மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 4 | மு. நியாஸ் அகமது


“உலகிலுள்ள அனைத்துத் துன்பங்களையும், வேதனைகளையும் ஓர் இடத்தில் கொட்டிக் குவித்து, அதிலிருந்து உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் சமப் பங்கை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினால், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு மட்டும் உரிய, தங்களுக்கு ஏற்கெனவே இருந்த துன்பங்களை மட்டுமே எடுத்துச் செல்வார்கள்” – கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸ். இது, ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த மேற்கோள். இதன் உட்பொருள், யாரும் பிறரின் துன்பங்களை, கவலைகளை பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை என்பதுதான்.

மன அழுத்தத்தில், பெரும் கவலையில் உழன்றுக்கொண்டு இருக்கும்போது, நமக்குத் தேவைப்படுவது பெரும் பணமோ, நகைகளோ இல்லை. அந்தச் சமயத்தில், நமக்குத் தேவையாக இருப்பது அன்பானவர்களின் அரவணைப்பு… உன் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள, என் இருப்பால் உன் தனிமையை விரட்ட ‘நான் இருக்கிறேன்’ என்று வருடிக்கொடுக்கும் ஒரு சொல். ஆனால், பொருள்வயப்பட்ட இந்த லெளகீக வாழ்க்கையில், அப்படியான ஒரு சொல், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பதே இல்லை. அப்படிக் கிடைத்திருந்தால், நிச்சயம் வரலாற்றின் பக்கங்கள் வேறு மாதிரியானதாகத்தானே இருந்திருக்கும்.

அம்முவும் சிறுவயதில் அப்படியான கவலையில்தான் இருந்து இருக்கிறார். அது, தனிமை தரும் கவலை. போர் வீயூகங்களைக்கூட தந்திரத்தின் துணையால் ஊடறுத்து வென்றுவிடலாம். ஆனால், தனிமையைக் கடப்பது அவ்வளவு எளிதானதா என்ன….? அந்தத் துரோகத்துக்குப் பின் தனிமையில்தான் அம்முவின் பல நாட்கள் கழிந்து இருக்கின்றன. சிறு வயது அம்முவின் மனதில் பதிந்த இந்த ரணங்கள்தான், பின்னாளில் ஜெயலலிதாவுக்கு சாக்ரட்டஸீன் மேற்கோள் பிடிக்கக் காரணமாக இருந்ததோ, என்னவோ…?

கலையில் கவலையைக் கரைத்தல்!

 

விருப்பப்பட்டுத்தான் கற்றார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், அந்தக் கொடும் தனிமையின் கரங்களிலிருந்து தப்ப அந்த நாட்களில் அவருக்கு நாட்டியம் பேருதவியாக இருந்தது. ஆம், அந்த நாட்களில் பிரபலமான பரத ஆசிரியராக கே.ஜெ.சரசாவிடம், நாட்டியம் பயில அம்முவை அனுப்பினார் சந்தியா. சரசா, அப்போது திரைப்படத் துறையில் பரபரப்பாக இருந்த ராமைய்யா பிள்ளையின் தூரத்து உறவினர். மிகவும் பிரபலமான நாட்டிய ஆசிரியர்.

ஆனால், நிச்சயமாக சந்தியாவுக்கு அப்போது திரைப்படம் குறித்த எந்தத் திட்டமும் இல்லை. நாட்டியம் பயின்றால் சினிமாவில் காலூன்றச் சுலபமாக இருக்கும் என்று எல்லாம் எண்ணவில்லை. சொல்லப்போனால், தொடக்கத்தில் அம்மு திரைப்படத் துறைக்கு வர வேண்டாம் என்றுதான் சந்தியா விரும்பினார். அம்முவின் விருப்பமும் அதுவாகத்தான் அப்போது இருந்தது. அம்முவுக்குத் திரைத்துறையை அப்போது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அம்மாவின் அரவணைப்புத் தனக்குக் கிடைக்காமல் இருப்பதற்கு திரைத்துறைதான் காரணம் என்று அம்மு நம்பினார். அது மட்டுமல்ல, திரைத்துறையைச் சார்ந்தவர்களையும் அந்த வயதில் அம்முவுக்குப் பிடிக்கவில்லை. பின்னாளில், இதுகுறித்துத் தன் நெருங்கியத் தோழிகளிடம்… அவர், “சில சமயம் அம்மாவை பார்ப்பதற்காகத் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் வீட்டுக்கு வருவார்கள். குண்டாக, ஒல்லியாக, வளர்த்தியாக, எண்ணெய் வழியும் முகத்துடன் எனப் பலர் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். எனக்கு அவர்களைக் கொஞ்சமும் பிடிக்காது’’ என்று கூறி உள்ளார்.

சரி. மீண்டும் சரசுவின் சரசாலயா நாட்டியப் பள்ளிக்கே வருவோம். அம்முவுக்கு முதலில் நாட்டியத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லைதான். ஆனால், அதே நேரம் எந்த விஷயத்தையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது அல்லவா? அதனால், நாட்டியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். எங்கும் எப்போதும் அனைவரின் செல்லப்பிள்ளையாக இருக்கும் அம்மு, சரசாலயா நடனப் பள்ளியிலும் அனைவரின் மனதையும் வென்றெடுத்தார்.
நிஜமான சிவாஜியின் வார்த்தைகள்!

அது, 1960-ம் ஆண்டு. அப்போது அம்முவுக்கு 12 வயது. மிகவும் கோலாகலமாக அம்முவின் நடன அரங்கேற்றத்துக்கு சந்தியா ஏற்பாடு செய்கிறார். திரைப் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. சிவாஜி கணேசன் தலைமையில் கோலாகலமாக அரங்கேற்றம் நடைபெறுகிறது. அம்முவின் நடனத்தைப் பார்த்து அனைவரும் மெய்சிலிர்த்துத்தான் போனார்கள். சிவாஜி அம்முவிடம், “நீ தங்க சிலைபோல் இருக்கிறாய்… எதிர்காலத்தில் நீ நிச்சயம் பெரிய நடிகையாக வருவாய்” என்று தன் சிலிர்ப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தவும் செய்தார். இந்த வார்த்தைகளை அவர் மனதின் அடியாழத்திலிருந்து சொல்லி இருந்தாலும்… அவை, உயிர் பெறும் என்று நிச்சயம் அப்போது அவரே நினைத்திருக்கமாட்டார். சந்தியாவுக்கு இந்த வார்த்தைகள் மகிழ்ச்சியைத் தந்தது. மகளைப் பிறர் புகழ்வதை யார்தான் விரும்பமாட்டார்கள். ஆனால், அவரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யார் எடுத்துக்கொண்டால் என்ன… எடுத்துக்கொள்ளாவிட்டால் என்ன…? காலம் இந்த வார்த்தைகளை அப்படியே உள் வாங்கிக்கொண்டது, பிறகொரு நாள் அதற்கு உயிர் கொடுத்தது.

ஆம். வரலாறு மீண்டும் திரும்புகிறது…!

 

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

 

முன்னைய பகுதி :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *