சிவகாத்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை- தனுஷ்


தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே தனுஷ், அனிருத், வேல்ராஜ் கூட்டணியில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் ‘தங்கமகன்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் குறித்து தனுஷ் கூறும்போது, ‘தங்கமகன்’ குடும்ப பொழுதுபோக்கு படம். எனக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். எமி ஜாக்சன் காதலியாகவும், சமந்தா மனைவியாகவும் நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

எனக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். ஒரு பெரிய இயக்குனர் என்று பார்க்காமல் அனுபவம் வாய்ந்த நடிகராக நடித்திருக்கிறார். சிறந்த அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். வேல் இயக்கத்தில் ஏற்கனவே ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற வெற்றி படத்தை கொடுத்திருக்கிறோம். அதே கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படமும் வெற்றி பெறும்’ என்றார்.

மேலும், தனுஷிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு,

கேள்வி: இன்று ரஜினி பிறந்தநாள். மருமகனாக அவருக்கு வாழ்த்துக்கள் கூறினீர்களா?

பதில்: நான் முதலில் ரஜினியின் தீவிர ரசிகன். மருமகன் அப்பாற்பட்டது. ஒரு ரசிகனாக என்னுடைய வாழ்த்துக்களை கூறி விட்டேன்.

கேள்வி: ஹீரோவான நீங்கள் வுண்டர்பார் என்னும் தயாரிப்பு நிறுவனம் வைக்க காரணம் என்ன?

பதில்: வுண்டர்பார் நிறுவனம் மூலம் திறமைசாலிகளை கண்டுபிடித்து வாய்ப்பு கொடுக்கவும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்தோம். அந்த வகையில் பலருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறோம். வாய்ப்பு கொடுத்தவர்களை பற்றி கூறினால், நான் சொல்லி காட்டுவதுபோல் ஆகும். இருந்தாலும் அனிருத் என்ற திறமை சாலிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். அனிருத் என்னுடைய தம்பி. அதனால் நான் என்ன சொன்னாலும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்.

கேள்வி: சிவகார்த்திகேயனுடன் பிரச்சனை? அதனால்தான் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்களா?

பதில்: சிவகாத்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வுண்டர்பார் நிறுவனத்தால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் அவரை வைத்து படம் தயாரிக்கவில்லை. சிவகார்த்திகேயன் சிறப்பாக வளர்ந்திருப்பது பெருமையாக கருதுகிறேன்.

கேள்வி: ரஜினி பட டைட்டில் வைக்க காரணம்?

பதில்: தற்போதுள்ள நிலையில், ஒரு படத்திற்கு டைட்டில் வைப்பது கடினமாக இருக்கிறது. ‘தங்க மகன்’ டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்தோம்.

கேள்வி: சிம்புவுடன் பிரச்சனையா?

பதில்: அடிக்கடி சிம்புவுடன் பிரச்சனை என்ற கேள்வி வருகிறது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்று இல்லை. சிம்புவும் நானும் நல்ல நண்பர்கள்.

கேள்வி: பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு என்ன தலைப்பு?

பதில்: இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

கேள்வி: எந்த மாதிரி படங்களை தயாரிக்க விருப்பம்?

பதில்: ‘காக்கா முட்டை’ படம் போல் தயாரிக்க ஆசை.

கேள்வி: விசாரணை படம் என்ன ஆச்சு?

பதில்: விசாரணை படத்தை பல விருதுகளுக்கு அனுப்பி இருக்கிறோம். அதனால் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் வெளியாகும்.

கேள்வி: ‘மாரி’ படம் போல் மாஸ் படத்தை கொடுத்துவிட்டு, தங்க மகன் என்ற குடும்ப படத்தில் நடித்ததன் காரணம்?

பதில்: ஒரே மாதிரியான கதைகளில் நடிக்க விருப்பம் இல்லை. வித்தியாசமான கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன்.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மூன்று பேர்?

பதில்: முதல் அம்மாதான். எந்த நேரத்திலும் என்னை பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர். இரண்டாவது என் மனைவி ஐஸ்வர்யா. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். மூன்றாவது கடவுள். இவர்கள் மூன்று பேரும் என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள்.

கேள்வி: சின்சியாரிட்டி, லக், பணம் இதில் எது முக்கியம்?

பதில்: இவை மூன்றுமே இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

கேள்வி: ஒரு படம் எப்படி வெற்றி பெறும்?

பதில்: ஒரு படம் எப்படி வெற்றி பெறும் என்பதை யூகிக்க முடியாது.

இவ்வாறு கேட்ட கேள்விகளுக்கு தனுஷ் பதிலளித்தார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *