குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.


அநேகமான பெற்றோர் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். குழந்தை வளர்ப்பு என்பது கண்டித்து வளர்ப்பதில் தங்கியிருப்பதில்லை. அவர்களை அன்போடு அரவணைத்து வளர்ப்பதிலேயே தங்கியுள்ளது.

குழந்தைகளுக்கு முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது.

குழந்தையை அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது கூட, முழுமையான அன்பை குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடுவார்கள்.

இந்நிலையில், பிஞ்சு உள்ளங்கள் கொண்ட குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களை அலட்சியம் செய்யக்கூடாது. தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்கா விட்டால், குழந்தைகள் மனம் வெதும்பிப் போய் விடுவார்கள். ஆகையால் இதில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும், நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது குழந்தைகளுக்கே. தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்கா விட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப் போய் விடுவார்கள்.

தேவையான முக்கியத்துவம் கிடைக்காதபோது,தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குழந்தைகள் எண்ணத் தோன்றும். அவ்வாறு எண்ணும்குழந்தைகள் யாரிடமும் பேசாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மௌனமாகி விடுவார்கள்.

குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக்கூடாது. பெற்றோர்கள் தங்களது சௌகரிய, அசௌரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்தி செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக் கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள்,பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மௌனமாகி விடுவார்கள். அவ்வாறான மௌனமும் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.

குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். குழந்தைகளை கண்டிப்பதாக எண்ணிக்கொண்டு ஏனைய குழந்தைகள் முன் அவர்களை கண்டிப்பதோ அல்லது, அவமதிப்பதோ கூடாது.

ஏனென்றால், குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால்,அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று எண்ணுவது தவறு.

அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால், சில குழந்தைகள் எதிர்த்துப் பேசுவார்கள், எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிப்பார்கள்.

இத்தகைய அமைதியை கடைப்பிடிக்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறி விடுவார்கள். ஆகையால் குழந்தைகள் விடயத்தில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

‘உங்கள் அன்பை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியும், ஆனால் உங்கள் எண்ணங்கள் அல்ல’

நன்றி -sivachselviLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *