மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 8 | மு. நியாஸ் அகமது


சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு  விட்டுக்கொண்டிருந்தவர்…  அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்… அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்… அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்…? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன…? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்…?

இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

செய்ந்நன்றி கொல்லாத அம்மு…!

அம்மு, பள்ளி நாட்களில் வெகுநேரம் தன்னை அழைக்கவரும் வண்டிக்காகக் காத்திருந்திருக்கிறார். ஆம், அது எப்போதும் தாமதமாகத்தான் வந்து இருக்கிறது. அம்முவுக்கு மெட்ரிக் தேர்வுகள் தொடங்கிவிட்டன. சர்ச் பார்க் பள்ளியில், தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, லேடி வெல்லிங்டன் பள்ளிக்குத் தேர்வு எழுத போகவேண்டும். ஹால் டிக்கெட் வாங்கியாகிவிட்டது. ஆனால், அவரை அழைத்துச்செல்ல வாகனம் வரவில்லை. அனைத்து மாணவிகளும் சென்றுவிட்டார்கள். அம்முவும், அவர் தோழி ஸ்ரீமதியும் மட்டும் பள்ளியில் காத்திருக்கிறார்கள். வாகனம் வரவில்லை. பிடித்தமானவர்களுடன் இருக்கும்போது, கடிகார முட்களுக்கு றெக்கை முளைத்துவிடும் அல்லவா…? அதுபோல றெக்கை முளைத்துக் காலம் பறக்கிறது… அந்தச் சமயத்தில் ஸ்ரீமதியை அழைத்துச் செல்ல… அவரின் தந்தை வருகிறார். ஸ்ரீமதியின் தந்தையும் பிரபலமான புகைப்படக்காரர். அவருக்கு சந்தியாவை நன்றாகத் தெரியும். அம்முவுக்கும் அவரை நன்றாகத் தெரியும். அவர், “அம்மு உன் வாகனம் வருவதுபோல் தெரியவில்லை… எங்களுடன் வா, உன்னைப் பள்ளியில் விட்டுவிடுகிறேன்…” என்கிறார். அம்முவுக்குத் தயக்கம். அவர் எவரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்த்ததும் இல்லை… பெற்றதும் இல்லை. தயங்கி நிற்கிறார். ஸ்ரீமதியும், “இப்படியே நின்றுகொண்டிருந்தால், தேர்வைக் கோட்டைவிட்டுவிடுவாய். வா… அப்பாவுடன் செல்லலாம்” என்று வற்புறுத்துகிறார்.

அம்மு உணர்கிறார். இந்தத் தேர்வுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். அதைவிட்டால் எல்லாம் வீணாகிவிடுமே…! வேறு வழியில்லை… வாகனம் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. “அம்மாவின் வேலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவருக்கு என் படிப்பு குறித்தும், என் தேர்வு குறித்தும் எந்தக் கவலையும் இல்லையா…?” என்று கண்ணீர் சிந்தியபடி, ஸ்ரீமதியின் அப்பாவுடன் தேர்வெழுதச் செல்கிறார்.

கவலையுடன்தான் அந்தத் தேர்வை எழுதினார். நடுவே கண்ணீரும் சிந்தத்தான் செய்தார். ஆனால், இது எதுவும் அவர் வெற்றிக்குத் தடையாக இல்லை. ஆம், இந்தத் தேர்வில்தான் அதிக அளவில் மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சாதனை படைத்தார்.

அவர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதோ அல்லது அதற்காக விருது வாங்கியதோ மட்டும் செய்தி இல்லை. அதற்குப் பின்னால் இன்னொரு செய்தி இருக்கிறது. அதை ஸ்ரீமதியே சொல்கிறார், “அன்று நாங்கள் செய்தது சிறு உதவிதான். ஆனால், என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘உன் அப்பா மட்டும் என்னை அழைத்துச் செல்லவில்லை என்றால், என்னால் தேர்வெழுதி இருக்கவே முடியாது’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். சிறு உதவியையும் மறவாதவர் அம்மு.”

ஆம். சிறு வயதில் அம்முவிடம் இருந்த இந்தப் பழக்கம்தான், சினிமாவில், அரசியலில் ஜெயலலிதாவாக பல உச்சங்களைத் தொட்டபின்னும் தொடர்ந்து இருக்கிறது. அதில் ஒன்றுதான் சசிகலாவுடனான இறுக்கமான நட்பு.

அனைவரும் கைவிட்ட ஒரு கடினமான காலத்தில் சசிகலா உடன் இருந்தார். அந்த நன்றியை என்றும் ஜெயலலிதா மறக்கவில்லை. அதுதான் சசிகலாவை இந்த அளவுக்கு அவரிடம் நெருக்கம் ஆக்கி இருக்கிறது.

ஜெயலலிதாவே சசிகலா குறித்து ஒரு பேட்டியில் இவ்வாறாகச் சொல்கிறார், “என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாகச் சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். எனக்காக அவர் மிகச் சிரமப்பட்டிருக்கிறார்.”

‘‘ஆம்.. நான் தமிழச்சிதான்…!’’

ஜெயலலிதா, நன்றி மறக்காதவர் மட்டும் அல்ல. அசாத்திய தைரியம் கொண்டவரும்தான். சினிமாவில்  பரப்பரப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக கர்வார் பகுதியில் ஒரு சிறு தீவில் நடக்கிறது. அந்தப் பகுதியில் வசதியான அறைகள் எதுவும் இல்லாததால், படப்பிடிப்புக் குழு முழுவதும் மூன்று மணி நேரம் தொலைவில் உள்ள கோவாவில் தங்கி இருக்கிறது. ஏதேச்சையாகப் படப்பிடிப்புக் குழு அம்முவை மறந்து கோவாவில் தனியாகவிட்டுச் சென்றுவிடுகிறது. 17 வயது பெண். அப்போது சிகரம் தொட்ட நடிகையும் இல்லை. அதுவும் கோவாவில் அவரை யாருக்கும் தெரியவும் தெரியாது. ஆனால், அவர் கொஞ்சமும் அஞ்சவில்லை. தைரியமாகச் சூழ்நிலையைக் கையாள்கிறார். தனியாக கர்நாடகா சென்று, அங்கு ஒரு கட்டுமரக்காரர் துணையுடன் படப்பிடிப்பு நடந்த அந்தச் சிறு தீவு பகுதியை அடைகிறார். ஆம், அப்போதிலிருந்து, இப்போது வரை இந்தத் தைரியம்தான் ஜெயலலிதா.

இன்னோர் உதாரணமும் இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், வார இதழ் ஒன்றுக்கு, “என் பூர்வீகம் தமிழகம். நான் தமிழச்சி…” என்ற தொனியில் ஒரு பேட்டி தருகிறார். அந்தச் சமயத்தில், கர்நாடகாவில் பலரும், அவரைக் கன்னடப் பெண் என்றுதான் நினைத்திருந்தார்கள்.

ஆனால், இவர் அளித்த இந்த பேட்டி அவர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. கன்னடவெறியர்களுக்கு இது அசெளகர்யத்தைக் கொடுத்தது.  அதே நேரத்தில், ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கர்நாடகாவில் சாமுண்டி ஸ்டூடியோ செல்கிறார். இந்தத் தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட கன்னடவெறியர்கள், அந்த ஸ்டூடியோவை முற்றுகையிடுகிறார்கள். ‘‘ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டால்தான், இந்த இடத்திலிருந்துச் செல்வோம்’’ என்கிறார்கள்.

படப்பிடிப்புக் குழு எவ்வளவோ பேசிப் பார்க்கிறது. அவர்கள் கலைவதாக இல்லை. ஜெயலலிதாவிடம் இந்த விஷயத்தைச் சொல்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா கொஞ்சமும் அஞ்சாமல், அந்தக் கூட்டத்தைப் பார்த்து, “நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். நான் என்ன தவறாகச் சொல்லிவிட்டேன். நான் தமிழச்சிதான்..!” என்கிறார்.

 

 

 

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *