பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை காதலனிடம் போலீசார் விசாரணை


பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை தொடர்பாக அவரது காதலனிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா (வயது 24) இந்தி தொடர்களில் நடித்து பிரபலமானவர். நடிகை பிரதியுஷா மும்பையில் தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இதுதொடர்பாக அவரது காதலரும், டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ராகுலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

ராகுலிடம் போலீசார் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது ராகுலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார். குறைந்த ரத்த அழுத்தமும் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ராகுலுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில், இதுவரை நடத்திய விசாரணையில் போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. பிரதியுஷாவும், ராகுலும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் இடையே அடிக்கடி மோதலும் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆனால் ராகுல் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஒரு உறுதியான ஆதாரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. பண பிரச்சினையும் காரணம் அல்ல என்பதும் தெளிவாகி உள்ளது. தங்கள் மகள் தற்கொலைக்கு ராகுல் தான் காரணம் என்று பிரதியுஷாவின் பெற்றோர் முதலில் ஆவேசமாக கூறினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அவர்கள் ராகுலுக்கு எதிராக ஆணித்தரமான குற்றச்சாட்டுகள் எதையும் தெரிவிக்கவில்லை. இருவரும் அவ்வப்போது தகராறு செய்துகொள்வதும், பின்னர் சேர்ந்துவிடுவதும் வாடிக்கை தான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே ராகுல் உடல்நிலை தேறிய பிறகு அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், அவர்கள் இருவரின் பேஸ்புக், டுவிட்டர் கணக்கு களை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிரதியுஷாவின் வீட்டில் இருந்த 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *