இளவரசனின் தற்கொலையில் சாதிவெறியர்களுக்குப் பங்கில்லையா?


தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக விசாரணை செய்து வந்த நீதிபதி சிங்கார‌வேலு தலைமையிலான குழு, ‘இளவரசன் தற்கொலைதான் செய்துகொண்டார்’ என்று அறிக்கை அளித்துள்ளது.

மேலும், தான் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் விசாரணையில் இறந்து போன இளவரசன் தன் மனைவியான திவ்யா தன்னைப் பிரிந்த காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்ற அறிய உண்மையை 5 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அத்தோடு நிற்காமல் 144 தடை உத்திரவு போட்டு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை செயல்பட்டதற்கு பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கியுள்ளார்.

இப்படி ஒரு அறிக்கையை அளிப்பதற்கு ஐந்து ஆண்டுகளை எதற்காக மதிப்புமிகு நீதிபதி அவர்கள் எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. அறிக்கை முழுமையாக வெளியிடப்படாத நிலையில் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் அறிக்கையின் சில சாரமான விவரங்களின் படி, அறிக்கையில் எந்த இடத்திலும் இளவரசனை தற்கொலைக்குத் தள்ளிய அயோக்கியர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிகின்றது.

அப்படி குறிப்பிட்டு இருந்தால் நிச்சயம் திவ்யாவைப் பிரிந்த காரணத்தால்தான் இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்ற முடிவுக்கு நீதிபதி வந்திருக்க மாட்டார். மேலும் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓராண்டுகள் கழித்து, தற்போது வெளியிடப்பட்டு இருப்பதால் இந்த அரசின் மீது மிகப்பெரிய சந்தேகம் வருகின்றது.

என்ன காரணத்திற்காக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் மூடி மறைக்கப்பட்டது என்பதும், தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் பாமகவைக் காப்பாற்றும் வேலையை அதிமுக செய்கின்றதோ என்ற சந்தேகமும் இயல்பாகவே எழுகின்றது.

பறையர் வகுப்பைச் சேர்ந்த இளவரசனும், வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டபோது திவ்யாவின் அப்பா நாகராஜனை மிகக் கீழ்த்தரமாகப் பேசி, அவர் மர்மமான முறையில் (அவர் தற்கொலை செய்துகொண்டாரா, இல்லை சாதி வெறி அரசியலை வைத்து பொறுக்கித் தின்ன காத்துக் கிடந்த கீழ்த்தரமான அரசியல் மிருகங்களால் கொலை செய்யப்பட்டாரா என்று எந்த ஆய்வும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை) இறப்பதற்குக் காரணமாக இருந்த அயோக்கியர்கள் யார்? அவர் பிணத்தை வைத்துக் கொண்டு நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் உடைமைகளைத் தீயிட்டுக் கொளுத்தி அவர்களைப் பொருளாதார ரீதியாக அழித்தொழித்தது எந்தக் கட்சியை சேர்ந்த அயோக்கியர்கள்?. இதைப் பற்றியெல்லாம் இந்த அறிக்கை மூச்சுகூட விடவில்லை.

நிம்மதியாக சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த இளவரசனையும், திவ்யாவையும் பிரிக்க பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், கடைசிவரை திவ்யாவுடன் இளவரசனை பேசக்கூட முடியாமல் தடுத்து வைத்திருந்ததும் ஊரறிந்த செய்திகள்.

பாமகவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட திவ்யா சூலை 3, 2013 அன்று கொடுத்த வாக்குமூலத்தில் தான் இறுதி வரை தன் தாயுடனேயே வாழ விரும்புவதாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சூலை 4, 2013 நண்பகலில் இளவரசன் தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதைத் தொடந்து இளவரசனின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக போன்றவை கொடுத்த அழுத்தம் காரணமாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் இளவரசன் இறப்புக்கான காரணம் கண்டறியப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், இவரது தலைமையில் நீதி விசாரணை நடைபெறக் கூடாது என்று இளவரசனின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலித் இனத்திற்கு எதிராக இவர் செயல்படுபவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதாகவும், அவருக்குப் பதில் ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் எதை நினைத்து பயந்தார்களோ அதைப் போலவே நீதிபதி சிங்கார‌வேலு தற்போது அறிக்கை அளித்துள்ளார். பாலியல் குற்றவாளியிடம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை விசாரிக்கக் கொடுப்பதற்கும், கொலைக் குற்றவாளியிடம் கொலை வழக்கை விசாரிக்கக் கொடுப்பதற்கும், ஒரு வழிப்பறி கொள்ளையனிடம் திருட்டு வழக்கை விசாரிக்கக் கொடுப்பதற்கும், ஆதிக்க சாதிவெறி பிடித்த ஒருவரிடம் தலித் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை விசாரிக்கக் கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

முழுக்க முழுக்க இளவரசனை சாவை நோக்கித் தள்ளிய அயோக்கியர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு திட்டமிட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அறிக்கையைப் பார்த்து அனைத்து முற்போக்கு சக்திகளும் கண்டனம் தெரிவித்துக் கொண்டு இருக்கும் போது, திருவாளர் ராமதாசு இந்த அறிக்கை ஏதோ பெரிய உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டது போல புளகாங்கிதம் அடைகின்றார்.

அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் “….இளவரசனின் உயிரிழப்பு வேதனையளிக்கும் துயரமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது மரணம் தொடர்பான விஷயத்தில் செய்யப்பட்ட அரசியல் மிகவும் அருவருக்கத்தக்கது. திமுகவில் தொடங்கி இப்போது அதன் கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்தன.

சிங்காரவேலு அறிக்கையால் பாமகவின் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீக்கப்பட்டுள்ளது. இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜீன்ஸ் பேண்டும், கூலிங்கிளாசும் போட்டுக் கொண்டு தலித் இளைஞர்கள் சூத்திர சாதிப் பெண்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றார்கள், அவர்கள் நாடகக் காதல் புரிகின்றார்கள் என்று ஊர் ஊருக்கு மேடை போட்டு, சாதிவெறி தலைக்கேறிய பிற சூத்திரசாதி வெறியர்களையும் இணைத்துக் கொண்டு கூட்டம் போட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அணிச்சேர்க்கையை வெட்க மானமே இல்லாமல் செய்த ராமதாசுக்கு அடுத்தவர்களைப் பார்த்து குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது?

இன்று அரசியல் களத்தில் இருந்து குப்பைத் தொட்டிக்கு வீசி எறியப்பட்டு, அரசியல் அநாதையாய் மாறி இருக்கும் ராமதாசு, யோக்கியன் வேடம் போடுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. சாதி வெறிபிடித்த மிருகங்களுக்கு பாமகவின் தோல்வி ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இளவரசனின் மரணத்திற்கு பாமக பதில் சொல்லியே ஆகவேண்டும். இளவரசனிடம் இருந்து திவ்யாவைப் பிரித்து இளவரசன் சாவதற்குக் காரணமாக இருந்தவர்களில் சிலர் வழக்கறிஞர் என்ற போர்வையில் நீதிமன்றங்களில் இன்று சுற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

சாதிவெறி பிடித்தவர்களைத் தண்டிக்க நீதிமன்றங்கள் இருக்கின்றது என்ற நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக, அதுபோன்றவர்களே வழக்கறிஞர்களாக இருந்தால் நாம் நீதி வேண்டி எங்கு செல்வது?

நம்மைப் பொருத்தவரை இளவரசன் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தாலும் அது கொலைதான். அதுவும் திட்டமிட்ட படுகொலை. சில சாதிவெறி பிடித்த மிருகங்களின் சுயலாபத்திற்காக இளவரசன் சாவை நோக்கித் தள்ளப்பட்டார்.

இளவரசன் ஆசை ஆசையாய்க் காதலித்து மணந்த பெண்ணை, அவனுடைய வாழ்க்கையாகப் பார்த்த பெண்ணை அவனிடம் இருந்து சாதிவெறி பிடித்த அயோக்கியர்கள் பிரித்தபோது அதை நீதிமன்றம் சென்று கூட தடுக்க முடியாத கையறு நிலை ஏற்பட்டபோது, அவன் தனக்கான வாழ்வை வேறு வகையில் தேடிக் கொண்டான்.

எப்போதுமே கொலையாளிகள் தற்கொலைகளுக்குள் ஒளிந்து கொள்கின்றார்கள். அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, சாதி வெறியர்களும், மதவெறியர்களும் தங்களைக் காப்பாற்றி விடுவார்கள் என்று. அவர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நன்றி- செ.கார்கிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *