எப்போ வருவாரோ ஆன்மீக தொடர் உரை நிகழ்வின் நிறைவு நாளில் பிரபல பேச்சாளரும், கவிஞருமான மரபின்மைந்தன் முத்தையா “பட்டினத்தடிகள்” என்றும் தலைப்பில் உரையாற்றினார். இதன் போதே அவர் “நான்கு வகையான பட்டினத்தார் இருந்ததை பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.
திருவெண்காடர் என்பதும் மருதவாணர் என்பதும் பட்டினத்துப் பிள்ளையின் இயற்பெயர். வேதியர் ஒருவரிடம் தனவணிகர் பொன் கொடுத்து பெற்ற பிள்ளை அவர். காதறுந்த ஊசி உவமையின் மூலம் அவர் நிலையாமையை வலியுறுத்தினார் என்று கருதுவது தவறு.
எது நிலையானதோ அதை அவர் வலியுறுத்தினார். பிறந்தன இறக்கும். இறந்தன பிறக்கும். தோன்றின மறையும். மறைந்தன தோன்றும். அருந்தின மலமரம். புனைந்தன அழுக்காம் என்று பாடியவர் பட்டினத்தடிகள்.
விருப்பு வெறுப்புதான் ஒருவன் கண்ணை மயக்கும் இரு மாயைகள். இது என்னுடையதல்ல என் எளிய லௌகீக விஷயங்களில் மனவிளக்கம் கொள்ளவேண்டும். நெற்றிக்கண்ணை பட்டினத்தடிகள் நெற்றியில் நிகழ்ந்த ஒற்றை நாட்டம் என்கிறார்.
இறைவனை உணர்வதே உயிர்களின் ஒற்றை நாட்டம். கண்ணால் கெடுவது விட்டில் பூச்சி, காதால் கெடுவது அசுனமா பறவை, வாயால் கெடுவது மீன், நாசியால் கெடுவது வண்டு, உடல் வேட்கையால் கெடுவது யானை.
ஆனால் இவை அனைத்தினாலும் கெடுபவன் மனிதன் என்கிறார் பட்டினத்தார். மெய்யன்போடு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு தன்னையே தரும் இறைவன் வீடுபேறும் அருளுகிறார்” என்றார்.