வடக்கில் தொடர்ந்தும் மழை – 60,000க்கும் அதிகமானோர் பாதிப்பு


வடமாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 60,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், வடமாகாணத்தில் சில மாவட்டங்களில் இடைக்கிடை மழை பெய்து வருகின்றது. எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து வருகின்றது.

கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 6,882 பேர் 20 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளே மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வெள்ள நிலைமையை ஆராய்வதற்காக பொது நிர்வாகம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.

அமைச்சர் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த விசேட கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை. சேனாதிராஜா, சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்திருந்தனர்.

கடந்த 3 நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,520 குடும்பங்களைச் சேர்ந்த 20,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 1200 குடும்பங்களை சேர்ந்த 3365 பேர் 13 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இடைக்கிடையே மழை பெய்து வருவதுடன், சீரற்ற காலநிலையால் 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *