இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 219 ஓட்டங்களால் அபார வெற்றி!


 

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல – சதீர சமரவிக்ரம ஜோடி 19.1 ஓவரில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

சதீர சமரவிக்ரம 48 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 54 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 97 பந்துகளில் 12 பௌண்டரிகளுடன் 95 ஓட்டங்களையும் பெற்றனர்.

அணித்தலைவர் டினேஷ் சந்திமால் மற்றும் குசல் மென்டிஸ் ஜோடி 73 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

டினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 366 ஓட்டங்களைக் குவித்தது.

இது இங்கிலாந்திற்கு எதிராக இலங்கை அணி பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

வெற்றி இலக்கான 367 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணியின் முதல் 2 ஓவர்களில் 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

எனினும், மொயின் 37 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 67 ஓட்டங்களையும் பெற்றமை அணிக்கு ஆறுதல் அளித்தது.

அபாரமாகப் பந்துவீசிய அகில தனஞ்சய 6.1 ஓவரில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், துஷ்மந்த ச்சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி 26.1 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டியைத் தொடர முடியவில்லை.

டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் இலங்கை அணி 219 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது இங்கிலாந்திற்கு எதிராக இலங்கை அணி பெற்ற பாரிய ஓட்ட வித்தியாச வெற்றியாகும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *