இனி எதையும் மறக்காமல் இருக்க புதிய எழுத்து வடிவம்…


நம் வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாத நாட்கள் என்றால் அது நிச்சயம் பள்ளிக்கூட நாட்கள்தான். நண்பர்கள், ரொம்ப பிடித்த சில டீச்சர், இந்த டீச்சர் மட்டும்  வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்ளும் அந்த ஒரு டீச்சரென நம் பள்ளிக்கூட நாட்களை எப்போது நினைத்தாலும் அது ஒரு சுகம்தான். இதில் முக்கியமாக தேர்வு நேரங்களில், நன்றாக படிப்பவர் முதல் ஓரளவு படிப்பவர் வரை என்று அத்தனை பேருக்கும் தேர்வறையிக்குள் சென்று கேள்வித்தாளை பார்த்ததும் சில பதில்கள் மறந்துபோகும்.

அதனாலே சில மதிப்பெண்களை இழக்கவும் நேரிடும். இனி அதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் நாம் படித்ததில் பெரும்பலமான விஷயங்களை மறக்காமல் இருப்பதற்காகவும் புதிதாக ஒரு எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலிஜி எனும் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ‘காஃநேட்டிவ் சைக்காலஜி’ (cognitive psychology) எனும் கொள்கையை கொண்டு முற்றிலும் புதிதாக ஒரு எழுத்து வடிவத்தை கண்டறிந்துள்ளனர்.  இந்த எழுத்து வடிவத்தை ’சான்ஸ் ஃபார்கெட்டிக்கா’ (Sans Forgetica) என்று குறிப்பிடுகின்றனர்.

இது மற்ற எழுத்து வடிவங்களில் இருந்து வேறுபட்டு இருவேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக இந்த எழுத்துக்கள் சற்று இடது புறமாக சாய்ந்து இருக்கிறது. அடுத்தது இதில் வரும் எழுத்துக்களில் பாதிக்கும் மேல் துளைகளுடன் உள்ளது.

இதுபோன்ற துளைகளுடன் படிக்கும்போது அந்த வார்த்தைகள் படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் அதன் மூலம் மாணவர்களின் அறிவாற்றல் திறன் அதிகமாக வேலை செய்யும் என்பதால் அவர்கள் அந்த வார்த்தைகளை எளிதில் மறந்துவிடமுடியாது என்றும் அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 400 மாணவர்களிடம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில் பல்வேறு எழுத்து வடிவங்களுடன் சான்ஸ் பார்கெட்டிக்கா எழுத்து வடிவத்தையும் சேர்த்து அந்த ஆராய்ச்சியை நடத்தி இருக்கிறார்கள், அதில் சான்ஸ் பார்கெட்டிக்கா எழுத்து வடிவத்தில் பயின்ற மாணவர்கள் அதிக நினைவு திறனுடன் இருந்து இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி : வீதன் | நக்கீரன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *