நடிகை சரோஜாதேவி தனது பிறந்த நாளை கொண்டாடி மனம் திறந்து பேசினார்


பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது பிறந்த நாளை சென்னையில் எளிமையாக கொண்டாடினார். அப்போது அவர் மனம் திறந்து பேசினார்.

இப்போது வந்துள்ள நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்கள் அனைவருக்கும் திரைத்துறையில் நடிகர்களின் கஷ்டநஷ்டங்கள் அனைத்தும் நன்கு அறிந்து அனைவரும் மிகவும் துடிப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு புகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில் தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திப்பது உண்டு. இறைவன் என்னை நல்ல இடத்தில் வைத்துள்ளான். என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை மட்டும் மறக்கவே இயலாது. அவரும் நானும் இணைந்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றினார். எதிர் பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அதன் பிறகு நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தவர் அவர். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி, அவர் இல்லை என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை. நான் சிவாஜியுடன் நடித்துள்ளேன். அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். ஜெமினி கணேசன் எனக்கு நல்ல நண்பர். நடிகர் சிவகுமார் மிகச்சிறந்த மனிதர். அவருடைய புதல்வர்களும் அதே போல் மிகச்சிறந்த முறையில் வளர்ந்துள்ளனர்.

முற்காலத்தில் நமது தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திரையுலகங்கள் இணைந்திருந்தது. இப்படி பாரம்பரியமிக்க நமது நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. சீக்கிரமாக நடிகர் சங்கத்துக்கான இடத்தில் நடிகர் சங்க கட்டிடம் வரும். நடிகர் சங்கம் சார்பாக என்னை எந்த நிகழ்வுக்கு அழைத்தாலும் நான் கண்டிப்பாக வருவேன்.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் ரூபாய் 5 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இதை வழங்கியுள்ளேன். வயதான நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் நடிகர் சங்கம் ஓய்வூதியும் வழங்கவுள்ளதாக நான் தெரிந்து கொண்டேன். இது மிகச்சிறந்த விஷயமாகும்.

நிகழ்ச்சியில் சிவக்குமார், மனோபாலா, குட்டி பத்மினி, உதயா, ரமணா, ஹேமச்சந்திரன், அயும்கான் ஆகியோர் கலந்து கெண்டனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *