டு வந்த அளவு, இனி மூன்றில் இரு பங்காக (14 யூனிட் ஆல்கஹால் அல்லது 7 பிண்ட் பியர்) குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

*பெண்களுக்கு கேன்சர் அபாயம் இன்னும் கூடுதல் என்பதால், மது சார்ந்த சிக்கல்கள் அவர்களுக்கு இன்னும் அதிகமாகின்றன.

*மதுவோடு சேர்ந்து புகையும் கொண்டவர்களுக்குச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை… கல்லீரல் நோய்கள், ஸ்ட்ரோக், கணைய அழற்சி, தொண்டை மற்றும் வாய்ப்பகுதி கேன்சர் போன்றவை மிக நெருக்கத்தில் இருக்கின்றன என்பதைத் தவிர!

*இதுவரை 5 சதவிகிதத்துக்கும் குறைவான கேன்சர் மரணங்களே மதுவின் பின்னணியில் அறியப்பட்டன. மது சார்ந்த கேன்சர் மரணங்களின் அளவு, உண்மையில் இதை விடவும் அதிகம் என்பதையும் இந்த ஆய்வு சொல்லாமல் சொல்கிறது.

 

மது எப்படி கேன்சருக்கு காரணமாகிறது?

*வளர்சிதை மாற்றத்தின் போது மதுவில் உள்ள எத்தனால் Acetaldehyde எனும் வேதி விஷமாக மாறுதல் அடைகிறது. இதனால் மனித உடலின் டிஎன்ஏ மற்றும் புரோட்டீன்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

*மது காரணமாக உடலில் ஏற்படும் ஆக்சிடேஷன் செயல்பாட்டில் ‘ரியாக்டிவ் ஆக்சிஜன்ஸ்பீசிஸ்’ எனப்படும் வினையாற்றும்

ஆக்சிஜன் மூலக்கூறுகள் வெளியாகின்றன. இவை டிஎன்ஏ, புரோட்டீன்கள், லிபிட்ஸ் (கொழுப்பு) ஆகியவற்றைச் சிதைக்கின்றன.

*கேன்சர் அபாயத்தைக் குறைக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உடலில் சேராமல் மது தடுக்கிறது.

*மதுவானது ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகரிக்கச் செய்வதால், மார்பக கேன்சர் அபாயமும் அதிகரிக்கிறது.

 

*மதுபானங்களிலேயே கேன்சர் உருவாக்கும் வேதிப்பொருட்கள் காணப்படுவதும் மற்றுமொரு பிரதான காரணம்.

*மரபியல் ரீதியான கேன்சர்கள் தூண்டப்படுவதற்கும் மதுவின் வளர்சிதை மாற்றச் செயல்பாடு காரணமாகி விடுகிறது.

*மது அருந்துவதை நிறுத்திய சில ஆண்டுகள் வரையிலும் கூட, மது காரணமாக ஏற்படும் கேன்சர் அபாயம் நீடிக்கவே செய்யும் என்பது அடுத்த அதிர்ச்சி.

*கேன்சர் அறியப்பட்ட பிறகும் மதுவைத் தொடர்வது என்பது இல்லாத ஊருக்கு இன்னுமொரு சாலை அமைப்பது போன்ற கொடுமையே.இதே சூழல் தொடர்ந்தால், எதிர்காலத்தில் மது என்பதே ஒருவகை கேன்சர் என மாறிவிடும் நிலைதான் உண்டாகும்.

 

 

நன்றி : குங்குமம் டாக்டர் | டாக்டர் ஷாம் | தினகரன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *