பொன்னான நாகரிகங்கள் | தக தக தங்கம் | ஏ.ஆர்.சி.கீதா சுப்ரமணியம்


உலகில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி, பல மறைந்தும் சிலது நிலைத்தும் நிற்கின்றன. அந்த நாகரிகங்களின் வளர்ச்சியின்போது நடந்த தங்க சுவாரஸ்யங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம். சுமேரிய நாகரிகத்தின்போது அதாவது, கி.மு.900ல் சீனாவில் நாணயங்களுடன் கரன்சிகளும் பயன்படுத்தப்பட்டன. கரன்சிகள் காகிதத்தோடு தங்க ஜரிகையிட்ட பட்டுத் துணியிலும் செய்யப்பட்டன. ஏனென்றால் அப்போது காகிதத்தைவிட பட்டின் விலை குறைவு.

சின் வம்சத்தில் 1368 முதல் 1644 இடையில் ஆண்ட மன்னன் Zhuyuan Zhang. அவன் 14 வருடங்கள் எடுத்துக் கொண்டு கட்டி முடித்த  மிக பிரமாண்டமான அரண்மனையில் 980 கட்டிடங்களும் 9 ஆயிரம் அறைகளும் இருந்தன. 78 லட்சம் சதுர அடி கொண்ட அந்த அரண்மனையில் அதைச் சுற்றிலும் அகழியும் தங்க ஓடு வேய்ந்த கூரையும் காணப்பட்டன. அது போலவே Zheng He  எனும் திருநங்கை ஒரு பொறுப்பான பதவியில் இருந்து சாதித்ததைச் சொல்கிறது இந்த சம்பவம். அந்தத் திருநங்கை கப்பற்படைத் தலைவராக இருந்தார். 7 கடல் பயணம் மேற்கொண்டார்.

317 கப்பல்களுடன் 27 ஆயிரம் நபர்களுடன்  இந்தக் கப்பல் பயணத்தைத் தொடர்ந்தபோது பல நாடுகளுக்கும் சென்றார். இந்தியாவில் கேரளாவுக்குச் சென்றபோது கொச்சி ராஜாவுக்கு பட்டுத் துணிகளையும் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பீங்கான் பாத்திரங்களையும் பரிசாகக் கொடுத்தார். அதற்கு கொச்சி அரசர்,  பல பொற்கொல்லர்களை கொண்டு ஒரே நேரத்தில் செய்யப்பட்ட ஆண், பெண் இருவரும் அணியக்கூடிய 1555 கிராம் எடையுள்ள தங்க ஒட்டியாணத்தைக் கொடுத்து அசத்தினார்.

Zheng He அகமகிழ்ந்து அரசரின் அனுமதியோடு  அந்த பொற்கொல்லர்களை சீனாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கேயே தங்கியவர்களும் உண்டு. இப்படியும் நமது கலைத்திறனும் கலாசாரமும் சீனாவுக்குப் பரவியது.

கிரேக்க நாகரிகத்தின்போது சாப்பாடு கைகளால் மட்டுமே உண்ணப்பட்டது. ஸ்பூன், ஃபோர்க் போன்றவற்றை பயன்படுத்தும் கலாசாரம் கிடையாது. கிரேக்கப் பெண்களின் அழகுக்கு அவர்களது நீளமான கூந்தல் மிக முக்கிய காரணம். ஆனால், அடிமைப் பெண்களுக்கு நீளமான முடி வளர்க்கத் தடை இருந்தது.

பண்டைய எகிப்தில் ஆண், பெண், குழந்தைகள் என எல்லோருக்கும் பேன் தொல்லை அதிகமாக இருந்ததால் அனைவரும் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டிய நிலை. யாராலும் சொந்த முடி வளர்க்க முடியாத நிலை. விக் வைத்துக் கொள்வது சகஜமாக இருந்தது. பணக்காரர்கள் தங்கத்தால் ஆன விக் வைத்துக் கொள்வது வழக்கத்தில் இருந்திருக்கிறது. கிரேக்க மக்களின் அடையாளங்களில் ஒன்று அவர்களது வெள்ளையான சருமம். கறுப்பான பெண்கள் தங்களை நிறமாகக் காட்டிக் கொள்ள ஈயப் பவுடரை தடவிக் கொள்வார்களாம்.

அந்த ஈயம் உடலுக்குக் கெடுதலானது. விஷத்தன்மை உடையது என்பதால் அவர்களது நலத்தினை வெகுவாகக் கெடுத்தது. முகத்துக்கு சுண்ணாம்புப் பொடியையும், கன்னத்துக்கு ரோஜா நிறப் பொடியையும் கண்ணுக்கு மையையும் தீட்டிக்கொள்ளும் பழக்கமும் இருந்திருக்கிறது. வசதியான பெண்கள் தங்கத்தைப் பொடியாக்கி, குழைத்து கன்னங்களிலும் கண்களுக்கு மேலும் பூசிக் கொண்டதாகவும் குறிப்புகள் உள்ளன. எகிப்தில் எல்லாவற்றுக்கும் தங்கத்தைப் பயன்படுத்தினார்கள். அந்தளவுக்கு தங்கம் கொட்டிக் கிடந்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

கிரேக்க நாகரிகத்தின் போது கி.மு 4ம் நூற்றாண்டு வரை பெண்கள் விதவிதமான நகைகளை அணிந்தனர். ஆனால், 4ம் நூற்றாண்டுக்குப் பிறகு நகைகள் அணியும் பழக்கம் மறையத் தொடங்கியது. மாயன் நாகரிகத்தின்போது முதன் முதலாக கோக்கோவின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது தனி வரலாறு. கோக்கோ கொட்டைகளை தண்ணீரில் போட்டு அருந்திய பானத்தின் பெயர்தான் XOCALTL.

இந்த வார்த்தையில் இருந்துதான் சாக்லெட் என்பது வந்தது. ஆனால், பணக்காரர்கள் அதையும் தங்கக் கோப்பையில் அருந்தினார்கள். அந்தத் தங்கக் கோப்பைகள் ஒருமுறை அருந்தியதும் டிஸ்போசபிள் கப்களாக தூக்கி எறியப்பட்டன. 1909ல் ஹோவர்ட் கார்ட்டர் என்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளருக்கு லார்டு கர்னார் எகிப்தை பற்றிய அகழ்வாராய்ச்சிக்காக அவருக்கு பண உதவி செய்தார். 12 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு பலன் ஏதுமின்றி அவர் தோல்வியைத் தழுவினார். பின் கானரி என்கிற குயில் போல தோற்றமளிக்கும் ஒரு பறவையை வாங்கினார்.

அது அதிர்ஷ்டப் பறவை என்றும் அது கிடைத்தவுடன் தங்கப் புதையல் கிடைக்கும் என்றும் பிறர் சொல்லக் கேட்டார். அது உண்மையாக நடந்திருக்கிறது. கி.மு. 1332 முதல் 1323 வரை அரசாண்ட Tutan Khamun என்ற மன்னன் கல்லறையைத் தோண்டிய போது எங்கு பார்த்தாலும் தங்கம் கிடைத்ததாம்.

மரத்தால் செய்யப்பட்ட கோயிலின் மேல் தங்கத் தகடுகள், மன்னனின் தங்க சிம்மாசனம், அதன் கைப்பிடியில் இரண்டு நல்ல பாம்புகள்,  தங்கத்திலேயே அரசனின் மம்மி, அதாவது, பதப்படுத்தப்பட்ட அவனுடைய உடல் அடங்கிய அந்தப் பெட்டி, தங்கத்தால் செய்யப்பட்ட முகம், உடல் கவசங்கள், மம்மியை பாதுகாப்பதற்கான அற்புத கலை நயம் மிக்க சிலைகள், லினன் ஆடைகள், கண்ணாடி மதுக் கோப்பை, எழுதுகோல் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அங்கு இருப்பதை கண்டுபிடித்தார். ஹோவர்ட் கார்டடரின் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை மிஞ்சிய விஷயங்கள் இதுவரை இல்லை.

 

 

நன்றி : குங்குமம் தோழி | எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *