மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 3 | மு. நியாஸ் அகமது


 

பரிகாசம் செய்பவர்களை, என்ன செய்யலாம்…? வாக்குவாதம் செய்யலாம்; மெளனமாக கடந்துசெல்லலாம் அல்லது அவர்கள் புருவம் உயர்த்தும் வண்ணம் வெற்றியைப் பரிசளிக்கலாம். ஆம், வெற்றி வாள் மட்டுமல்ல… அது கேடயமும்கூட. கிண்டல்கள், பரிகாசங்கள் எல்லாவற்றையும் தன்னில் உள்வாங்கிக்கொண்டு, கரையச் செய்யும் தன்மைகொண்டது அது. தத்துவார்த்தமாக ஆராய்ந்தால், ஆப்ரகாம் லிங்கன் தொடங்கி பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வரை வெற்றியில்தான் கிண்டல் சொற்களைக் கரைத்து இருக்கிறார்கள்.

இந்தத் தத்துவங்கள் எல்லாம் அந்தச் சிறு வயதில் அம்முவுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அவரும்  கிண்டல்களைக் கரைக்க இந்த வெற்றியைத்தான் தேர்ந்தெடுத்தார். கண்ணீரைக்கொண்டு கவலைகளைக் கரைக்க முடியாது என்று ஆனபின், அவர் முன்வைத்தது வெற்றியை மட்டும்தான்.
கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட அம்மு!

அடிப்படையில் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூகம், நாகரிகத்தின் பொற்காலத்தில் இருக்கிறோம் என்று பிதற்றிக்கொள்ளும் இந்தச் சமூகம், இன்றும்கூட நடிகர்களுக்குச் சமமான மரியாதையை நடிகைகளுக்குத் தருவதில்லைதானே. நடிகைகளைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணம்தானே இன்றும் இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஐந்து தசாப்தங்களுக்குமுன் நடிகைகளை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்து இருக்கும்? அதுவும் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் ஒரு பெண் குறித்து சமூக மதிப்பீடுகள் எப்படியானதாக இருந்து இருக்கும்…? நிச்சயம் பரிகாசம் செய்து இருக்கும்தானே… அவதூறான வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கும்தானே… ஆம், இது அனைத்தையும் அந்த நாட்களில் சந்தியா சந்தித்தார். சந்தியா மட்டும் அல்ல… துரதிர்ஷ்டமாக பள்ளி நாட்களில் அம்முவும்கூடதான்.

இதை, ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். “சில பணக்கார வீட்டுப் பெண்கள் என்னைக் கிண்டல் அடித்தார்கள். என் அம்மா சிறுசிறு வேடங்களில்தானே நடித்தார். இதைவைத்து என்னைப் பரிகாசம் செய்தார்கள்.”

இந்தக் கிண்டல் சொற்களால், அம்மு முடங்கிப் போய்விடவில்லை; யாரிடமும் தர்க்கமும் செய்யவில்லை; அதை மெளனமாகவும் கடந்துசெல்லவில்லை. அவர் மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தார். அனைத்துப் பாடங்களிலும் முதல் இடம்பிடித்தார்; பள்ளியில் மிகவும் ஒழுக்கமான மாணவியாக இருந்து, அனைத்து ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக ஆனார். தன்னைத்தானே அந்த வயதிலேயே வெற்றியின் மூலம் ஒரு வலுவானவராக வடிவமைத்துக்கொண்டார். ஆம், இப்போது நீங்கள் அம்முவை பரிகாசம் செய்வது அவ்வளவு சுலபமானது அல்ல… அவர், உங்களுக்குமுன் ஒரு வெற்றியை வைத்திருக்கிறார். அவரை, கிண்டல் செய்ய வேண்டுமானால்… நீங்கள் அதைக் கடந்துசெல்ல வேண்டும். அந்த வயதில் அவருக்கு வெற்றி மட்டும்தான் அரணாக இருந்தது.

இந்தக் கிண்டல்களினால், அவருக்கென்று அந்த வயதில் பெரிதாக நண்பர்கள் யாரும் இல்லை. பள்ளிக் காலங்கள் பெரும்பாலும் தனிமையில்தான் அவருக்குச் சென்றன. கிடைத்த ஒரே நண்பரும் அவருக்குத் துரோகத்தைப் பரிசளித்துச் சென்றார். அரசியலில், பல துரோகங்களை ஜெயலலிதாவாக சந்தித்து இருக்கிறார். ஆனால், அம்முவாக 13 வயதில் அவர் சந்தித்த முதல் நம்பிக்கை துரோகம், அவர் பல நாட்கள் தனிமையில் அழ காரணமானது.

முதல் துரோகம்!

அப்போது அவரது வீடு தி.நகர், சிவஞானம் தெருவில் இருந்தது. அவர் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி இருந்த, இவரைவிட இரண்டு வயது மூத்த பெண் ஒருவர், அம்முவுக்குத் தோழியாகிறார். அதுவரை அவருக்குப் பெரிதாக  தோழிகள் என்று யாருமில்லை. இந்த நட்பு, உண்மையில் அம்முவுக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது. சந்தோஷமாக தன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறார். ஆனால், அந்தப் பெண் தன்னுடன் நட்பானதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என்பது, அம்முவுக்குச் சில நாட்கள் கழித்துத்தான் தெரிகிறது.

ஆம், அந்தப் பெண் அம்மு வீட்டின் அருகே இருந்த ஒரு ஜெயின் பையனை நேசித்தார். அம்முவீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால்தான், அந்தப் பையன் வீடு தெரியும். அதனால், தினமும் அந்தப் பெண் அம்மு வீட்டுக்கு வந்து, மொட்டை மாடியிலிருந்து நின்றுகொண்டு அந்தப் பையனிடம் சைகையில் பேசுவார். இதைச் சில நாட்கள் கழித்துத்தான் அம்மு கண்டுபிடித்தார். இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் அம்மு கேட்க, இதை அவரும் ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். எனக்காக அந்தப் பையனிடம், தூது செல்ல முடியுமா? தான் வராத நாட்களில், அந்தப் பையனிடம் தான் வராத காரணத்தை சைகையில் சொல்ல முடியுமா?” என்று அந்தப் பெண், அம்முவிடம் தங்கள் காதலுக்கு உதவி கேட்கிறார்.

உண்மையில், இது அம்முவுக்குச் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. தன்னைவிட இரண்டு வயது மூத்த பெண் தன்னிடம் உதவி கேட்பதே, அவருக்குச் சிலிர்ப்பூட்டுகிறது. இதன் விளைவுகள் எதனையும் யோசிக்காமல், அந்தப் பதின்பருவ காதலுக்குத் தூது செல்ல அம்மு சம்மதம் தெரிவிக்கிறார். சொல்லப்போனால், அந்த வயதில் அவர் தெரிவித்த இந்தச் சம்மதம்தான், துரோகச் சூழ் இவ்வுலகு குறித்து அவருக்கொரு புரிதல் உண்டாகக் காரணமாக அமைகிறது.

அந்தத் தோழி, சில நாட்கள் அம்மு வீட்டுக்கு வரவில்லை. தான் வராத காரணத்தை அந்தப் பையனிடம் தெரிவித்துவிடும்படி அம்முவிடம் சொல்கிறார். அம்முவும் இதை அந்தப் பையனிடம் மொட்டை மாடியில் நின்று சைகையில் தெரிவிக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டமாக இதை அம்மு வீட்டுக்கு வரும் பால்காரர் பார்த்துவிடுகிறார்.

இந்த விஷயத்தை சந்தியாவிடம் சொல்லி இருந்தால்கூட, அம்மு உண்மையைச் சொல்லிச் சமாளித்து இருப்பார். ஆனால் பால்காரர், அம்முவின் தோழி வீட்டுக்குச் சென்று, “இனி உங்கள் பெண்ணை அந்த நடிகை வீட்டுக்கு அனுப்பாதீர்கள். அம்முவின் நடவடிக்கை சரியில்லை… அவர் மாடியில் நின்றுகொண்டு ஒரு பையனிடம் தினமும் சைகையில் பேசிக்கொண்டு இருக்கிறார்” என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் அந்தப் பெண் அம்மு வீட்டுக்கு வருவது நின்றுவிடுகிறது.

தோழி பல நாட்கள் வீட்டுக்கு வராததால்… அம்மு, அந்தத் தோழியின் வீட்டுக்குச் செல்கிறார். அந்தத் தோழியின் பெற்றோர், அந்த பால்காரர் சொன்னதை அப்படியே சொல்லி அம்முவை சரமாரியாகத் திட்டிவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில், தோழி உண்மையைச் சொல்லித் தன்னைக் காப்பார் என்று அம்மு தன் தோழியையே பார்க்கிறார். ஆனால், அந்தத் தோழி அம்முவின் பார்வையைச் சந்திக்கத் திராணியின்றி அமைதியாகத் தலைகுனிந்து நிற்கிறார்.

வசைச் சொற்கள் தன்னை வந்து தாக்கிய அந்தச் சமயத்திலும்கூட அம்மு, தன் தோழியைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவர் செய்தது வீட்டுக்குச் சென்று, தனிமையில் வெகுநேரம் அழுதது மட்டும்தான். நம்பிக்கை துரோகம் என்ற பதத்துக்கான அர்த்தத்தை, முதன்முதலாக அம்மு உணர்ந்தது அப்போதுதான். ‘‘துரோகம் இவ்வளவு வலியைத் தருமா? என்று வெகுநாட்கள் இதை நினைத்து அழுதிருக்கிறேன்’’ என்று இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் அம்மு.

ஏன் ஜெயலலிதா மற்ற தலைவர்களைப்போல் அதிகம் பேச மாட்டேன் என்கிறார்… ஏன் அவர் யாரையும் நம்புவது இல்லை… ஏன் எப்போதும் அவர் தனக்குத்தானே ஓர் அரணை அமைத்துக்கொண்டு அதன் உள்ளேயே இருக்கிறார்… என்ற நம் பல கேள்விகளுக்கான விடை, இந்தச் சம்பவத்தால்கூட இருக்கலாம்.

ஆம், மனிதர்களின் ஆளுமையைத் தீர்மானிப்பதில், வடிவமைத்ததில்… சிறு வயதில் அவர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளும் இருக்கிறதுதானே…?

 

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

 

முன்னைய பகுதி :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *