இரண்டு முறை தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்


இரண்டு முறை தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (வயது 41) சென்னையில் மரணம் அடைந்தார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முத்துக்குமார், சிகிச்சை பலன்இன்றி இன்று மரணமடைந்தார்.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 1975-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இயக்குநர் ஆகவேண்டும் என்ற நோக்குடன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்து, சிறந்த பாடலாசிரியர் ஆனார். சீமானின் ’வீர நடை’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். முத்துக்குமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 1,500- க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக 2012ம் ஆண்டில் மட்டும் 103 பாடல்களை எழுதி உள்ளார். கிரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.
தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 2005-ம் ஆண்டு பெற்றார் கஜினி படத்திற்கு. பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
சாமி, காதல் கொண்டேன், பிதாமகன், கில்லி, கஜினி, நந்தா, தீபாவளி, புதுப்பேட்டை,  7 ஜி ரெயின்போ காலனி, காதல், சந்திரமுகி, சிவாஜி, கற்றது தமிழ், அங்காடித் தெரு, பாஸ் என்ற பாஸ்கரன், காக்காமுட்டை, தெறி, தெய்வத் திருமகள், தங்க மீன்கள், சைவம், துப்பாக்கி, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவை. இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
தங்க மீன்கள் மற்றும் சைவம் படத்தில் அவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு… அழகு… பாடலுக்கும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர்.
முத்துக்குமார் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதிஉள்ளார். புத்தகங்களையும் எழுதிஉள்ளார். நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு), அனா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். நா.முத்துக்குமார் – தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதம்) என்ற மகளும் உள்ளனர்.
நா.முத்துக்குமார் பிரிவு தமிழ் திரையுலக்கிற்கு பெரும் இழப்பு. தமிழ் திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *