சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்


     

வந்தாரை வாழவைக்கும் வவுனியாவை நோக்கிச் செல்பவர்களைத் தாங்கிப் பயணிக்கிறது புலிப்படையின் புளியங்குளம் வரையிலான தமிழீழப் போக்குவரத்துக் கழகப் பேரூந்து. கருநீளக் காற்சட்டையும் இளநீல வர்ணச் சேர்ட்டும் அணிந்த சாரதி பேரூந்தை வலுவாக மிதிக்க மிதிக்க பேரூந்தின் ரயர் நாக்குகள் வீதியை நக்கியும் நக்காததுமாய் விரைகிறது. ஆங்காங்கே ஆமிகளின் செல்லுக்கும் பீரங்கிக்கும் விழுப்புண்ணடைந்து கிடக்கும் தார்வீதியில் சாரதி வேகத்தைக் குறைத்து எங்கள் ஈழப்பெண்கள் குடங்களிலே நீரை நிறைத்து வளைந்து வளைந்து வீடு நோக்கிப் போவது போல ஒரு மிடுக்கோடு பேரூந்தைச் செலுத்தினார். அரச உத்தியோகத்தர்கள், மளிகைச் சாமான் வாங்குபவர்கள், மண்ணெண்ணை வியாபாரம் செய்பவர்கள் என்று உயிருக்குப் பயப்படாத சிலரே அப்பொழுதெல்லாம் வவுனியாவைக் காணத் துணிவார்கள்.

    அந்த பஸ்ஸிற்குள் கட்டாரிலிருந்து சித்தப்பா அனுப்பிய வீசாவையும் ரிக்கட்டையும் அதனோடு கூடவே பயணிக்கும் பாஸ்போர்ட்டையும் ஊரில்  கைக்கடன் பட்ட சிறுதொகைப் பணத்தோடும் சுதா ஜன்னற் கரை அருகில் பாதி திறந்த கண்ணாடியால் நகர்ந்து கொண்டிருக்கும் கிளிநொச்சியின் அழகைப் பார்த்தவாறே பயணித்தான். இன்னும் எத்தனை காலம் கழித்து இந்தப் புனித பூமியைப் பார்ப்பேனோ? மாவீரத் தெய்வங்களைத் துதிப்பேனோ? என்று முறுகண்டிப் பிள்ளையாரை வணங்கி வீட்டு வறுமையின் விஸ்வரூபத்தை நினைந்தவனாய் வெளிநாடு என்ற ஆசை ஊஞ்சல் அடிமனதில் ஆடிக்கொண்டிருக்கப் பயணத்தைத் தொடர்ந்தான். சுற்றும் முற்றும் பார்க்கிறான் பஸ்ஸிற்குள் அவனைப் போலவே வவுனியா மண்ணை முதல் முதலாய்க் காண ஆவலோடு சிலர் காத்துக்கிடந்தனர். கலைப்பிரிவில் ஏஎல் படித்த அவன் ஓயாத போருக்கிடையில் படித்து முடித்ததே பெரிய விசயம் என்று ஊரவர்கள் சொல்லும் போதெல்லாம் தனக்குள்ளே புளகாங்கிதப்பட்டுக் கொள்வான். ஆயினும் தங்கள் காணியைத் துப்புரவு செய்து உழுது பயிரிட்டு நாளாந்த வாழ்க்கையை நடாத்துவதை பெருமையாகக் கொள்பவன். வயல் வேலைகள் அதிகம் செய்வதால் அவனது உடற்கட்டு “நல்ல ரெயினிங் எடுத்த இயக்கம் போல கிடக்கு” என்று மச்சாள் நந்தினி சொல்லும் போதெல்லாம் உள்@ரச் சிரிப்பான். பேரூந்தின் வேகத்தைச் சாரதி சற்றுக் குறைத்துப் பாட்டுப்பெட்டியை மூட,

     “புளியங்குளம் வந்திட்டு எல்லாரும் பாக்குகளத் தூக்கிக்கொண்டு இறங்கங்கோ ”

நடத்துனர் பெரிதாகச் சத்தம் வைக்கிறார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயப்பகுதியில் எல்லோரும் வரிசையாக இறங்கினர். சுதாவும் தன்னை ஆளடையாளப்படுத்திவிட்டு ஆமியின் கட்டுப்பாட்டிற்குள் நடக்கத் தொடங்கினான். அது ஓர் மயான பூமிபோல் மௌனமாய் வெறிச்சோடிக் கிடந்தது. “நீங்க வேற நாடையா நாங்க வேற நாடு நிறைய வேறுபாடையா நிறைய வேறுபாடு” என்று அவன் கேட்டுப் பழகிய பாடல்தான் அவனுக்கு நினைவு வந்தது. ஒவ்வொருவராக ஆமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி நடந்து சென்றனர். “இனம் புரியாத ஓர் அச்சம் அனைவரையும் கவ்விக்கொண்டது ”

     “தம்பி, நீ ஓமந்தைப் பொயிண்டுக்குள்ள போனதும் ரெண்டு பக்கமும் முள்ளுக்கம்பி அடிச்ச ரோட்டுப் போகும் அதால நேராப் போகாம இடது கரையால ஒராள்ப் போகக் கூடிய மாதிரி கொமாண்டோக் கம்பி அடிச்ச பாதை போகும் அதால போ…போகேக்குள்ள அங்கால இஞ்சால திரும்பிப் பாக்காமப் போகவேணும்”“இடையில ஐசி ஆர் சி கூட நிக்கும் அப்ப கூடத் திரும்பிப் பார்க்காம நேர பார்த்துக்கொண்டு போகவேணும்”“அப்ப தான் ஆமிக்காரங்கள் உன்னைச் சந்தேகப்படமாட்டாங்கள்” தாய் மாமன் ரத்தினத்தார் பயணம் சொன்ன போது கூறிய இறுதிக் குறிப்புகள் நெஞ்சறையிலிருந்து காதுகளுக்கும் மூளைக்கும் செய்தியைக் கடத்திக் கொண்டிருந்தது.

     ரத்தினத்தார், வவுனியாக் கச்சேரியில கிளார்க்காக வேலை செய்கிறார். அவர் அடிக்கடி வேலை விடயமாக வவுனியா போய் வாறதால எப்பிடி எப்பிடி முகத்த வச்சுக்கொண்டு போனால் எப்பிடி எப்பிடிப் போகலாம் எண்டும் ஆமிக்காரர் துருவித் துருவிக் கேக்கிற கேள்விக்கெல்லாம் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்றும் ஊருக்கு வர்ர போது சொல்லிக் கொடுப்பார். அவற்ற மூத்த மகள் தாரணிக்கு இந்தக் கிழமை தண்ணி வாக்கிறதால மனுசன் ஒரு கிழமை லீவப்போட்டுட்டு வீட்ட நிக்கிறார் இல்லாட்டி மாமாவோட வவுனியா போயிருக்கலாம்” என்று நினைத்துக் கொண்டே கொண்டுவந்த சூட்கேஷை வலது கையில் பிடித்துக்கொண்டு புழுதி படிந்த சோதனைச் சாவடிக்குள் கால் பதித்தான்.

     “ஓமந்தை … சோதனைச் சாவடி உங்களை அன்போடு வரவேற்கிறது ” என்ற வாசகம் மரப்பலகையில் கறுத்தப் பெயிண்டால் ஆமிப் பச்சைக் கலரின் மேல் எழுதப்பட்டிருந்ததை வாசித்தான். பள்ளிக்கூடத்தில படிக்கிற காலத்தில அவன்ர தமிழ் வாத்தியார் சொன்ன வார்த்தையொன்று அவனுக்கு அப்போது திடீரென நினைவுக்கு வந்தது. “ எங்கட தமிழ்ச் சனங்கள சோதனை பண்ணிச் சா அடிக்கிற படியால தாண்டா அதைச் சோதனைச் சாவடி எண்டு ஆமி எழுதி வச்சிருக்கான்” இந்த மாதிரியான கெதிக்கலக்கத்திலயும் அவனுக்கு சிரிப்பு வந்தது ஆனாலும் உதட்டோடு அதனை நிறுத்திவிட்டு நடந்தான். “எதிரிகளைக் கண்டால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்ட சமுதாயத்தில் வீட்டின் வறுமைத் தூரிகை வரைந்த பசி ஓவியத்தை கலைக்க முற்பட்ட பயணம் தான் இது.  என்பதை நினைத்துக் கொண்ட போது தான் உறவுக்காரர் ஒருவர் சொன்ன உபாயம் மின்னலாய் மூளையைத் தாக்கியது.

     “தம்பி, நீ ஆமிப் பொயிண்டைக் கண்டதும் உன் பாஸ்ட்போர்ட்டையும் ரிக்கெட்டையும் சேர்ட்டின் மேல்ப் பொக்கட்டுக்குள்ள ஆமிட கண்ணுக்கு தெரியுற மாதிரி வை” அப்பதான் ஆமி கொஞ்சம் சந்தேகத்தைக் குறைச்சு உன்ன வவுனியாக்குள்ள விடுவான்”  முள்ளுக்கம்பி வேலிக்கு இடையில் நின்று சூட்கேஷின் மேல் சிப்பை இழுத்து கையால் துழாவித் தேடி எடுத்து இரண்டையும் மேல்ப் பொக்கட்டில் சொருகியவனாக நிம்மதிப் பெருமூச்சு விட்டு நிமிர்ந்து பார்த்து நடந்தான்.

     வரிசையாக ஒவ்வொருவராகப் பதிவு செய்யப்பட்டனர். இருபத்தைந்து வயது ஆண்மகன் முதல் முதலாயத்; தான் வெறுத்து ஒதுக்கும் சீருடையில்  இராணுவத்தினர் இருப்பதைக் கண்டு  சற்றே நடுக்குற்றான்.

     “ தம்பி, ஆகலும் அவங்களைக் கண்டு முழுசினாலும் புடிச்சு அடைச்சுப் போடுவாங்கள் ” எண்டு ரத்தினம் மாமா சொன்னதும் நினைவுக்கு வந்தது.

     “போலின்ல வாங்க….. போலின்ல வாங்க…..” என்று சிப்பாய் ஒருவன் வன்மத்தோடு அதட்டியது எல்லோருக்கும் கேட்டது.

     “அம்மா.. போலிங் எண்டால் என்னம்மா? முன்னுக்கு வரிசையில்  நின்றிருந்த தாயை அவளது ஐந்து வயது மதிக்கத்தக்க மகன் கேட்பது காதில் விழுந்தது…. “உஷ்.! வாய மூடு என்று யார்மேலோ உள்ள பயத்தைக்  கையால் அதட்டி வாயின் மேல் சுட்டு விரலை வைத்து சமிக்ஞை செய்து நிறுத்தினாள்.

     “புல்லையோட நிக்கிற அக்கா முன்னுக்கு வாறது…

கை அசைத்துக் கூப்பிட்டான் மூன்று ஸ்டார் பூட்டிய ஆமிக்காரன். பிள்ளையை நடப்பித்துக்கொண்டே ஒரு கையால் உடுப்பு வாய்க்கினைச் சுமந்தபடி முன்னோக்கி நகர்ந்தார்.

     “எங்க போறது குழந்தையோட..?”

குறைந்த சுருதியில் கேட்டான் அந்த மூன்று ஸ்டார் ஆமி.

     “ஐயா… என்ர மனுசன் யாவாரஞ் செய்ய வவுனியாக்கு எண்டு வெளிக்கிட்டவர் வவுனியா வந்து சேரேலயாம் ஆமிக்காரர் அவர சங்தேகத்தில புடிச்சுக் கொண்டு போட்டினமாம் அதுதான் என்ர மனுசனப் பாக்க என்ர மகனோட வந்தனான் என்று குழறினாள் அந்தத் தாய். கண்கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாவை,

     “பேர் என்ன?”

     மேசையை வைத்து வருபவர்களின் பேரைப் பதிவு செய்யும் ஆமிக்காரி,

கையில் வைத்திருந்த பேனையால் தட்டிக் கேட்டாள்.

     “சுதாகரன்… வல்லிபுரம் சுதாகரன் ”

     “எங்க இருந்து வாறது?”

     “ விஸ்வமடு ”

     “ எங்க போறது?

     “ கட்டார் ”

அந்த ஆமிக்காரி சுதாவை மேலும் கீழுமாய்ப் பார்த்து விட்டு

     “ ஐசியக் தாறது….

அவன் பாஸ்ட்போர்ட், ரிக்கட், வீசாக்கடிதம்,ஐசி என எல்லாவற்றையும் நீட்டினான்.

     “ஐசிய மட்டும் தா..! சிங்களத்தில் பக்கத்திலிருந்த ஆமிக்காரிக்கு ஏதோ சொன்னாள். பதிவுகள் முடிந்ததும் இலங்கைப் பொலிஸ்ட சீருடைக் கலரில் திரை கட்டின தகரத்தால அடைச்ச ரூமுக்க ஆமிக்காரன் ஒருத்தன் உடம்பைச் செக் பண்ணினான். “ கால அகட்டு ” தன் சப்பாத்துக் கால்களால் சுதாவின் கால்களை அகட்டிவிட்டான். பின்னர் கைகளை அகட்டு என்றான். தோள் மூட்டிற்கு நேராகக் கையை நீட்டும் போது “எல் டீ டீ ரெயினிங் குடுத்திருக்கும் தானே..கைய அகட்டு ” தமிழினத்தின் மீதான வஞ்சம் அவன் வாயால்த் தெறித்தது. “புது வீட்டிற்கு முதல் முதல் சுண்ணாம்பு தீற்றுவது போல” மேலும் கீழுமாய்த் தடவினான்.

     ஹரி..ஹரி.. நீ அந்த ரெண்டாம் நம்பர் ரூமுக்குள்ள போ..

வழியனுப்பி வைத்தான் சோதனையிட்டவன்.

     “அப்பாடா ஒரு வழியாக ரெண்டு கண்டத்தைக் கடந்தாச்சு இன்னும் எத்தனை இருக்கோ? எண்ணிக்கொண்டே வரிசையாகப் போடப்பட்ட நான்கு கதிரைகளில் முதற் கதிரையில் அமர்ந்தான். முன்னால் ஒரு ஆமி செந்நிறக் கலர் ஒன்றரை லீட்டர் சோடாப் போத்தலின் மூடியைத் திருகித் திறக்க முனைந்து கொண்டிருந்தான். “வவுனியாவிற்குள் போனதும் இப்படி ஒன்றை வாங்கித் தனியாகக் குடிக்க வேணும் ”“இங்க இதுகள் நல்ல மலிவு.. எங்கட நாட்டில இதுகள் விலை” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே சுற்றும் முற்றும் விழிகளைப் புரட்டுகையில்.. கைக்குழந்தையோடு வந்த அம்மாவை விசாரித்த அந்த மூன்று ஸ்டார் ஆமி “உள்ள வா” அடித்தொண்டையால் அழைத்தவாறே இரண்டாம் இலக்க ரூமுக்குள் அழைத்துச் சென்றான்.

     நீண்ட நேர விசாரணைகளை நட்த்தினான் இவனோடு வந்த சனங்கள் வவுனியாக்குள்ளளே போய்ச் சேர்ந்திருப்பார்கள்.

     “ஐயோ… என்ர அம்மா… ஐயோ சேர் என்னை அடிக்காதீங்கோ..திடீரென சுதாவின் குரல் தொனித்தது. இந்தச் சாவடிக்கு இதுவொன்றும் புதிதல்ல.

     “ஐயோ …! நான் எல்டீடீ இல்ல… என்னை மிதிக்காதீங்கோ, ஐயோ ….! அடிக்காதீங்கோ ”

மீண்டும் மீண்டும் கத்தினான். சிறிது நேரத்தில் அந்த மூன்று ஸ்டார் ஆமி சுதாவை சேர்ட்டுக் கழுத்தில் பிடித்து இழுத்துக்கொண்டு கறுத்தக் கண்ணாடி மாட்டியிருந்த ஜீப்பில் விரைந்து ஏத்தினான். அங்கிருந்த ஒரு சிலர் அக்காட்சியைக் கண்டும் காணாதவர்கள் போல விழித்தவராயினர்.

     “தம்பீ…! கட்டார் போனதும் எங்கள மறந்திடாத, மாசா மாசம் காசு போடு, எங்கட ஞாபகம்      மறக்காமலிருக்க எங்கட குடும்பப் போட்டோ ஒன்றை இதுக்குள்ள வைக்கிறன் ”

மூத்த தங்கச்சி, அடுக்கிய உடைகளின் மேல் வைத்த புகைப்படமும் அப்படியே “ஒருவருக்கும் தெரியாம  நந்தினி மச்சாள் ” எழுதிய காதல் கடிதமுமாக நிறைந்திருந்த அவனுடைய சூட்கேஷ் அநாதையாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.

வணக்கம் லண்டனுக்காக கனக.பாரதி செந்தூர்2 thoughts on “சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்

  1. தூசு தட்டி வெளிக்காட்டும் கறுப்பு வெள்ளை புகைப்படம்

  2. தூசு தட்டி காதுமுறுக்கும் கறுப்பு வெள்ளை புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *