கொழுப்புக் கட்டிகள் ஆபத்தானவையா?


கொழுப்பு படிவுகளின் அதிகப்படியான வளர்ச்சியே கொழுப்புக் கட்டிகளாகும்.

இக்கட்டிகள் மென்மையாகவும் உரு ண்டை வடிவிலும் நகரக்கூடியதாகவும் இருக்கும். கை விரலால் அழுத்தும் போது அவை நகர்வது போன்று தெரியும். ஆனால் வலி இருக்காது.

இந்தக் கட்டிகள் தசைக்கும் தோலுக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் பெரும்பாலும் ஏற்படும். அதற்காக உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படாது என்றில்லை.

குறிப்பாக கழுத்து, மேல் கை, தோள்கள், முதுகு, அடிவயிறு, தொடை, தலை, நெற்றி போன்ற இடங்களிலும் இவ்வகைக் கட்டிகள் ஏற்படும். சிலருக்கு மூளை, சிறுநீரகம், மார்பகம் போன்ற உள் உறுப்புக்களிலும் கூட ஏற்படலாம்.

அதேநேரம் ஒரு கட்டிதான் வளரும் என்று இல்லை. பல கட்டிகளும் கூட தோற்றம் பெறலாம். இருந்த போதிலும் இவ்வாறு கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இருப்பினும் உடல் பருமன், உடலின் குளுக்கோஸ் மட்டம் கட்டுப்பாட்டில் இல்லாமை, மது அருந்துதல் மற்றும் பரம்பரை ரீதியான காரணங்கள் என்பவற்றினால் தான் இக்கட்டிகள் ஏற்படுவதாக நம்பப்படுகின்றது.

அதேநேரம் இக்கட்டிகள் இந்த வயதினருக்குதான் ஏற்படும் என்றும் உறுதிபடக் குறிப்பிட்டு கூற முடியாது. ஆனால் 25முதல் 50வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் இவ்வகைக் கட்டிகள் ஏற்படலாம் என்பது தான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

அத்தோடு இக்கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்பும் இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் இவ்வகைக் கட்டி வளர்கின்றதா? வலி காணப்படுகின்றதா? சருமத்தின் நிறம் மாறுகின்றதா? என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக ஏற்பட்டு இருப்பது கொழுப்புக் கட்டிதானா என மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் அடிப்படையில் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டு மருத்துவ ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.

அத்தோடு இக்கட்டி காணப்படும் பகுதியில் வலி, எரிச்சல், கட்டி மேல் தொற்று, துர்நாற்றம், கட்டியின் வளர்ச்சி அதிகரித்தல், தோற்றத்தைக் கெடுத்தல் போன்றன காணப்படுமாயின் அறுவை சிகிச்சை மூலம் குறித்த கட்டியை அகற்றிவிட வேண்டும்.

என்றாலும் உடலுக்குத் தொந்தரவு தராத ஒன்றை, தேவை இன்றி அறுவை சிகிச்சை செய்து அகற்றத் தேவையில்லை.

ஏனெனில் சிலருக்கு இவ்வகைக்கட்டியை அகற்றினாலும் கூட அக்கட்டி மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது. இது அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும்.

நன்றி – thinakaranLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *