“ஆபத்தான பயணத்தை மேலும் ஒருமுறை நீட்டித்து விஜய்யின் படத்தை கண்டுகளிப்போம்” | சோழநாயக்கர் வம்சா வழியினர்


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது நிலம்பூர் வனப்பகுதி. இங்குள்ள பூச்சம்பாறையில் சோழநாயக்கர் வம்சா வழியினர் வசித்து வருகிறார்கள்.

இங்குள்ள வாலிபர்கள் வருடத்திற்கு 2 முறை இரவு பகல் பாராமல் நடந்தே ஊட்டிக்கு சுற்றுலா வருவது வழக்கம். பயங்கர வனப்பகுதியில் தொடங்கும் இவர்களது பயணம் மிக அபாயகரமானது. புலி, சிங்கம், காட்டுயானைகள் அதிகம் உள்ள இந்த வனப்பகுதியில் கொடிய விஷமுள்ள பாம்புகளும் உள்ளன.

பூச்சம்பாறையில் இருந்து ஊட்டி எல்லமலை வரை சுமார் 70 கி.மீட்டர் தூரம் நடக்கும் இவர்கள் கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருந்தால் அதன் வாடையை வைத்தே அது என்ன மிருகம் என்று கணித்து மாற்றுப்பாதையில் செல்வார்கள்.

அரிசி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் இவர்கள் காட்டில் கிடைக்கும் வாசனை பொருட்களுடன் சிறுசிறு விலங்குகளை வேட்டையாடி உண்பார்கள். வனப்பகுதியில் கிடைக்கும் தேன், வாசனை பொருட்களை சேமித்து ஊட்டியில் விற்பனை செய்து பணம் ஈட்டுவார்கள்.

இதுகுறித்து சோழநாயக்கர் சங்கத்தலைவர் மணி கூறும்போது, எங்கள் வழக்கப்படி வருடத்துக்கு 2 முறை எங்கள் பகுதி வாலிபர்கள் ஊட்டிக்கு சென்று வருவோம். மிக ஆபத்தான நடைபயணம் தான். ஆனால் வனப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கு மிருகங்களின் நடமாட்டம், வாடை, தடயம் உள்ளிட்டவைகள் அத்துப்படி. அதனால்தான் பல ஆண்டுகளாக எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இதுவரை சுற்றுலா சென்று வருகிறோம்.

உதராணத்துக்கு காட்டு யானைகளை கண்டால் அது காதை ஆட்டும்போது ஆபத்து எதுவும் இல்லை. அது சாதாரணமாக உள்ளது என்று அர்த்தம். காது ஆட்டாமல் நின்றால் அது ஆத்திரத்தில் உள்ளது என்று அர்த்தம். அப்போது அது கண்ணில் படாமல் தப்பிப்பது நல்லது. இல்லை என்றால் யானையால் மரணம் நிச்சயம்.

இந்த பயங்கர வனப்பகுதி பயணம் மிகுந்த ஆபத்து என்றாலும் எங்கள் குல வழக்கப்படி இது ஒரு பொழுதுபோக்குதான். ஊட்டியில் உள்ள தியேட்டர்களில் நடிகர் விஜய் படம் திரையிட்டால் நாங்கள் இந்த ஆபதான பயணத்தை மேலும் ஒருமுறை நீட்டித்து விஜய்யின் படத்தை கண்டுகளிப்போம் என்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *