சிவகார்த்திகேயன் | இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன்


வேலைக்காரன் படத்தின் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடியில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் 15-வது படம் இதுவாகும். நயன்தாராவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழா தந்தி டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

தனி ஒருவன் படத்தை பார்த்ததும் டைரக்டரிடம் போனில் பேசினேன். இதுபோல் மிகவும் வலுவான கதை செய்யவேண்டும் என விரும்புவதாக கூறினேன். எனவே, மோகன் ராஜாவை நேரில் போய் பார்த்தேன். அவரும் என்னுடன் படம் செய்வதற்கு ஒப்புதல் தந்தார். இருவரும் சேர்ந்து அப்போதே வேலைக்காரன் என தலைப்பையும் தேர்வு செய்தோம். இந்த படத்தில் முழுக்க முழுக்க என்ன கிடைத்தாலும் இந்த பெருமை மோகன் ராஜாவையே சேரும்.

மேலும், மலையாள நடிகர் பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். அவருடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

நயன்தாராவுடன் முதல் முறையாக நடித்துள்ளேன்.  ஏகன் படத்தில் தான் முதலில் அவரை பார்த்தேன். நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது தான் அவரது வெற்றிக்கான காரணம்.

அனிருத் இல்லையென்றால் சிவகார்த்திகேயன் இல்லை என டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்து வருகிறேன். அந்த கருத்தில் எனக்கு பெருமை தான். எனது வாழ்க்கையில் பாதிக்கு மேல் உங்களுக்கு கொடுத்துள்ளேன், உங்களுக்கு இது 15-வது படம். ஆனால், இது எனக்கு 11வ-து படம்.

இந்த படத்துக்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இனி விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன். ஏனெனில் நான் நடிக்கும் விளம்பரங்கள் மூலம் சிறு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு.

என்னை நல்ல மனிதனாக மாற்றிய படம் இது. அடித்தட்டு மக்களின் கேள்விகள், ஆசைகள் நடக்குமா என்பதை விளக்குவதே இந்த படம். இந்த படத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் வரும் பாடலின் வரிகளில், ஒரு முறையே வாழும் வாழ்க்கை, அதை பயனுறதாக்கு என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த படத்தில் நடித்த சதீஷ் கூறுகையில் ‘‘ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாட்சா படம் கொடுத்த பெருமையைப்போல், கபடி வீரர்களுக்கு கில்லி படம் கொடுத்த பெருமையைப்போல், நரைச்ச முடியைக் கொண்டவர்களுக்கு வீரம் படம் கொடுத்த பெருமையைப் போல் வேலைக்காரர்களுக்கு பெருமையையும், புகழையும் கொடுக்கும் படம் வேலைக்காரன்’’ என்றார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *