‘ஏழைத்தாயின் மகன் ஒன்றரை லட்ச ரூபாய் கண்ணாடி அணியலாமா?’ சர்ச்சையில் இந்திய பிரதமர்


பிரதமர் நரேந்திர மோதி

இன்று (வியாழக்கிழமை) அரிதாக நிகழ்ந்த சூரிய கிரகணத்தை தன்னால் காண முடியவில்லையே என்று வருத்தப்பட்டு புகைப்படம் ஒன்றை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார். தற்போது, அந்த புகைப்படம்தான் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோதி தன்னுடைய ட்வீட்டில், “பல இந்தியர்களைப் போல நானும் சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்தேன். ஆனால், மேகங்கள் சூரியனை மறைத்ததால் துரதிர்ஷ்டவசமாக, என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை. கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் நிகழ்ந்த கிரகணத்தை நேரலையில் பார்க்க முடிந்தது. மேலும், வல்லுநர்களுடன் கலந்துரையாடி இந்த துறையில் என்னுடைய அறிவை வளர்த்து கொண்டேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அதில் ஒன்றில், கூலர்ஸ் அணிந்தபடி கையில் கிரகணத்தை பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவர் வைத்திருந்தார்.

இந்த குறிப்பிட்ட புகைப்படத்தால் இப்போது நரேந்திர மோதி தேவையில்லாத சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இணையத்தில் பிரதமரின் இந்த புகைப்படத்தை பகிர்ந்த சிலர் அவர் அணிந்திருந்த கருப்பு நிற கண்ணாடியை வைத்து பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். காரணம், அவர் அணிந்திருந்த கண்ணாடியின் விலை சுமார் ஒரு லட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபாய்.

கைகளால் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த விலை உயர்ந்த கண்ணாடியை மேபெக் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 1,995 டாலருக்கும் அதிகம்.

இணையத்தில் அது தற்போது விற்பனை ஆகும் விலையின் ஸ்கிரீன் ஷாட்டையும், மோதியின் புகைப்படத்தையும் பகிர்ந்து ட்விட்டர்வாசிகள் பலரும், நம்முடைய ஏழைத்தாயின் மகன் அணிந்திருக்கும் கண்ணாடியின் விலை சுமார் 2000 டாலர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேள்வியெழுப்பி இருந்தனர்.

அந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள நரேந்திர மோதி கூலாக, மிகவும் வரவேற்கிறேன் மீம்களை ரசியுங்கள் என்று கூறியிருந்தார். அந்த ட்வீட்டும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மோதியின் ஆதரவாளர்கள் #CoolestPM என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் வைரலாக்கி வருகின்றனர்.

நன்றி – பிபிசி தமிழ்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *