தனுஷ் எனது மகன் என்னுடைய மகனேதான் | டைரக்டர் கஸ்தூரி ராஜா


“நடிகர் தனுஷ் என் மகன்தான்” என்று படவிழாவில் டைரக்டர் கஸ்தூரி ராஜா பேசினார்.

நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்று மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி உரிமை கொண்டாடுகிறார்கள். இவர்கள் மேலூர் கோர்ட்டிலும் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

சென்னை வடபழனியில் நடந்த வி.கே.மாதவன் தயாரித்து ஜெய் செந்தில்குமார் இயக்கத்தில் அர்ஷா-சாரா ஜோடியாக நடித்துள்ள ‘பார்க்க தோணுதே’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கலந்து கொண்டார். அப்போது தனுஷ் பற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்து கஸ்தூரிராஜா பேசியதாவது:-

“நடிகர் தனுஷ் எனது மகன்தான். இதில் சந்தேகம் இல்லை. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 4 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கிடைத்தது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. எங்களுக்கு செல்வராகவனும் தனுசும் மகன்களாக பிறந்தார்கள். ஒரு மகளும் உள்ளார். செல்வராகவனுக்கு நடிக்க ஆசை இருந்தது. ஆனால் அவர் இயக்குனராகி விட்டார்.

தனுசுக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. பள்ளியில் தனுஷ் படித்துக்கொண்டு இருந்தபோது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுக்க தயாரானேன். அந்த படத்தில் தனுசை நடிக்க வைக்க முடிவு செய்தேன். தனுசிடம் அதில் நடிக்கும் படி கேட்டபோது எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லி ஒதுங்கினார். ஆனாலும் வற்புறுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. பெயர் புகழ். பணம் எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் அப்போதைய மகிழ்ச்சி இல்லை. யாரோ ஒருத்தர் தனுசை எனது மகன் என்கிறார். தனுஷ் எனது மகன். என்னுடைய மகனேதான்.”  இவ்வாறு கஸ்தூரி ராஜா பேசினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *