இலங்கை மீதான போர் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டியவை


கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படுவதில் ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு எந்த தயக்கமும் இல்லை எனக்கூறியுள்ள ஆஸ்திரேலிய தூதர் ஜான் பிலிப், அதேசமயம் உள்நாட்டு போரின் போது இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய சூழலில், இலங்கை முப்படையினருடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையை கொண்டிருக்கிறோம். போர் முடிந்த 10 ஆண்டுக்கள் கடந்து விட்ட நிலையில், எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், அந்நிகழ்வில் பங்குகொண்ட ஆஸ்திரேலிய தூதர் ஜான் பிலிப் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் 2019 இந்தோ- பசுபிக் ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு வருகைதந்திருந்த ஆஸ்திரேலியாவின் இராணுவக் கப்பல்களான HMAS கேன்பெரா, HMAS நியூ கேஸ்டல், HMAS சக்சஸ், HMAS பர்ரமாட்டாயுடன் இலங்கை கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது.

இப்பயிற்சி கொழும்பு மற்றும் திரிகோணமலை துறைமுகங்களில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய- இலங்கை இடையேயான ராணுவ ரீதியான உறவு தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இரு நாட்டு படைகளும் ராணுவ ரீதியான பயிற்சிகள், ஆட்கடத்தல்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகைகளில் ஆண்டுதோறும் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், “இலங்கைப் படையினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதை விசாரிக்க அவசியமானதாகவும் கருதுகிறோம். எனக்கூறியுள்ள ஆஸ்திரேலிய தூதர், மார்ச் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதாக இலங்கை அரசு கொடுத்துள்ள வாக்குறுதி ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் முடிவுக்கு வந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் தமிழர்களுக்கான தனிநாடு கோரிய விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டது. இப்போரின் கடுமையான மனித மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போரின் இறுதி மாதங்களில் 40000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வல்லுனர்கள் அறிக்கை அமுல்படுத்தியது.

போரின் இருதரப்பு மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என ஐ.நா வில் தீர்மானம் நிறைவேறிய போதிலும் முறையான போர் விசாரணை10 ஆண்டுகள் கடக்க போகிற சூழலிலும் தொடங்கப்படவில்லை. இலங்கை கடல்படையினருடனான கூட்டுப்பயிற்சியை நிறைவு செய்திருக்கிற ஆஸ்திரேலிய படையினர் அடுத்தபடியாக இந்தியாவுக்கு வருகைதர இருக்கின்றனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *