கொரோனா வைரஸ்: ‘இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்’ சீனாவில் சிக்கி தவிக்கும் பெண்


சீனாவில் தவிக்கும் ஆந்திரப்பெண் : நாடு திரும்ப காணொளி பதிவு செய்து கோரிக்கை

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இந்தியர்கள் பலர் நாடு திரும்பினர், அவர்களை இந்தியாவில் தனிமைப்படுத்தி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஜோதி என்ற பெண் கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் மாதம் ஜோதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சீனா அரசு தன்னை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து காணொளி ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த ஜோதிக்கான பட முடிவுகள்

காணொளியில் ஜோதி கூறியது என்ன ?

“என் பெயர் ஜோதி. எனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்ற சந்தேகத்தில் இந்தியா செல்ல அனுமதி மறுக்கப்பட்டு ஏழு நாள் ஆகிறது. ஆனால் இன்று வரை எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை. நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

என்னுடன் இருந்த என் நண்பர்கள் பலர் இந்தியா சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று தினமும் பரிசோதனை செய்யப்படுகிறது. இரத்த பரிசோதனை, காய்ச்சல் உள்ளதா என்பது போல பல பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் இங்கு எனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று சந்தேகிக்கப்படும் நிலையிலும் இதுவரை எந்த பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் உள்ள என் வீட்டிற்கு திரும்பி செல்வது குறித்து தினமும் இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டு பேசி வருகிறேன். அவர்கள் தினமும் சீன அதிகாரிகளிடம் பேசி வருவதாகக் கூறுகிறார்கள். இவ்வாறான நெருக்கடி நிலையில் தாய்நாடு திரும்ப முடியாமல், சீனாவிலேயே இருப்பதால் இதன் பிறகு எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதியாகக் கூற முடியுமா ? இந்த மாத இறுதியில் எனது விசாவிற்கான காலம் முடிவடைகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சீன அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்.

எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை. அல்லது என்னை மருத்துவமனையில் தனிமையிலும் வைக்கவில்லை. நான் எனது அறையில் தான் தங்கி இருக்கிறேன்.

என்னை வேறு ஒரு பாதுகாப்பான நகரத்திற்கு மாற்றிவிடுங்கள், கொரோனா தொற்று பாதிப்பு இதன் பிறகு ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு அளிக்கவும் சீன அரசு தயாராக இல்லை. எனவே இந்திய அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என் நண்பர்களுடன் இந்தியா செல்ல அனுமதி கிடைத்திருந்தால் கூட, தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து 645 இந்தியர்கள் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு டெல்லியின் புறநகர் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்றும் தினமும் பரிசோதிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை சீனாவிலிருந்து வந்த இந்தியர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சீனாவில் நிறுத்திவைக்கப்பட்ட ஜோதியின் கோரிக்கைகள் குறித்துக் கேட்டறிய சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் நெருக்கடி நிலையின் காரணமாக இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவர்கள் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தவுடன் பிபிசி தமிழ் அந்த விளக்கத்தை வெளியிடும்.

ஜோதியின் தாய் கூறுவது என்ன ?

ஆந்திராவின் பிபிசி செய்தியாளர்விஹாரி ஜோதியின் குடும்பத்தை தொடர்புகொண்டார். வுஹானில் ஜோதி தனியையில் தவித்து வருவதால், அவரின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். அவர்கள் தொலைபேசி மூலம் ஜோதியுடன் தொடர்பில் உள்ளனர்.

சீனாவில் தவிக்கும் ஆந்திரப்பெண் : நாடு திரும்ப காணொளி பதிவு செய்து கோரிக்கை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், ஜோதி பணிபுரிந்த நிறுவனம் மூலம் அவர் மூன்று மாத பயிற்சிக்காக வுஹான் அனுப்பப்பட்டார். பின்னர் பயிற்சியின் காலம் மேலும் மூன்று மாதத்திற்கு நீடிக்கப்பட்டது. மேலும் ஜோதி சீனாவிற்கு செல்வதற்கு முன்பு தான் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ஜோதியின் தாய் கூறுகிறார். மார்ச் 2020ல் திருமண செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் சீனாவிலிருந்து திரும்பி வருவதாக இருந்தது. ஆனால் இப்படி அவள் சிக்கிக்கொள்வாள் என நான் நினைக்கவில்லை. வேலை சுமை, புதிய உணவு பழக்கத்தால் தான் அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. எந்த காரணமும் இன்றி அவள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளார், என்றும் ஜோதியின் தாய் கவலை தெரிவிக்கிறார்.

ஜோதி தங்கி இருக்கும் இடத்தில் தான் முதல் முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அங்கு வசிப்பது அவ்வளவு பாதுகாப்பு அல்ல. அங்கு அவருக்கு இது வரை எந்த மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று , ஜோதியின் சகோதரர் கேள்வி எழுப்புகிறார்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள 21 விமான நிலையங்களிலும் சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *