சமத்துவமாக அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதே சுதந்திரம்!


693_content_manoharan

பிரித்தானியரின் ஆட்சியிலிருந்து சுதேசிகளின் ஆட்சிக்குக் கைமாறிய நாளை சுதந்திர நாள் என்று ஆண்டுதோறும் இலங்கை கொண்டாடி வருகின்றது. சுதந்திரம் என்றால் என்ன என்பதை நம் நாட்டவர் சரிவரப் புரிந்து கொண்டார்களா என்பது இன்று வரை  விடை காண முடியாதவொன்றாகவேயுள்ளது. சுதந்திரம் நாட்டின் நிலப்பரப்பின் ஆட்சி அதிகார மாற்றம் மட்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால் சுதந்திரத்தின் உண்மைப் பொருள் மறக்கப்பட்டுள்ளது.

அதுவே சுதந்திர இலங்கையின் சாபக்கேடாகவுள்ளது. நாடு என்னும் போது அதற்கு எல்லைகள் இருத்தல் வேண்டும். அந்த எல்லைக்குள் வாழும் சகலரும் அந்நாட்டின் குடிமக்களாகக் கணிக்கப்படல் வேண்டும். அத்துடன் சமத்துவமாகக் கணிக்கப்படவும் வேண்டும். சகலருக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அனுபவிக்கும் உரிமைகளில் பாகுபாடு இருக்கக் கூடாது.

இன, மத, மொழி என்று எந்தவொரு வேறுபாடுமின்றி நாட்டின் அதிகார எல்லைக்குள் வாழும் அனைவரும் நிம்மதியாக வாழவழி இருக்க வேண்டும். இதுவே ஒரு சுதந்திர நாட்டின் பெறுமதிக்கானவை.   இவ்வாறு சகல மக்களும் சகல நன்மைகளையும் உரிமையுடன் அனுபவிப்பது சுதந்திரம் என்று கொள்ளப்படும் நிலையில், இந் நாடுகளில் பிரிவினை வாதம் எவ்வாறு தலை தூக்க முடியும் ? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொறுப்புடன் சிந்திக்காது செயற்பட்டவர்களே பிரிவினைவாதிகள். அவர்களே நாட்டின் பிரிவினை வாதத்தின்   பிதாமகர்கள். உண்மை அதுவாகவேயுள்ளது.   நமது நாட்டிலே பிரிவினை வாதத்திற்கு வித்திட்டவர்களை இனங்காண்பது மிகவும் சுலபமானது. ஆனால், அதற்கு குறுகிய மனப்பாங்கு இடமளிக்க மறுக்கின்றது.

பிரிவினை வாதச் செயற்பாடுகள் நாட்டில் பயங்கரவாதத்திற்கும் வித்திட்டு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு விட்டது. இவ்வாறிருந்த போதிலும் நாடு பாடம் படித்ததாகத் தெரியவில்லை.   1505 இல் அந்நியரான போர்த்துக்கேயர் இத் தீவில் அடியெடுத்து வைத்த காலத்தில் தமிழரின் ஆளுகைக்குட்பட்டிருந்த யாழ்ப்பாண இராச்சியமும் கண்டி மற்றும் கோட்டை இராச்சியங்களும் இருந்தன. இராச்சியங்கள் என்னும் போது அவை நாடுகளாகும்.  1815 இல் கண்டி இராச்சியம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டு முழு நாடும் ஒரு நாடாக்கப்பட்டது இது வரலாறு.

அந்நியரான ஐரோப்பியர்  இந் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி  செய்யாதிருந்தால் இந் நாட்டில் தலைவிதி அல்லது  நிலைமை வேறாயிருந்திருக்கும் . இத் தீர்வை ஒரு நாடாக இணைந்து உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாட்டை உருவாக்கியவர்கள் பிரித்தானியர்களே.

இவ்வாறு ஒன்றுபடுத்தப்பட்ட தீவுக்கு சுதந்திரம் என்ற பெயரில் ஆட்சியதிகாரம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதேசிகளிடம் கையளிக்கப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவமாகக் கணித்து ஆள வேண்டிய சுதேசிகளின் ஆட்சி பிரிவினை வாதத்திற்கு அத்திவாரம் இட்டது.

“நந்தவனத்திலோர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தான் ஒரு தோண்டி. அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி’ என்பது போல் அந்நியரிடமிருந்து பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை இன வாத, மொழி வாத சிந்தனையால் போட்டுடைத்து விட்டனர் என்றால் அதுவே ஏற்புடையது.  நாட்டின் அதிகார எல்லைக்குள் வாழும் சகல மக்களும் சமத்துவமான உரிமையுடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் பிரித்தானியர் சட்டமியற்றி ஜனநாயக முறைமையான ஆட்சி முறையையும் ஒப்படைத்தனர்.

நமது நாட்டில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்து அடக்கியாள்வது என்ற கேடுகெட்ட சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டது. அது இன்றும் தொடர்கின்றது. சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது பிரிவினைவாத சட்டமாகும்.

அதாவது இந் நாட்டின் ஒரு பகுதிக் குடிமக்களான இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமைகளைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக , ஆட்சியிலே பங்கற்றவர்களாக அரசுத் துறைகளில் தொழில் செய்யவோ, காணி வாங்கவோ வழியற்றவர்களாகச் செய்யப்பட்டு நாட்டு மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து அந்நியப்படுத்தியமை பிரிவினை வாதமாகும்.

இந் நாட்டில் பிரிவினை வாதத்துடன் சட்டம் நிறைவேற்றி பிரிவினை வாத சிந்தனையை மாற்றினங்கள் மீது வெறுப்பை புகுத்திய பெருமையோ, கொடுமையோ சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்கேயுரியது.  மூன்றாவது பாராளுமன்றம் பிரிவினை வாதத்தின் எல்லையைத் தொட்டது. இந்நாடு தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வாழும் நாடு. சிங்களவர்கள் பெரும்பான்மையாக ஆளும் வல்லமையுடன் இருந்ததால் நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழர்களின் தாய்மொழி உரிமையைப் பறித்து அந்நியப்படுத்திய பிரிவினை வாதச் சட்டமான தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

அந்நியர் இந் நாட்டில் அடியெடுத்து வைத்த காலத்தில் தமிழ் மொழியை  ஆட்சி மொழியாகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியமும்  இந்த இலங்கைத் தீவாகிய நாட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்பதைப் புறந்தள்ளப் பிரிவினை வாதச் சிந்தனையுடன் கூடிய மொழிச் சட்டத்தை நிறைவேற்றிய அநாகரிகச் செயல் மூன்றாவது பாராளுமன்றத்திற்குரியது.

குடியுரிமை மற்றும் வாக்குரிமைப் பறிப்புச் சட்டங்களைக் கொண்டு வந்தும், மொழிப் புறக்கனிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தும் நாட்டிலே பிரிவினை வாதத்திற்கு உரமூட்டிய கொடுமை சுதந்திர இலங்கையின் பாராளுமன்றங்களுக்கேயுரியது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரிவினை வாதத்தை விதைத்தவர்கள் இந் நாட்டை ஆண்ட ஜனநாயகம் என்ற போர்வைக்குள் புகுந்து ஆட்சி அதிகாரம் செலுத்திய இனாவதிகளே, இன வெறியர்களே.  இன்று நாட்டில் பிரிவினை வாதத் தடைச் சட்டம் அமுலிலுள்ளது. அந்தச் சட்டம் நாட்டின் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டவொன்று . நாட்டு மக்களைப் பிரித்து பிரிவினைவாத நோக்கில் செயற்படுவோருக்கு அந்தப் பிரிவினை வாதத் தடைச் சட்டம் எதுவுமே செய்யாது. இனப் பிரிவினை வாதம் பேசலாம். மொழிப் பிரிவினைவாதம் பேசலாம்.

மதப் பிரிவினை வாதம் பேசலாம். இந்தப் பிரிவினைவாதங்களைத் தடை செய்ய நாட்டிலே உருப்படியான சட்டம் எதுவும் இல்லை.  இழந்த, பறிக்கப்பட்ட உரிமைகளை, தாம் அனுபவிக்க உரித்துடைய உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்ளக் குரல் கொடுக்கும் நாட்டு மக்களை இன வாதிகளாக, பிரிவினைவாதிகளாகச்  சித்திரிக்கும். அங்கீகரிக்கும் சுதந்திரமே நம் நாட்டிலுள்ளது. பாதிக்கப்பட்டவன் தன்குறையை எடுத்துக் கூறுவது வெளிக்காட்டுவது கூடாது.

அது பிரிவினை வாதம் என்பது போல் கூறப்படுகின்றது.   தான் அனுபவிக்கும் உரிமையை மற்றவனும் அனுபவித்தால் அது தவறு. அதற்கு இடமளிக்கக் கூடாது என்ற சிந்தனை உள்ளவனை நாகரிக மனிதனாக நோக்க முடியாது. இலங்கையின் முதலாவது சுதந்திர தின நிகழ்வில் நாட்டின் தேசிய கீதம், தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் தமிழில் தேசிய கீதம் இசைப்பது முற்றாகத் தடை செய்யப்பட்ட நிலைமை  காணப்பட்டது.

நாட்டின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பது பாவமானது. பிரிவினைவாதமானது. நாட்டின் இறைமையை  மீறுவதானது என்றெல்லாம் கூறப்பட்டது. அது இன்றும் தொடர்கின்றது.   இவ்வாண்டு சுதந்திர தின விழாவில் இருமொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுமென்று கூறப்படுகின்றது.

விட்ட தவறு, குற்றம் இனித் தொடராது என்று நம்புவோம். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதால் நாடு அடையப்போகும் பாதிப்பு ஆபத்து என்ன ?  நாட்டு மக்களுக்கு ஏற்படப் போகும் துன்பம் என்ன ? தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழருக்கு எதிரான பிரிவினை வாத நோக்கே இதன் ஏதுவாயுள்ளது.  நாட்டிலிருந்து பிரிவினை வாதத்தை முற்றாக அகற்ற வேண்டும். பிரிவினை வாதப் பயங்கரவாதம் தலை தூக்க இடமளிக்கக் கூடாது என்ற சிந்தனை பெறுமதிமிக்கது. அந்த நோக்கை, இலக்கை இலங்கை நாடு அடைவது எப்படி என்று சிந்திப்போர் அற்ற நிலை காணப்படுகின்றது.   இந் நாட்டில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி கொள்வதற்காக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரிவினை வாதச் சட்டங்கள் அதாவது நாட்டின் ஒரு பகுதி மக்களை மொழி, இன, மத ரீதியாகப் பாதிக்கும் அந்நியப்படுத்தும் சட்டங்கள் உத்தியே õக பூர்வமாக நிராகரிக்கப்பட வேண்டும்.

இனி ஒருபோதும்  இவ்வாறான  சட்டங்கள் உருவாக்கப்படக் கூடாது என்ற உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.  நாட்டிலே  பிரிவினை வாதம் வெற்றி கொள்ளப்பட்டது. பிரிவினை வாதம் தோற்கடிக்கப்பட்டது என்று கூறுவதாலோ, கூச்சலிடுவதாலோ, பிரிவினை வாதச் தனிச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதாலோ நாட்டில் நல்லன எவையும் நடக்காது. நாட்டு மக்கள் எதுவித பாகுபாடுமின்றி அடிப்படை வாழ்வுரிமைக்குப் பாதிப்பின்றி நிம்மதியாக வாழ வழி வேண்டும்.

வழி செய்யப்பட வேண்டும். அதுவே நாடு முழுமையாகச் சுதந்திரம் பெற்றது, பெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்தும். தொடர்ந்தும் இனவாதம், மொழி வாதம், மதவாதம், பிரதேச வாதம் பேசிச் செயற்பட்டால் அந்நியரால் ஒருநாடாக இணைக்கப்பட்டு வழங்கப்பட்ட சுதந்திரம் முடக்குவாதத்தால் முடங்கிவிடும்.  இதைப்புரிந்து கொள்ள முடியாது. அல்லது புரிந்து கொள்ள மறுத்து கொண்டாடப்படும்  சுதந்திரம் பெறுமதியற்றது. ஒய்யாரக் கொண்டையாம் தாளம் பூவாம். உள்ளே இருப்பதோ ஈரும், பேனும் என்ற நிலையிலேயே நம் நாட்டின் சுதந்திர சிந்தனை உள்ளதென்றால் புத்தியுள்ள எவரும் மறுக்கமாட்டார்கள்.

 

 

நன்றி : தினக்குரல் | த. மனோகரன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *