ஆசிரியர்களே, மாணவர்களின் சிறு முயற்சியையும் பாராட்டுங்கள்!


ஆசிரியர்களின் பாராட்டு மாணவர்களின் நன்னடத்தையை அதிகரிக்கும் என்று ஆய்வின் மூலமாக உறுதியாகியுள்ளது.

பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ‘மாணவர்களின் கல்வி உளவியல்’ குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் நடத்தைகளில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கான காரணிகளைக் கண்டறிந்தனர்.

ஆசிரியர்கள் பழகும் விதம் மாணவர்களிடையே நேர்மறையான பல தாக்கத்தினை ஏற்படுத்தும். முக்கியமாக ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டும்போது அவர்களது நடத்தையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை காண முடிகிறது. கல்வியிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

மாணவர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அவர்களை தண்டிக்காமல், மாறாக அவர்களுக்கு தவறை உணர வைத்து அறிவுரை கூறும் ஆசிரியர்களை அவர்களுக்கு பிடிக்கிறது. ஆசிரியர்கள் எளிமையாக, சாதாரணமாக நடந்துகொள்ள வேண்டும் என்றே மாணவர்கள் விரும்புகின்றனர். மாணவர்களின் சிறு முயற்சிகளைக் கூட ஆசிரியர்கள் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆசிரியரின் பாராட்டுகளே மாணவர்களின் அடுத்த முயற்சிக்கு வித்திடுகிறது.

அதே நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது அவர்களது மனதில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. முன்பை விட அவர்களது கல்வித்திறன் குறைகிறது; நடத்தைகளில் தவறான மாற்றம் ஏற்படுகிறது. ஆனால், மாணவர்களைப் பொறுத்து சிறு கண்டிப்பும் அவசியம்

எனவே, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், நன்னடத்தைகளை பழகிக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களது சிறு முயற்சியையும் ஆசிரியர்கள் பாராட்ட வேண்டும். இதன் மூலமாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி : தினமணிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *