தோனியின் கிளவுசில் ராணுவ முத்திரை : அனுமதிக்க முடியாது!


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

அந்தப் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் கீப்பிங் கிளவுஸில் துணை ராணுவத்தின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது.

தியாகம் என்ற அர்த்தம் கொள்ளும் வகையிலான பலிதான் என்ற வார்த்தையுடனான துணை ராணுவப் படையின் அந்த முத்திரையை, கவுரவ லெப்டினன்ட் ஆக இருப்பதால் தோனி பயன்படுத்தியுள்ளார்.

இதற்கு பாகிஸ்தான் அமைச்சர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, முத்திரையை நீக்க தோனியை அறிவுறுத்துமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடிதம் எழுதியிருந்தது.

ஆனால், எந்தவொரு விதிமீறலிலும் தோனி ஈடுபடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்திருந்தார்.

ஐசிசி விதிகளின்படி, வர்த்தக, மத அல்லது ராணுவ லோகோவைப் பயன்படுத்தக் கூடாது என்றும், தோனியின் விவகாரத்தில் மத அல்லது வர்த்தக விவகாரம் இடம்பெறவில்லை என்றும், ராணுவ லோகோ-வைப் பயன்படுத்தவில்லை என்றும் வினோத் ராய் கூறியிருந்தார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பிசிசிஐ-க்கு விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-வும் கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, முத்திரையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு ஐசிசி-க்கு பிசிசிஐ சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதனை நிராகரித்த ஐசிசி, நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி அணிந்த முத்திரையை பயன்படுத்த அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு ஆடை அல்லது உபகரணத்தில் தனிப்பட்ட நபரின் செய்திகள் அல்லது முத்திரையை ஐசிசி நடத்தும் போட்டிகளில் அனுமதிக்க முடியாது என்றும், விக்கெட் கீப்பிங் கிளவுஸில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட பொருட்களில் இந்த லோகோ இடம்பெறவில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி மானு சாவ்னியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக பிசிசிஐ-க்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

நன்றி – news18Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *