இதுவரை 8 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன


1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை ஆஸ்கார் விருதுக்காக ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’  ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன.

இதுதான் அனைவரும் அறிந்த புள்ளிவிவரம். ஆனால் 1957ல் ஆரம்பித்து ஆஸ்கருக்காக அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலைப் பார்த்தால் பல சுவாரசியப் புள்ளிவிவரங்கள் தென்படுகின்றன.

இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய படத்துக்கான போட்டிக்குப் படத்தை அனுப்பவேண்டும் என்றால் ரூ. 50,000 கட்டணம் கட்டவேண்டும். இந்த வருடம் 30 படங்கள் போட்டியிட்டுள்ளன. தமிழிலிலிருந்து அனுப்பப்பட்ட படங்கள் – காக்கா முட்டை, குற்றம் கடிதல். (சென்ற வருடம் – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் கோச்சடையான்).

இந்த வருடப் போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள், அக்டோபர் 1,2014 முதல் செப்டெம்பர் 30, 2015 வரைக்குள் ரிலீஸாகியிருக்கவேண்டும். செப்டெம்பர் 25ம் தேதி வெளியாகும் படமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எஃப்.எஃப்.ஐ. இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. படம், குறைந்தபட்சம் 7 நாள்களாவது ஓடியிருக்கவேண்டும் என்றும் கூடுதல் விதிமுறை. ஆனால் செப்டெம்பர் 23ம் தேதியே முடிவை வெளியிட்டுவிட்டார்கள்!

1957ல் ஆரம்பித்து இதுவரை 47 இந்தியப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 31 ஹிந்திப் படங்கள். (ஹேராம் உள்ளிட்ட 5 படங்கள் ஹிந்தியுடன் சேர்த்து இன்னொரு மொழிப் படமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.)

ஹிந்திக்கு அடுத்து அதிகமாக ஹாலிவுட் விருதுக்கு அனுப்பப்பட்டதில் தமிழுக்கு இரண்டாமிடம். இதுவரை 8 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறந்த கலைப்படங்களை எடுக்கும் வங்காளம், மராத்தி, கன்னடம், மலையாளம் மொழிப் படங்களை விடவும் தமிழுக்குக் கூடுதல் வாய்ப்பு என்பது ஆச்சரியமாக இருக்கிறது. முதல்முதலில் தேர்வான தமிழ்ப் படம், தெய்வ மகன் (1969). கடைசியாக, ஹேராம் (2000).

1987 முதல் 2000 வரை மட்டும் 7 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த 14 வருட காலகட்டத்தில் கிட்டத்தட்ட சமஅளவில் தமிழும் (7) ஹிந்தியும்(6)  தேர்வாகியுள்ளன. 1993, 1994 வருடங்களில் இரண்டு ஹிந்திப் படங்கள் தேர்வாயின. உடனே அடுத்த இரண்டு வருடங்கள் (1995, 1996) தமிழ்ப் படங்கள் தேர்வாகின.  ஆஸ்கர் தேர்வு என்கிற வகையில் தமிழ் சினிமாவுக்குப் பொற்காலமான காலகட்டம் அது.

1985 முதல் 2000 வரை கமல் கதாநாயகனாக நடித்த 7 படங்கள் ஆஸ்கருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. (அமீர் கான் படங்கள் – 4) கமலின் ஆஸ்கர் கனவு தீவிரமாக இருந்த சமயம் அது. இருந்தாலும் குணா, மகாநதி, அன்பே சிவம் போன்ற கமலின் முக்கியமான படங்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டவில்லை.

 மணிரத்னத்தின் 2 படங்கள் (நாயகன், அஞ்சலி) தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் மிக ஜனரஞ்சகமாக படங்கள் எடுக்கும் ஷங்கரின் இரு படங்களுக்கும் (இந்தியன், ஜீன்ஸ்) இந்தப் பெருமை கிடைத்ததுதான் இன்னொரு ஆச்சரியம்.

2 மலையாளப் படங்கள் மட்டுமே ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு தெலுங்குப் படத்துக்காவது இந்த கௌரவம் கிடைத்தாலும் (ஸ்வாதி முத்யம்), தேசிய விருதுகளில் முன்னிலை வகிக்கும் கன்னடத் திரையுலகுக்கு ஒருமுறைகூட இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

2000க்குப் பிறகுதான் தமிழில் வித்தியாசமான முயற்சிகள் அதிகம் நடக்கின்றன. ஆனால் கடந்த 15 வருடங்களில் ஒரு தமிழ்ப் படத்தாலும் ஆஸ்கர் பக்கம் எட்டிப் பார்க்கமுடியவில்லை.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *