எல்லாம் பயமயம்..


பீதி தரும் மனப்பதற்றத்தை வெறும் மனப்பதற்றம் என்று சுருக்கிவிட முடியாது. ஒரு நபர் மாரடைப்பால் பாதிக்கப்படும்போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படுமோ அவற்றை ஒத்த அறிகுறிகள் இதன் பாதிப்பால் ஏற்படும். உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற பயம் ஏற்படும். பெரும்பாலும் சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரையோ மருத்துவமனைக்கு வந்து சேரும்வரையோ இந்தப் பயம் நீடிக்கும்.

சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் வர வாய்ப்புண்டு. ஒரு முறை இதை அனுபவித்தவர்கள், தனியாக வெளியில் செல்லவே அச்சப்படுவார்கள். அதுவும் மருத்துவமனை இல்லாத இடங்களுக்குப் பயணம் செய்ய நேர்ந்தால், ஊர் வரும்வரை மிகுந்த பதற்றத்துடன் காணப்படுவார்கள்.

என்ன காரணம்?

இந்த ‘பானிக்’ மனப்பதற்றத்தில் இருவகை உண்டு. சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று உருவாகும். சிலருக்கு ஏதேனும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள், இழப்புகள், குடும்ப நபர்களின் மரணம் (குறிப்பாக மாரடைப்பால்) போன்ற சூழ்நிலைகளுக்குப் பின்பு ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்குக் கூட்டநெரிசல், லிஃப்ட், வாகனங்கள், குறுகிய இருட்டறை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறை போன்ற இடங்களில் ‘நாம் தப்பிக்க முடியாமல் மூச்சடைத்து மரணம் நிகழ்ந்துவிடுமோ’ என்ற பயத்தில் ஆரம்பித்து பின் ‘பானிக்’ பதற்றமாகவே மாறிவிடும். போதைப்பொருள் பழக்கம், அதிக காபி, டீ, காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள், சில மாத்திரைகள் கூடக் காரணமாக இருக்கலாம்.

விளைவு என்ன?

நாம் இருட்டில் ஒரு பாதையைக் கடந்து செல்லும்போது எதிர்பாராமல் ஒரு பெரிய பாம்பு பாதையில் குறுக்கிட்டால் நிச்சயமாகப் பயந்துவிடுவோம். அதன் பின்னர், ஒவ்வொரு முறையும் அந்தக் குறிப்பிட்ட இடத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் தனிக்கவனம் செலுத்தி அந்த இடத்தைச் சற்று நோட்டம் விட்டே கடந்து செல்வோம்.

அதுபோலத் தான் ஒருமுறை இந்தப் பீதிக்குள்ளானவர்கள், ‘அன்று நமக்கு வந்ததைப் போல் திரும்ப வந்துவிடுமோ’ என்ற அச்சத்துடன் கூடிய எதிர்மறை எண்ணங்களால் அவதிப்படுவார்கள். பெரும்பாலும் பொது மருத்துவர் அல்லது இதயவியல் நிபுணர்களிடம் பரிசோதனைக்குச் செல்லும்போது, எல்லாப் பரிசோதனை முடிவுகளும் சரியான அளவில் நார்மலாகவே இருக்கும்.

ஆனால், அதன் பின்னரும் அவர்கள் திருப்தியடையாமல் ‘ஒன்றுமே இல்லை என்றால் ஏன் எனக்கு இந்த அறிகுறிகள் வருகின்றன. இதைவிடப் பெரிய பரிசோதனைகள் அல்லது மருத்துவமனையில் பரிசோதித்து என்ன காரணம் என்று கண்டுபிடித்துவிட வேண்டும்’ என்று தீவிரமாக அலைந்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்வார்கள். இதனால்தான் இதற்கு ‘What If Syndrome’ (இது என்னவாக இருக்குமோ?) என்று இன்னொரு பெயரும் உண்டு.

பல நேரத்தில், ‘நம் இதயம் அல்லது உடல் உறுப்புகள் சரியாகத்தான் இயங்குகின்றனவா’ என்று தங்களைத் தாங்களே பரிசோதித்துப் பதற்றத்தை அவர்கள் மேலும் கூட்டிக்கொள்வார்கள். மருத்துவர்களிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்காத பட்சத்தில் தங்களை இதய நோயாளியாகவே கருதி, அதற்குரிய மருந்துகளை உண்டும் நிம்மதி இல்லாமல் வாழ்வார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மாரடைப்பு என்று சொல்லிக்கொள்ளும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த ‘பானிக்’ பதற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

என்ன செய்ய வேண்டும்?

மேற்கூறிய அறிகுறிகளுடன் இருக்கும் நபரை எந்த நோயின் பெயரையாவது சொல்லி மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்காமல் அவரை ஆசுவாசப்படுத்த வேண்டும். அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து மார்புக்குள் நிரப்பி மெதுவாக மூச்சை வெளியிடச் செய்ய வேண்டும். உடலைத் தளர்ச்சியாக விடச்செய்வது கொஞ்சம் பலன் தரும். முதல் முறை இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும்போது இதயம், நுரையீரல், வயிறு, மூளையின் ரத்த ஓட்டம் ஆகியவை குறித்த பரிசோதனைகளை அவசியம் எடுக்க வேண்டும்.

பரிசோதனைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லாத பட்சத்தில், இதே அறிகுறிகள் திரும்ப திரும்ப ஏற்படும்போது, மனநல மருத்துவரை அணுகி ‘பானிக்’ பதற்றம் உள்ளதா என்று உறுதிசெய்து அதற்குரிய மாத்திரைகளையும் ஆலோசனைகளையும் பெறுவது நல்ல விடுதலையைக் கொடுக்கும்.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளை வெளியிட்ட சார்லஸ் டார்வினுக்கும் இந்த ‘பீதிக்கு உள்ளாக்கும் மனப்பதற்றம்’ இருந்தது. இதனால்தான் என்னவோ, இந்தப் பதற்றத்தைக் குறித்த முதல் தெளிவான விளக்கத்தை சார்லஸ் டார்வினால் கொடுக்க முடிந்தது. இன்றும் மனநல உலகில் முக்கிய சான்றாக அது கருதப்படுகிறது.

– கட்டுரையாளர், மனநல மருத்துவர்

 

நன்றி : டாக்டர்.ஆ.காட்சன் | இந்து தமிழ் திசைLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *