மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற இந்தியா முடிவு!


இந்தியா – இலங்கை இடையே, கடல் வழி வர்த்தகம், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், வங்கக் கடலில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டது.

இதன் மூலம், மத உணர்வுகளை புண்படுத்தாமல், சுமுகமான முறையில் வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வல்லுனர்களால் முன் மொழியப்பட்ட வழித்தடத்தில், கடலின் அடியில், ஹிந்துக்களால் புனிதமானதாக கருதப்படும், ராமர் பாலம் இருப்பதால், இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எனினும், முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், தீவிரம் காட்டியது. அவசர கதியில், ராமர் பாலத்தை இடித்து, அதன் வழியாக, புதிய வழித்தடத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியது.

இதனால் கொதிப்படைந்த ஹிந்துத்வா அமைப்பினர், சேது சமுத்திர திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி 2007 இல், சேது திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

´ராமர் பாலத்தை இடித்தோ, அதற்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ, எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது´ என, சுப்பிரமணியன் சாமி தன் தரப்பு வாதத்தில் எடுத்துரைத்தார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ´ராமர் பாலத்திற்கும், மத உணர்வுகளுக்கும் தொடர்பில்லை, ராமர் என்பவர் இதிகாசத்தில் கூறப்பட்டுள்ள கற்பனை கதாபாத்திரமே´ என, தன் தரப்பு வாதத்தை முன் வைத்தது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசின் வாதத்திற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை எழுந்ததை அடுத்து, அந்த கருத்து திரும்ப பெறப்பட்டது.

எனினும், இந்த திட்டத்திற்காக, ஏற்கனவே, 766 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், திட்டத்தை நிறைவேற்றுவதால் கிடைக்கும் பலன் கருதி, இதை செயல்படுத்த வேண்டும் என 2013 இல் முந்தைய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2014 இல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது.

தொழில், வர்த்தக முன்னேற்றம் கருதி, ராமர் பாலத்திற்கு சேதம் விளைவிக்காமல், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, தற்போதைய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையே, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக, சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் கருத்தை தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிங்கி ஆனந்த், நேற்று, மத்திய அரசின் விளக்கத்தை தாக்கல் செய்தார்.

அதில், ´நாட்டின் நலன் கருதி, ராமர் பாலத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில், மாற்று வழித்தடத்தில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும்; அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்´ என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் தரப்பில், உரிய விளக்கம் அளிக்கப்பட்டதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக, உச்ச நீதிமன்ற அமர்வு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், மத உணர்வுகளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாமல், மாற்று வழித்தடத்தில், சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், சுமுகமான முறையில் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தவும் வழி ஏற்பட்டுள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *