கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு.


‘வேணாம் சார்… எங்களுக்கு செட் ஆகாது! – கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு.

இன்று நேரத்தை மையமாக வைத்தே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், எங்களுக்கு கடிகாரமும் நேரமும் தேவையில்லாத ஒன்று என்கிறார்கள் நார்வேயில் இருக்கும் ஒரு தீவுவாசிகள்

இந்த நொடியில் உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் கடிகாரங்கள் அப்படியே நின்றுபோனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று சிலர் நினைக்கலாம் அல்லது என்ன நடக்கும் என்பதும்கூட நினைவுக்கு வந்து போயிருக்கலாம். யோசித்துப் பார்த்தால் இன்று உலகை இயக்கிக்கொண்டிருப்பது ஒரு வகையில் நேரம்தான்.

காலை அலுவலகத்துக்குச் செல்வது தொடங்கி, மாலை எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பது வரை நேரத்தை மையமாக வைத்தே அனைத்தும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் நேரத்தைச் சரியாக நிர்வகிக்கக் கடிகாரம் அவசியமாகிறது.

அது இல்லையென்றால் எல்லாம் நிலை குலைந்துவிடும் என்பதுதான் உண்மை நிலை. அப்படியிருக்கையில் இந்த கடிகாரங்களும் நேரமும் எங்களுக்குத் தேவையில்லை என எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார்கள் ஒரு ஊர்க்காரர்கள்.

இயற்கையில் கடிகாரம் இருக்க செயற்கை எதற்கு ?

நார்வே நாட்டில் சம்மராய் (Sommarøy) என்ற தீவு இருக்கிறது. அங்கே சுமார் 350 பேர் வசித்து வருகிறார்கள். அவர்கள்தாம் தங்களது தீவை  உலகின் நேரமில்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற வித்தியாசமான கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். ஆர்டிக் வட்டத்தின் வடக்குப் பகுதியில் வாழும் இவர்களின் வாழ்க்கை முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது.

அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் நிலவும் சூழல்தான். குளிர்காலத்தில் இந்தப் பகுதியில் முழுவதுமாக இருள் சூழ்ந்து காணப்படும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் சூரியன் உதிப்பது கிடையாது. மக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடுவார்கள், அதனால் மற்ற வேலைகளும் மந்தமாகவே இருக்கும்.

ஆனால், கோடைக்காலம் வந்தால் சம்மராய் மக்கள் குதூகலமாகிவிடுவார்கள். ஜுலை மாதத்தில்  உதிக்கும் சூரியன் ஜூலை மாதம் வரைக்கும் மறையாது. அப்படியென்றால் அந்த ஊரில் 24 மணி நேரமும் சூரியன் கண் பார்வையில் இருந்துகொண்டேயிருக்கும்.

வெளிச்சமும் இருக்கும் என்பதால் வெளியில் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து வேறு யாராவது இந்த ஊருக்கு வந்தால் அங்கே நிலவும் சூழல் அவர்களைக் குழப்பிவிடும்.

கடிகாரத்தைப் பார்த்தால் மட்டுமே அவர்களால் நேரத்தை உணர்ந்துகொள்ள முடியும். சம்மராய் மக்களால் உலகில் கடைப்பிடிக்கப்படும் நேர முறையோடு ஒத்துப்போக முடிவதில்லை. ஆகவேதான் அது தங்களுக்கு வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.

நேரமில்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த ஜெல் ஓவ் வெடிங் (Kjell Ove Hveding). “பலரும் அவர்களது வாழ்க்கையைக் கடிகாரத்துடன் இணைத்துக்கொண்டு ஒரு பொறியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் நேரக் கட்டுப்பாடுகள் இல்லாத இடத்தில் வாழ்க்கையை நிறைவாக வாழ விரும்புகிறோம்.

மக்கள் அவர்கள் விரும்பும் வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்வார்கள். அதிகாலை 2 மணிக்குப் புல் வெளிகளைச் சீர் செய்ய வேண்டுமா. இல்லை 4 மணிக்கு நீச்சலடிக்க வேண்டுமா. எதுவும் எங்களால் முடியும் என்கிறார். மேலும், உள்ளூர் எம்.பி-யிடம் இதைப் பற்றிப் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஊருக்கு வரும் வெளியூர்க்காரர்களிடம் ‘நேரத்தை வைத்துக்கொண்டு நீங்கள் ஒன்றும் சாதிக்கப்போவதில்லை’ என்று மண்டையைக் கழுவி விடுவார்கள் போலிருக்கிறது. அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்போல, அதனால் சம்மராயில் இருக்கும் பாலம் ஒன்றின் ஓரங்களில் கைக்கடிகாரங்களை அதிகம் பார்க்க முடிகிறது.

சம்மராய் மக்களின் கோரிக்கைக்கு ஆராய்ச்சியாளர்களிடம் வேறொரு பதில் இருக்கிறது. ஒரு வேளை சம்மராய் மக்கள் நேரமும் கடிகாரமும் வேண்டாம் என்றால்கூட அதை அவர்கள் உடல் ஏற்றுக்கொள்ளாது என்கிறார்கள்.

“பூமி சுழலும் 24 மணி நேரம் என்று வைத்துக்கொண்டால் மனித உடல் அதற்கு இயல்பாகவே பழகிவிட்டது. நம்மால் நமது பரிணாம வளர்ச்சிக்கு எதிராக ஒருபோதும் செயல்பட முடியாது.

ஆனால், இந்தப் பகுதியில் இருப்பவர்கள் செய்வதெல்லாம் அதைத்தான். நாம் எதற்குப் பழக்கப்பட்டிருக்கிறோமோ அதற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நமது உடல் சூரியனோடுதான் இணைக்கப்பட்டிருக்கிறது, கடிகாரத்தோடு அல்ல“ என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹானே ஹாஃப்மன். மிக்சிகன் மாநிலப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இவர் சிர்காடியன் ரிதத்தைப் பற்றி ஆய்வு செய்து வருபவர்.

உயிரினங்களுக்குக் காலம்தான் தேவைப்படுகிறது… கடிகாரம் அல்ல

இந்த உலகில் காலத்தை நிர்வகிப்பதற்குக் கடிகாரம் என்ற விஷயத்தை உருவாக்கி அதன்படி வாழும் மிருகம் ஒன்று இருக்குமானால் அது வேறு யாருமில்லை மனிதன்தான். மற்ற உயிரினங்களுக்குக் கடிகாரம் தேவைப்படுவதில்லையென்றால் பின்னர் அவை எப்படித்தான் இயங்குகின்றன.

அவை அனைத்தும் இயற்கையான கடிகாரத்தையே பின்பற்றுகின்றன. ஒரு நாளில் எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பது அவற்றுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு உயிரினம் மாலையில் சூரியன் மறைந்த பின்னர் இருப்பிடத்தை அடைந்துவிடும்.

அதன் பிறகு, ஓய்வெடுக்கும். அப்படியே மறுபக்கம் பார்த்தால் இன்னொன்று இரவில்தான் இரை தேடக் கிளம்பும். பகல் முழுவதும் ஓய்வெடுக்கும். இப்படி ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதற்கேற்ற கால ஒழுங்குமுறையைப் பின்பற்றி வருகின்றன. மனிதர்களுக்கும் இந்த விஷயம் புதிதானது அல்ல, காலம் காலமாக அது நமக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.

இப்போது, இயந்திரமயமான உலகத்தில் செயற்கையான கடிகாரத்தைப் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பலருக்கு அது புரிவதில்லை. செயற்கையை விடுத்து இயற்கையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தால் அதை மீண்டும் உணர முடியும். இந்த பிரபஞ்சம் உருவானது தொடங்கி இயற்கையாகவே ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. மனிதனைத் தவிர மற்ற மிருகங்கள் அனைத்துக்கும் அந்த தாளம் கேட்கிறது.

நன்றி – vikatanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *