இளையராஜா @ கூகிள்!


அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் Talks at Google மற்றும் நேர்காணல் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடப்பதுண்டு. அந்தப் பகுதிக்கு அவ்வப்போது வருகை தரும் கலைஞர்கள், அறிஞர்கள், பிரபலங்களை கூகிள் வளாகத்திற்கு அழைத்து வந்து அந்த நிறுவனமே நடத்தும் நிகழ்ச்சி இது. அந்தத் துறையில் ஆர்வமுள்ள கூகிள் பணியாளர் ஒருவரே பெரும்பாலும் நேர்காணலை நிகழ்த்துவார். ஏற்கனவே இதில் சங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசேன் (தபலா வித்தகர்), நடிகர் அமீர்கான் மற்றும் கணினித் தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் இளையராஜா கலந்துகொண்ட நிகழ்வு முற்றிலும் வேறுபட்டதாக மிகச் சிறப்பாக தனித்தன்மையுடன் இருந்தது. கூகிளுக்கு நன்றி.

அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார். கார்த்திக் ராஜா, மனோ மற்றும் இசைக்குழுவையும் கூடவே அழைத்து வந்திருந்தது சிறப்பு. கேள்வி கேட்ட இளைஞரை பயமுறுத்தாமல், அதே சமயம் ஒரு தகப்பன் ஸ்தானத்திற்கான தோரணையையும் விட்டுக் கொடுக்காமல் ராஜா பேசினார். சிறுவயதில் வண்டியிலிருந்து மூங்கிலை உருவி, கிருஷ்ணர் படத்திலுள்ளதைப் பார்த்து துளைபோட்டு புல்லாங்குழல் செய்து, அது முதல் தடவையே சுருதி சுத்தமாக அமைந்து விட்டதையும், மிகக் குறுகிய காலப் பயிற்சியுடன் மேற்கத்திய கிடார் இசைத் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றதையும் அவர் அந்த இடத்தில் கூறியது பரவசமாக இருந்தது. திரை இசையமைப்பில் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் கடைப்பிடித்து வந்த கறாரான தினசரி டைம் பேபிளை விவரித்த போதும், குழந்தைகளுக்கென்று எதையும் நேரம் கொடுத்து சொல்லிக் கொடுத்ததில்லை, குடும்பத்தினர் என்னை சகித்துக் கொண்டார்கள் என்று நேர்மையுடன் கூறியபோதும் அங்கிருந்தவர்கள் பலருக்கும் பிரமிப்பு ஏற்பட்டிருக்கும்.

ரமண மகரிஷி மீது தான் இயற்றிய ‘அற்புதம் அற்புதம்’ பாடலின் பல்லவியை அங்கு வந்த இசை ஆர்வலர்களைக் கொண்டு பாடவைத்ததும், சரணத்தை தன் குரலில் முழுவதுமாகப் பாடியதும் அற்புதம். பாடி முடித்த பிறகு ராஜா பேசியது தான் நிகழ்ச்சியின் ஹைலைட். ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார் (யூட்யூபுக்கு என்ன ஒரு அட்டகாசமான விளம்பரம்!). இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார். உலகெங்கும் பல ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் பகவான் ரமண மகரிஷியைப் போல வேறொருவர் கிடையாது என்று உறுதியான குரலில் அவர் கூறியதைக் கேட்டு மெய் சிலிர்த்தது. இந்தப் பாடலை எழுதியற்குப் பின் வேறு எதையும் எழுதவே எனக்குத் தோன்றவில்லை என்றார். அத்வைத அனுபூதியை ஒரு கணமேனும் தன் வாழ்க்கையில் உணர்ந்த ஒருவரால் தான் இப்படிச் சொல்ல இயலும். இசைஞானியின் பாதம் பணிகிறேன்.

அற்புதம் அற்புதம் அற்புதமே – அந்தப்
பரம்பொருள் மண்ணிலே மனிதனாய் வந்தது…

மரணத்தை வரவழைத்தணைத்தானை
மானிடன் எனத்தகுமோ
அளப்பரும் சுயமாய் நின்றானை
வானவன் எனத்தகுமோ
ஞானத்தின் முதல்வன் அவன் போல
ஞானியர் உலகில் உண்டோ
தவத்தினில் தனித்த தன்மையன் போல்
தவத்தோர் எவரும் உண்டோ – இது
அதிசயம் அல்லாது வேறென்னவோ…

நிகழ்ச்சியின் முடிவில், “இதயம் கோயில் தான் – ஆனால் அதுல உதயமாகறது ஒரு பாடல் இல்ல…” என்றார். ‘எத்தனை எத்தனையோ’ என்பதை வாயால் கூறாமால் கையை உயர்த்திக் காண்பித்தார் நமது சமகாலத்தின் சங்கீத ரிஷி.

 

நன்றி : ஜடாயு | தமிழ்ஹிந்துLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *