தியாகு தனது மனைவி தாமரை மற்றும் மகன் சமரனிடமும் மன்னிப்பு கோரி கடிதம்


தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவரும், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரையின் கணவருமான தியாகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அதன் தொடர்ச்சியாக 3 மாத இடைவெளிக்கு பின் கவிஞர் தாமரை கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

அவரது போராட்டத்தை நிறுத்தி வீடு திரும்ப வேண்டும் என்றால் தியாகு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கவிஞர் தாமரை தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரவு 9 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாமரையிடம் மன்னிப்பு கேட்பதற்காக தியாகு வந்தார்.

தியாகு தனது மனைவி தாமரை மற்றும் மகன் சமரனிடமும் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை எழுதி கொண்டு வந்திருந்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஓவியர் வீர.சந்தானம், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு 3-ந்தேதியும், இன்று(நேற்று) காலையும் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் (தாமரை) கோரியிருந்தபடி நடுநிலையான விசாரணை குழு அமைக்கும் பொறுப்பை ஓவியரும், வழக்கறிஞரும் ஏற்று கொண்டுள்ளார்கள்.

சென்ற நவம்பர் 23-ந்தேதி நான், வீட்டை விட்டு வெளியேறியதற்கு அடிப்படையாகவும், உடனடியாகவும் அழுத்தமான காரணங்கள் இருப்பினும், அந்த வெளிநகர்வினாலும், அடுத்து வந்த 3 மாத கால பிரிவினாலும், அனைத்துக்கும் உச்சமாக கடந்த 7 நாள் தர்ணா போராட்டத்தாலும் உங்களுக்கும் (தாமரை), சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடல் துன்பத்துக்காகவும், மன வேதனைக்காகவும் உளமார வருந்துகிறேன். நான் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருப்பதை ஏற்று உங்கள் போராட்டத்தை கைவிட்டு இல்லம் திரும்ப வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

அதனை படித்து காட்டிய தியாகு மேற்கொண்டு நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, கவிஞர் தாமரை நிருபர்களிடம் கூறியதாவது:-

இது ஒரு முழுமையான தீர்வு கிடையாது. நேரில் வந்தவர் கடிதம் மூலம் மன்னிப்பு கூறி உள்ளார். இது ஒரு அரசியல் நிகழ்வு போலவே உள்ளது. எங்கள் வீடும் போர்க்களம் போலவும், அரசியலாகவும் தான் இருந்தது. நீதிமன்ற தீர்வுக்கு நான் ஒருபோதும் போவதில்லை. விவாகரத்து எளிதான தீர்வு. அதை நான் ஏற்கவில்லை. அவரை அசிங்கப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ தர்ணா போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதுவரை நான் அவரை பற்றி எதுவும் கூறவில்லை. இனி, விசாரணை குழுவினர் விசாரித்து, பிரச்சினைக்கு தீர்வு காணட்டும். அதில், உண்மையிலேயே என் மீது தவறு உள்ளதா? அவர் மீது தவறு உள்ளதா? என்பதை கண்ட பிறகுதான் முழுமையான முடிவு எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தியாகு, கவிஞர் தாமரையிடம் மன்னிப்பு கோரியபோது, ஓவியர் வீர.சந்தானம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *