இலங்கைத் தீவின் அரசியலில் சீனா என்பது பூச்சாண்டி மட்டுமே! – முனைவர் விஜய் அசோகன்


நோர்வேயின் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு குறித்த செயல்பாடுகள் மீது எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, 2011 இல் வெளியான “Pawn of Peace” என்ற ஆய்வறிக்கையில், இந்தியா சீனாவைக் அதனை பகடைக் காயாகக் காட்டிக் காட்டியே அரசியலை திசைத் திருப்பி வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

சீனாவின் பொருளாதார நலன், சீனாவின் முத்துமாலை, சீனாவின் தெற்காசிய வலைப்பின்னல், இந்திய பெருங்கடல் மீதான அவர்களது பெரும் ஆசை இதில் எதுவுமே பொய்யில்லைதான்.

ஆனால், ஈழப் போராட்டத்தில், 2002-2009, 2009-2015, 2015-2018, 2018 முதலான வருங்கால அரசியல் என்பது அமெரிக்கா, இந்தியா கூட்டுப் பின்னணி கொண்டவை.

2002ற்கு முன்னரும் அதன் பின்னரும் சரியாக கவனித்திருந்தால், அமெரிக்க ராஜதந்திரிகளின் இலங்கை-இந்திய பயணம், அவர்கள் கொடுத்த பேட்டிகள், நோர்வே சமாதானக் குழுவின் எரிக் சொல்ஹைம் அவரது இந்திய, அமெரிக்க பயணங்கள் குறித்த புரிதல்கள் அவரது நிலைப்பாடுகளில் நடந்த மாற்றம் விளங்கியிருக்கும்.

2011 தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதும் ஜெயலலிதா அம்மையாரை சந்தித்த ஹிலாரி கிளிண்டன் செய்தியை நாம் மறந்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் ஈழப்போர் குறித்த ‘பொய்யான’ தீர்மானங்களையும் அதன் ஒவ்வொரு காலக்கட்டத்தில் அமெரிக்க ராஜதந்திரிகள் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணங்களை மறக்காமல் இதனுள் பொறுத்திப் பார்க்க வேண்டும்.

2015 ரணில்-மைத்திரி கூட்டணி ஆட்சியின் பொழுது ம் அதன் முன்னர் பின்னர் நடந்த மேற்குல நாடுகள் மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகளின் பேட்டிகள், தமிழர்களோடு அவர்கள் தொடர்பு கொண்டு பேசியவைகளை மறந்துவிட்டு இன்றைய சிங்களத் தலைமை மாற்றங்கள் குறித்து கருத்து சொல்லலாகாது.

2018இல் மட்டுமே இந்திய-அமெரிக்க ராஜதந்திர உறவு, இராணுவ ஒப்பந்தங்கள், திரிகோணமலை கடல் பரப்பில் நிகழ்ந்து வரும், நிகழப்போகும் இந்திய-அமெரிக்க-ஜப்பானிய கூட்டு இராணுவ நிகழ்வுகள், ராஜபக்சேவின் இந்தியப் பயணம், மைத்திரியின் அமெரிக்கப் பயணம் இவையெல்லாம் குறித்த புரிதல் இல்லாது இன்றைய மகிந்த மீளுருவாக்கம் பற்றி பேச முடியாது.

சீனாவினை பூச்சாண்டியாக காட்டிக்கொண்டே நகரும் நாடகத்தை தமிழர்களின் தரப்புகள் தெரிந்தோ தெரியாமலோ தலையாட்டி பொம்மையாக நடனம் ஆடிக்கொண்டிருக்கிறோம்.

முழுமையான பூகோள அரசியல் மாற்றங்கள், வலைப்பின்னல்கள், குறைந்ததேனும் கடந்த பத்துவருட நிகழ்வுகளை ஊடறுத்துப் பார்க்காமல் வெறுமனே மைத்திரி-ரணில்-ராஜபக்சே என்ற தனிமனிதர்களின் பார்வையில் ஈழ அரசியலை அணுகுவதே கடும் துரோகம்தான்.

 

– முனைவர் விஜய் அசோகன் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *