என் மகனே….!


உன்னை என் கைகளில்

அள்ளி முத்தமிடும்

அந்த தருணத்திற்காக

என் மனம் தவிக்கிறது – ஆனால்

மகனே…..!

 

இந்த உலகத்தை நினைக்கும் போது

வேண்டாம் மகனே!

நீ என் கருவறையிலேயே

சந்தோசமாய் இருந்து விடு

இந்த பூமிக்கு வந்து விடாதே மகனே!

பொல்லாத பூமி இது

புதையுண்டு போய் விடுவாய்

 

விழுந்தவனை ஏறிமிதிக்க

நினைக்கும் நரக பூமி இது!

ஐயோ! என்பவனுக்கு

ஆறுதல் அளிக்க நினைக்காத

சுயநல மனிதர்கள் வாழும் தேசம் இது!

 

உயிர் என்று நாம் நம்பியவர்களே

உயிரை எடுக்க தயங்க மாட்டார்கள்

வேண்டாம் மகனே!

பூமிக்கு வந்து விடாதே

புதையுண்டு போய் விடுவாய்

 

இந்த பூமியில்…

நல்லவர்க்கு இடமில்லை

பொய்யான முகமூடிக்கு

பரந்து கிடக்கிறது பூமி

 

படிப்பிருந்தும்வேலையில்லை – ஆனால்

பணமிருந்தால் வாங்கிவிடலாம்

என்ன செய்வேன் மகனே

உன்தாய் ஏழைதான்- ஆனால்

மனதளவில் பணக்காரி

இந்தப் பணக்காரிக்கு உலகம் கொடுத்த

பட்டம் தான் “ஏமாளி”

 

அநியாயத்தைக் கண்டு

உள்ளம் கொதிக்கும் போது

ஜடம் போல் நிற்க வேண்டிவரும்- காரணம்

நாம் ஏழைகள் அல்லவா?

நியாயம் பணத்திற்கு

விலை போய் விடும்

 

அடுத்தவரின் துன்பத்தில்

குளிர் காய நினைக்கும்

சுயநலவாதிகளை எதிர்த்து

நம்மால் என்ன செய்ய முடியும்

மனிதனையே மனிதன் அடித்துக்கொல்லும்

மாண்புமிக்க கலிகாலம் இது

 

இரத்தத்திற்கும்

பழிவாங்கல்களுக்கும்

பஞ்சம் கிடையாது

துரோகங்கள் மலிந்து கிடக்கும்

பொய்கள் புடைசூழ்ந்து எதிர்க்கும்

 

ஆம் மகனே….

இதயத்தைக் கொன்று விட்டு உன்னால்

ஜடம் போல் வாழமுடியாது மகனே!

ஏன் என்று கேட்கிறாயா? – ஏனெனில்

நீ என் மகனல்லவா…

 

இந்தப் பூமி நமக்கு வேண்டாம்மகனே…!

நாம் இருவரும் இந்த நரகத்தை விட்டு

சென்று விடலாம் மகனே!

எங்கிருந்து வந்தோமோ..

அங்கு……

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *