ஒட்டியாண பீட நாயகி அபிராமி.


சக்தி தரிசனம் -மருத்துவக்குடி

அது திரேதாயுகம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அமராவதி எனும் தேவலோக நகரத்தின் வாயிலில் இந்திரனின் வருகைக்காக காத்திருந்தனர். காண்போரின் கண்கள் கூசும் அளவுக்கு ஒளி மிகுந்த, பாலினும் தெள்ளிய வெண்மையான ஐராவதம் எனும் யானை அசைந்து நடந்து வந்து கொண்டிருந்தது. இந்திரன் அதன் மீது அமர, தேவலோகமே தனக்குக் கீழ் என தும்பிக்கையை ஒயிலாக இடதும், வலதும் அசைத்தது.

அந்த ஐராவதத்தின் சிருங்கார அசைவில் செருக்கு மிகுந்திருந்தது. வெண்களிறின் அகம் அதனால் கருக்கத் தொடங்கியது. இந்திரன் அதன் மஸ்தகத்தைத் தட்டிக் கொடுக்க, கர்வம் சிரசின் உச்சியைத் தொட உயரத்தில் இருந்த இந்திரனின் தலையெழுத்து மெல்ல வேறுவிதமாய் திரிந்தது. அதர்மம் அலட்சிய வடிவில் ஐராவதத்தின் மீது சுகமாய் பயணித்தது. தேவலோகத் தலைவன் அதலபாதாளத்தை அடையும் தருணம் வெகு அண்மையில் இருந்தது.

தர்மத்தை நேராக்கி அகங்காரச் சிரசை கொய்யும் தபோவலிமை உடைய துர்வாசர் ஈசனின் பூசையிலிருந்து எழுந்தார். பக்தி எனும் நாரில் நெருக்கமாய் தொடுக்கப்பட்டிருந்த எருக்கம்பூ மாலையை ஈசன் உவந்து அருள அதை மனமுவந்து பெற்றுக் கொண்டார் துர்வாச மகரிஷி. தொலைதூரம் பயணித்து அமராவதியின் எல்லையை அடைந்தார். இந்திரன் இனிதாய் வரவேற்றான். ஆனால், ஐராவதம் அதீதமாய் தன்னை நினைத்து ஆடிக் களைத்திருந்தது. துர்வாசரை துதிக்க மறுத்து தன் பார்வையை கூட்டத்தின் பக்கம் குவித்தது.

இந்திரனும் கைதொழுது நின்ற தேவக்கூட்டத்தை நோக்கி யானையை நகர்த்தினான். தர்மம் எனும் துர்வாசரை தனியே விட்டு வெகுதொலைவே நகர்ந்தான். தேவர்கள் இந்திரனை நோக்கி தலை தாழ்த்தி வணங்கினார்கள். துர்வாசரை நோக்கி இருகரங்களையும் தூக்கித் தொழுதார்கள். துர்வாசர் கண்கள்மூடி கரம் குவித்தார். இந்திரன் வினயமாய் அதை ஏற்றான். ஆனால், ஐராவதம் ஆர்ப்பாட்டமாய் தும்பிக்கையை தூக்கி ஆசியளித்தது. தேவர்கள் திகைத்தார்கள். துர்வாசர் திடுக்கிட்டு தகுதிக்கு மீறி ஆரவாரிக்கிறதே எனக் கோபம் கொண்டார்.

தேவர்கள் ஆச்சரியமானார்கள். ஐராவதம், ஐயனின் வாகனம்தானே என்று ஐயத்தோடு பார்த்தார்கள். இந்திரன் தன் அரண்மனையின் விஸ்தீரம் பார்த்து வியந்தான். ஐராவதத்தை தட்டிக் கொடுத்தான். யானையின் மதச்செருக்கு விஷமாய் மேலேறியது. பித்துப்பிடித்தது போன்று பிளிறியது. எதிரிலுள்ளோரை ஏளனமாய் பார்த்தது.

ஆனால், தேவர்கள் வெண்யானை விளையாடுகிறது என்று விட்டார்கள். துர்வாசர் யானையின் ஆணவத்தை துண்டாக்க தொடர்ந்து அருகே வந்தார். யானையையும், இந்திரனையும் உற்றுப்பார்த்தார். அழகிய பின்னலாக நெய்யப்பட்டிருந்த மெல்லிய அந்த எருக்கம்பூ மாலையை இந்திரனிடம் நீட்டினார். அவன் ஐராவதத்திலிருந்து இறங்காது கால் அகட்டி அம்மாலையை பெற்றுக்கொண்டான்.

மென்மையான மாலை மலைபோல் கனத்தது. ஒரு கணம் தடுமாறியவன் சட்டென்று சமாளித்தான். எருக்க மாலையை தலைகனத்தால் திமிறிக் கொண்டிருந்த ஐராவதத்தின் தலையில் பட்டென்று வைத்தான். யானை அதிர்ந்தது. யாரோ அழுத்துகிறார்களே என ஆத்திரமாய் துதிக்கையை வளைத்து பூமாலைப் பற்றியது. தூக்கிப்பார்த்தது. முடியாது போகவே முழுவலிமையோடு இழுத்தது. அது ஈஸ்வரப்பிரசாதம் என்று தேவர்கள் அலறினார்கள். அடங்காத அந்தக் களிறு வானத்தில் தூக்கிச் சுழற்றியது. சட்டென்று தரையில் அறைந்து, காலால் அழுத்தி மிதித்தது.

பெருங்குரலெடுத்து அலறி கால்மடங்கிச் சரிந்து வீழ்ந்தது. இந்திரன் அந்தரத்தில் தூக்கியெறியப்பட்டான். துர்வாசர் கோபத்தில் தனலானார். தேவலோகம் மெல்ல உருமாறும் யானையையே உற்றுப்பார்த்தது.

வெண்யானை தன் ஒளியிழந்து, களையற்று கருமையாக மாறியது. தும்பிக்கை தளர்ந்து வற்றிய விறகாய் மெலிந்தது. கரும்பெரும் உடல் சிறுத்து செதில் செதிலாய் தோல் உரிந்து கோரமாகிச் சரிந்தது. துர்வாசரின் திருவடிகளில் வீழ்ந்தது. இந்திரன் இடிந்து போயிருந்தான். எழக்கூட வலிமையற்று கால் தடுமாறி விழுந்தான்.

‘‘ஐராவதமே… இந்திரன் மீதமர்ந்ததாலேயே மதச்செருக்குகொண்டு மகேசனின் மாலையை மதியாது மிதித்தாய். நீ செய்தது எவ்வளவு பெரிய ஈஸ்வர நிந்தனை என்று புரிகிறதா உனக்கு. அகங்காரம் சத்திய வஸ்துவை தவறாகத் தொடும்போது தானாக அழியும். அதன் உதாரண நிகழ்வே இது. எனவேதான் எவரும் சகியாத இவ்வுருவை பெற்றிருக்கிறாய். நீ பூலோகத்தில் தனியே திரிந்து கர்வத்தை உதறி, ஆணவம் அழித்து வா என்றார்.
ஐராவதம் துர்வாசரை நோக்கி ‘‘மகரிஷியே.. வேறு வழியே கிடையாதா? பூலோகத்தில் என் பாவம் தீர்க்கும் பரமன் எங்குள்ளார்’’ என்று துர்வாசரின் திருவடிகளில் தம் துதிக்கையைப் பிணைத்துக் கதறியது. கண்ணீரால் அவர் திருப்பாதங்களை நனைத்தது.

துர்வாசர் கருத்த அந்த ஐராவதத்தை கருணையாகப் பார்த்தார். அருகே இருக்கும் இந்திரனையும் பார்த்தார். ‘‘இந்திரா… இந்த யானை நீ அலங்காரமாய் வலம் வருவதற்கு மட்டுமே. ஆனால், நீ அதன் அகங்காரத்தை வளர்த்து அதை மதங்கொள்ளச் செய்கிறாய். கர்வப்படுவதைவிட அதை தீயிலிட்ட நெய்யாய் பெருக்குவதுதான் மிகப் பெரிய ஆணவம். விவேகமுள்ள நீதான் சிவநிந்தனைக்கு மூல காரணம். வெகு விரைவில் அதுவும் உனக்குப் புரியவரும்…’’ மகரிஷி அவன் மனதை கண்ணாடிபோல் பிரதிபலித்துக் காட்டினார்.

இந்திரன் குற்றவுணர்வு கொண்டான். ஏனோ, இந்திரனின் அடிமனதில் ஒரு பயம் பனிமூட்டமாய் சுழன்று சுழன்று எழுந்தது. அமராவதி எனும் அந்த தேவர்களின் நகரம் மெல்ல களையிழக்கத் துவங்கியிருந்தது.

இடி விழுந்த பச்சை மரம்போல் நின்ற இந்திரன் மிகுந்த கவலையோடு நகர்ந்தான். வேறொரு புறம் மிக வலிமையோடு தேவலோகத் தலைவனை அழித்து, இந்திரப்பதவியை பெற்றுவிட வேண்டும் என்ற சபதத்தோடு ஒரு அசுரன் எழுந்தான். இந்திரன் இன்னும் கவலையானான். அகங்காரத்தை வாகனமாகக் கொண்ட எந்தத் தலைவனும் தலையெடுத்ததில்லை என்பதை ஐராவத யானையை முன்நிறுத்தி ஈசன் தன் விளையாடலை தொடங்கினார். அது விபரீதமாய் தேவலோகத்தையே திருப்பிப் போட்டது.
நான்கு வேதங்களையும் பழுதறக் கற்றறிந்த வேதியன் ஒருவன் கௌடதேசத்தில் வாழ்ந்து வந்தான். எல்லா தானங்களையும் தாமே பெற்றுக் கொள்ளவேண்டும் என்று வெறி கொண்டு அலைந்தான். மலைமலையாய் எள்ளை குவித்து வைத்தான். எள்ளை அதிகம் கொடுக்கிறார்களே என்று ஒரு வேதியன் தேவைக்கு அதிகமாக வாங்கிக் கொள்ளக்கூடாது.

எள் தாம் இருக்கும் இடத்தைப் பொறுத்து நல்லதும், தீயதும் நிகழ்த்தும் வலிமையான வஸ்து. எனவேதான் எள்ளை தானம் வாங்குபவன் அதற்குச் சமமானதை ஈய வேண்டும் என்று தர்மசாஸ்திரம் எச்சரிக்கிறது. இந்த தர்மம் தெரிந்தே திமிரோடு யாருக்கும் கொடுக்காது சேமித்தான். எள் மலையாய் பெருகியது. மேருவைப் போல அவன் பாவம் மிகுந்தது. கூப்பிட்டுச் சொன்ன ஆன்றோர்களை அறைந்தான். அறிவுரை சொன்னோர்களை வாளால் வகுந்தான். எள்ளின் கருமை அவன் அகத்தில் பிரதிபலித்தது. தன் இயல்பு மாறி ஒரு அசுரன்போல மெல்ல மாறினான். கரிய நிறத்தோடும், உயர்ந்த மலைபோல உருவம் தாங்கி காட்டில் தன்னந்தனியே சஞ்சரித்தான்.

பிரம்மராட்சசனாய் மாறி கானகத்திற்குள் புகுவோரை பிடித்துத் தின்றான். வாமதேவர் எனும் மகாமுனிவர் உடல் முழுதும் திருநீரு பூசி, நீலகண்டனை இதயத்தில் தரித்து இனிமையாய் நாதனின் நாமத்தை நாமணக்கச் சொல்லிக் கொண்டே வந்தார். பிரம்மராட்சசன் அவரைப் புசிக்க எண்ணி அவரைத் தீண்ட, முனிவரின் மகத்தான அருளால் தம்மைப் பற்றிய ஞானம் உள்ளுக்குள் கிளர்ந்தது.

என் சுயரூபம் எப்போது எனக்குக் கிடைக்கும் என அவர் கால்பற்றிக் கேட்க அவன் காதோரம் அந்தத் தலத்தின் பெயர் சொல்ல மருத்துவாசுரன் சிலிர்த்தான். தொடர்ந்து அத்தலம் நோக்கி நகர்ந்தான்.

மாபெரும் வில்வமரம் ஒன்று வானை நிகர்த்த அளவு உயர்ந்திருக்க, பிரபஞ்சத்தையே ஆளும் பரமனாம் ஈசன் பெருங்குடையின்கீழ் அருட்கோலோச்சி அமர்ந்திருந்தார். வில்வாரண்யம் எனும் அந்தப் பெருந்தலம் செக்கச் சிவந்த ஈசனின் இணையற்ற ஆற்றலால் பிரகாசமாக ஒளிர்ந்தது. பெருமரத்தைச் சுற்றி சிறுசிறு வில்வமரங்கள் சூழ அப்பிரதேசமே கரும்பச்சையாய் மாறியிருந்தது. ஈசனுக்கு இணையான வில்வத்தால் பெருஞ்சக்தி
எல்லோரையும் தம்மை நோக்கி ஈர்த்தபடி இருந்தது. தொலைதூரத்தே தம்மை நோக்கி வரும் பிரம்மராட்சசனை தம் தீங்கருணையால் வருடினார். பிரம்மராட்சசன் ஆற்றின் பிரவாகத்தோடு புரண்டோடி வந்தான்.

முக்கண் நாயகன் தம் நாடகத்தை இருபெரும் யோகராஜர்களின் முன்னிலையில் தம் விளையாடலை நிகழ்த்த உவகை கொண்டான். எங்கேயோ வடக்கே யாத்திரை புரிந்த வியாக்ரபாதரையும், பதஞ்சலியையும் தம் தீந்தழலால் தீண்டினான். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் வடக்கே செல்லும் தீவிரத்தைக் குறைத்தார்கள். வில்வாரண்ய நாயகன் அவர்களை விடாது பிடித்திழுத்தான்.

அரன் அழைக்கிறாரே என்று அலமலர்ந்து போனார்கள். மார்கழி கடும் பனியில் தெற்கு நோக்கி தம் பாதையை திருப்பினார்கள். மகாதேவனும் ,தேவியும் அத்தலத்தில் ஒன்றாய் ஏகமாய் சிவசக்தி சங்கமமாய் இருப்பதைப் பார்க்க மகாலஷ்மியும் பேருவகை கொண்டாள். தாமும் அதுபோல நாராயணனோடு சங்கமிக்க அருள வேண்டி, மெல்ல வில்வாரண்யத்திற்குள் நுழைந்தாள். ஈசனும் இசைந்தார்.

சிவகாமி, சிவனில் பாதியாய் திகழும் அற்புத கோலம் கண்டு களிப்பெய்தினாள். வில்வதளங்களை கூடைகூடையாய் கொய்து குழைவாய் பூஜித்து உள்ளம் நெகிழ்ந்தாள். நாதனின் நிழலில் கண்மூடி அமர்ந்தாள். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சிலிர்த்து சடைபரப்பி சிவந்திருக்கும் ஈசனின் திருப்பாதத்தருகே அமர்ந்தார்கள். பிரம்மராட்சசன் வில்வ வன எல்லையைத் தொட்டவுடன் திவ்ய உருவம் பெற்றான். பரவசமாய் ஓடிவந்து பரமனின் பாதத்தில் விழுந்தான்.

வந்தவன் வரம் கோர வந்திருக்கிறான் என்பதை அறிந்தவர் வேண்டுவன கேள் என்றார். அதைக்கேட்டவன் வாய்பிளந்தான். அருமையான வாய்ப்பு என பேராசையில் மிதந்தான். மூவுலகையுமே நான் ஆளவேண்டும் என ஒரே கேள்வியாகக் கேட்டான். அப்படியே ஆகட்டும் என்றார். வரம் பெற்றவன் விரைவாக அவ்விடம் விட்டு அகன்றான்.

வானுலகை வளைத்து பிடித்தான். எங்கே இந்திரன் என்று இறுமாப்போடு அலைந்தான். தேவலோகத்திற்குள் நுழைந்தான். எதிர்பட்டோர்களை தம் பெரும்படை கொண்டு நையப்புடைத்தான். இந்திரனை சுற்றிக் கொண்டான். பிடித்திழுத்துக் கொண்டு சிறையில் அடைத்தான். சிறையில் அடைந்தவன் ஆறாவது நாளே தப்பித்தான். துர்வாசர் எங்கே இருக்கிறார் என்று கேட்டு தேடினான்.

இப்போது, வெகுநேரமாய் துர்வாசர் தம் காலுக்குக்கீழிருந்த ஐராவதத்தை மெல்லத் தடவினார். யானை புருவம் நிமிர்த்தி ரிஷியைப் பார்த்தது. அதோபார் என்று பூலோகத்தில் கரும்பச்சையாக பிரகாசித்திருந்த வில்வாரண்யத்தைச் சுட்டிக்காட்டினார். யானை மெல்ல எழுந்து அந்த திசை நோக்கி நகர ஆரம்பித்தது. ஈசனும் யானை அருகே வருவதை தமக்குள் உணர்ந்து மெல்ல தம் அருளால் அணைக்க, ஐராவதத்திற்குள் உற்சாகம் கரைபுரண்டோடியது.

ஆனால், புறத்தில் பொலிவிழந்த யானை தன் நடை தளர்ந்து மெல்ல அந்தக் கானம் நோக்கி முன்னேறியது. இந்திரனைக் கண்ட துர்வாசர் துரிதமாக வில்வாரண்யத்திற்கு செல் என்றார். அதற்குள் இந்திரன் வில்வாரண்யம் நோக்கி மறைந்து ஓடுகிறான் என்று மருத்துவாசுரன்தெரிந்து விரைந்தான். இந்திரன் ஆரண்யத்திற்குள் சென்று ஈசனின் அருகே சரிந்தான்.

அன்று மார்கழித் திருவாதிரை. வில்வாரண்யம் மழை மேகத்தால் இருண்டது. பதஞ்சலியும், வியாக்ரபாதரும் தில்லையில் ஆதிரை நடனம் காண ஆவலாய் தவித்தனர். ஐராவதம் ஈசனின் அருகே நெருங்கியபோது மெல்லிய தூறலாய் இருந்தது அடைமழையாய் பேரிடியோடு தரையிறங்கியது. அவ்விரு முனிவர்களும், ஈசனே இதென்ன சோதனை என்று உள்ளம் உருகி ஈசனைத் தொழுதனர்.

மூவுலகையும் வென்ற மருத்துவாசுரன் இந்திரனை நெருங்கினான். பெருமழையில் பெரும்படையோடு ஆரண்யத்திற்குள் புகுந்தான். போருக்கு வா என பெருங்குரலெடுத்து அழைத்தான். இப்போது மழை வெள்ளமாய் ஆற்றில் பெருகியது. ஐராவத யானை மிரண்டுபோய் தவழ்ந்து தவழ்ந்து தவிப்போடு ஈசனை நெருங்கியது. ஒருபுறம் மருத்துவாசுரன் மிரட்ட, அரனை சரணுற்ற இந்திரன், பரமனின் பாதத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.

கரிய நிறமாய், மேகத்தைப் பிளந்து கொண்டு, எண்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி சிவனின் அம்சாவதாரமான அகோரமூர்த்தி அந்த மருத்துவாசுரனின் முன்பு நின்றார். நின்ற கோலம் பார்த்தே அசுரன் அயர்ந்து பயந்தான். ஆனாலும் ஆவேசமாய் தொடர்ந்து தாக்கினான். அகோரமூர்த்தி அசுரசேனையை அநாயசமாய் கிழித்தெறிந்தார்.

ஒரு புறம் போர்க்களமாக மாறிவிட்டிருக்க, மறுபுறம் தில்லைக் கூத்தனின் ஆனந்த நடனம் காண முனிவர்கள் தவிக்க, ஐராவத யானை ஈசனை பூஜிக்க நெருங்க அவ்விடமே விசித்திர களைகொண்டது. அகோரமூர்த்தி மருத்துவாசுரன் மார்பில் சூலத்தைப் பாய்ச்ச மிகப்பெரிய அலறலோடு பூமியில் விழுந்தான். அவன் ஈசனின் பரமபக்தனானதால் நேரே கயிலைக்கு ஏகினான்.

தில்லைக்கூத்தன் நடராஜர் சட்டென்று இத்தலத்தில் தோன்றி ஆனந்த நாட்டியம் ஆட, ஐராவதம் ஈசனின் பாதத்தை குழைவாய் சுற்றிக்கொள்ள, வியாக்ரபாதரும், பதஞ்சலியும் பரவசத்தில் ஆழ்ந்தார்கள். ஐராவதம் வெண்உருவம் பெற்று வெள்ளிபோல மின்னியது. இந்திரனும் அதன் மீது அமர்ந்து ஆனந்தப்பட்டான். மகாலஷ்மி மலர்ந்த முகத்தோடு அம்மையை வணங்கி விஷ்ணுவின் திருமார்பில் நிரந்தர வாசம் புரிந்தாள்.

மருத்துவாசுரனின் வதம் இத்தலத்தில் நிகழ்ந்ததால் மருத்துவக்குடி என்ற பெயர் பெற்றது. மாபெரும் புராணப் பெருமைமிக்க இக்கோயிலின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து விளங்குகிறது. கோயிலுக்கு இடப்புறம் அம்பாள் அபிராமி எனும் திருநாமத்தோடு நின்றகோலத்தில் அருளை அமுதமாய் பொழிகிறாள். நாரதர் திருக்கடையூர் அபிராமியும், இவளும் ஒன்றே என இணையாக அரியாசனத்தில் அமர்த்தி வழிபடுகிறார்.

திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு காதிலுள்ள தாடங்கம் எனும்ஆபரணம் அணிந்து தாடங்க பீடேஸ்வரி என்று சக்தியோடு விளங்குவதுபோல், இத்தல அபிராமி இடுப்பில் அணியும் ஒட்டியாணம் எனும் ஆபரணம் ஏற்று ஒட்டியாண பீடேஸ்வரி என்று மகாசக்தியோடு திகழ்கிறாள். அவளின் திருமுகத்தில் பொங்கும் அருளை அகத்தில் நிறைத்து மூலவர் சந்நதிக்கு நகர்வோம். ஐராவதம் பூஜித்து பேறுபெற்றதால் ஐராவதேஸ்வரர் எனும் பெயர் பெற்று அருளை வெள்ளமாய் நிறைத்து அருகே வருவோரை ஆனந்தத்தில் மூழ்கடிக்கும் அற்புதச் சந்நதி அது.

புராண நிகழ்வின் வேகம் இன்னும் பேரதிர்வாய் சந்நதியில் விரவியுள்ளதை எவரும் உணரலாம். கருவறையின் சாந்நித்தியம் மனதை ஒருமையாக்கி ஐராவதேஸ்வரரோடு ஐக்கியமாக்கும் எனில் மிகையில்லை. அபிஷேகம் புரியும் தருணம் வெண்யானை பூஜித்ததால் லிங்கத்திருமேனி இன்னும் வெண்மையாகவே உள்ளது பார்க்க உள்ளம் உருகும். யானையின் சிவபக்தி நம்முள்ளும் தீஞ்சுடராய் பற்றிக்கொள்ளும். மனதில் உள்ள மனோரதங்களை கேட்காமலேயே நிறைவேறும் மகத்தான சந்நதி அது.

மருத்துவக்குடியின் மகிமை சொல்லும் இன்னொரு விஷயம் இங்குள்ள விருச்சிகப்பிள்ளையாரே ஆவார். சந்திரன் சுயஒளியை இழந்து மங்கித் தேய்ந்து அதாவது நீசமாகி வந்தபோது, இத்தல ஈசனை வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கினான். மேலும், அவன் தன் சுய சோபையை இழந்ததால் மூலநாயகனான பிள்ளையாரை நிறுவி பூஜித்தான்.

ஒளிபெருக்கிப் பிரகாசித்தான். விநாயாகரின் முகமும், தேளின் செதில் செதிலான உடலமைப்பும், தன் உடல் சுருக்கி நெடுநெடுவென்று நிற்பதைப்பொன்றதொரு அமைப்பை சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள்.

ஜோதிடரீதியாகவும் சந்திரன் நீசமானது விருச்சிக ராசியில், ஆகவே, விருச்சிகத்தில் மங்கித் தேய்ந்தவன், இங்கு விருச்சிகப் பிள்ளையாரை நிறுவி பூஜித்திருக்கிறான். அதாவது ஜோதிடம் சொல்லும் விஷயமும், புராணநிகழ்வும் ஒன்றையொன்று ஒத்து அதே விஷயம் இங்கு விருச்சிகப் பிள்ளையாராக வீற்றிருப்பது பார்க்க கோயில்கள் பற்றிய அறிவு பிரமிப்பூட்டுகிறது. விருச்சிகராசிக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வணங்க அவர்கள் வாழ்வு விண்ணுயரும் என்பது உறுதி.

கோயிலின் கோஷ்டங்களில் உள்ள மூர்த்திகள் அன்றலந்த மலராக பொலிந்து காணப்படுகிறது. அற்புதமான தட்சணாமூர்த்திச் சிலையின் முன்பு நிற்க மௌனம் சூழும். வலமாக வரும்போது தலவிருட்சமான வில்வமரத்தைக் காணலாம். இங்குள்ள அஷ்டபுஜதுர்க்கை சிற்பம் பார்க்க உடல் சிலிர்க்கும். மகிஷனும், கொம்புகளும் புடைப்பாய் வெளியே துருத்தியிருக்க அதன்மேல் எண்கரங்களோடு நிற்கும் துர்க்கையின் சிற்பநுணுக்கம் பிரமிப்பூட்டும்.

மெல்ல பிராகாரத்தை வலம் வந்து கொடிமரம் அருகே நமஸ்கரித்து நிமிர நமக்குள்ளும் யானைபலம் வந்துவிட்டிருப்பதை உணரலாம். இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மருத்துவக்குடி செல்லுங்கள் மகத்தான வாழ்வை பெற்றிடுங்கள்.

கிருஷ்ணா

சி.எஸ்.ஆறுமுகம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *