சிறப்பு கட்டுரை » மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 10 | மு. நியாஸ் அகமது


ஒரு பேட்டியில் ஜெயலலிதா இவ்வாறாகச் சொன்னார், “நான் இதுவரை நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை. கதைகளில், இலக்கியங்களில், திரைப்படங்களில் வேண்டுமானால் அத்தகைய நிபந்தனையற்ற அன்பு இருக்கலாம். ஆனால், அத்தகைய அன்பு நிஜவாழ்க்கையில் இருப்பதாக நான் கருதவேயில்லை” என்று. அத்தகைய பேரன்பைத்தான் புத்தகங்களின்… வார்த்தைகளின் இடுக்குகளில் தேடினாரோ, என்னவோ…? ஆம்… எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் அவர் திரைத் துறையின் தொடக்கக் காலத்திலிருந்து இருந்திருக்கிறார். புத்தகம் அவர் தேடிய, ஏங்கிய பேரன்பை வழங்கியதா என்றெல்லாம் தெரியவில்லை… ஆனால், அவருக்குக் கட்டற்ற உலக ஞானத்தை வழங்கியது. ‘‘அவரிடம், அயர்லாந்து தேர்தல் பற்றியும் உரையாடலாம்… மாசேதுங் பற்றியும் பேசலாம்’’ என்கிறார், 1970-களில் ஜெயலலிதாவை அதிகம் பேட்டி கண்ட திரைஞானி. அவரே, அந்தச் சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

‘‘நான் அரசியலுக்கு வந்திருப்பேன்!’’

அந்தச் சம்பவம் இதுதான். “அயர்லாந்தில் நடந்த தேர்தலில் ஒரு பெண் வெற்றி பெற்றார். அயர்லாந்து குறித்தெல்லாம், நமக்குத் தெரியாதுதானே…? ஆனால், ஜெயலலிதா தேர்தல் நடக்கும் சில தினங்களுக்கு முன்பே…. ‘அந்தப் பெண்தான் வெற்றி பெறுவார்’ என்று சரியாகக் கணித்துச் சொன்னார். உண்மையில், நான் வியந்துதான் போனேன்..!” என்கிறார் திரைஞானி. அந்தச் சமயத்தில் திரைஞானி இன்னொன்றையும் எழுதி இருந்தார், “நான் நினைக்கிறேன். ஜெயலலிதா, சினிமாவுக்கு வரவில்லையென்றால் அரசியலுக்குத்தான் வந்திருப்பார்” என்று. ஆம், அதுதான் நிகழ்ந்தது. ஜெயலலிதா, சினிமாவுக்கு வந்தது வேண்டுமானால் ஏதேச்சையானதாக இருக்கலாம்… விதியின் பாதை என்று சொல்லலாம். ஆனால், அவருடைய அரசியல் பிரவேசம் அவ்வாறானது இல்லை. அவருக்கு எப்போதுமே ஆழ்மனதில் அரசியல் குறித்து அலாதி விருப்பம் இருந்திருக்கிறது. அதை, ஜெயலலிதாவே பின்பு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

இதோ ஜெயலலிதா சொல்கிறார்,

“அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை, நான் சினிமாவுக்கு வராமலிருந்திருந்தால்… இன்று தேர்தலுக்காக அல்லது உபதேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பேன். இப்படிச் சினிமாவுக்கு வந்து நடிப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எல்லாம் தலைவிதிதான். ஆனால், கொஞ்சம் அதிர்ஷ்டமான தலைவிதி’’ என்று.

அவர் செல்லமாகக் கடிந்துகொண்ட இந்த அதிர்ஷ்டமான தலைவிதிதான், அவரின் அரசியல் பிரவேசத்தைச் சுலபமாக்கப்போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘‘நான் எம்.ஜி.ஆர் ஆகப்போகிறேன்…!’’

அம்முவாக ஜெயலலிதா பள்ளிக்கூடத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோதே அவருக்கு விருப்பமான நடிகராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார். அவருடைய படத்தைப் பார்த்துவிட்டு வந்து, அதுபோல வீட்டில் நடித்துப் பார்த்து இருக்கிறார். ஜெயலலிதாவே சொல்கிறார், “நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எம்.ஜி.ஆர் நடித்த அனைத்துப் படங்களையும் நானும், என் சகோதரரும் பார்த்துவிடுவோம். அந்தப் படங்களில் வரும் சண்டைக்காட்சிகள்போல, வீட்டில் ஆளுக்கொரு கம்பை எடுத்துக்கொண்டு சண்டைபோடுவோம். ‘நான்தான் எம்.ஜி.ஆர்… நீதான் வீரப்பா’ என்று நான் சகோதரனிடம் சொல்வேன். ஆனால், அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். ‘நான்தான் எம்.ஜி.ஆர்… நீதான் வீரப்பா’ என்பான். இதனால், எங்களுக்குள் பலத்த சண்டை வந்துவிடும். அம்மா வந்து சண்டையை விலக்குவார். சண்டையின் காரணத்தை அம்மாவிடம் சொல்வோம். உடனே அம்மா, ஒரு காசை எடுத்துச் சுண்டி மேலேபோட்டு, ‘பூவா… தலையா’ என்று எங்களைக் கேட்டு, எங்களில் ‘யார் எம்.ஜி.ஆர்… யார் வீரப்பா’ என்பதைப் பற்றி முடிவுசெய்வார். பிறகும், நான் விட்டுத் தரமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹூம்… ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இடத்தைப் பிடிப்பதற்கு ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியனை மட்டும் ஓரங்கட்டவில்லை, இளம் வயதில் தன் சகோதரனையும்தான் ஓரங்கட்டி இருக்கிறார்…!
ஜெ-வுக்காகப் படப்பிடிப்பை ரத்துசெய்த எம்.ஜி.ஆர்…!

கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம் அல்லவா? நீண்ட போராட்டத்துக்குப் பின், ஜெயலலிதா படப்பிடிப்புத் தளத்தில், சந்தியா சொல்வதுபோல் நடக்கத் தொடங்கிவிட்டார். மூத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வந்தால் எழுந்து வணக்கம் சொல்வது என அதன் அனைத்து விதிகளையும் பழகிவிட்டார். இவற்றை எல்லாம் அவர் பிடித்துச் செய்தாரா என்றெல்லாம் தெரியாது… ஆனால், இதனால் அவருக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆம், அனைவரின் விருப்பமான நடிகையாக ஆகிவிட்டார். அவருக்கு படங்கள் வந்து குவியத் தொடங்கின. குறிப்பாக, எம்.ஜி.ஆர் படங்கள். அந்தச் சமயத்தில், அவர் நடித்த அனைத்துப் படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

‘அடிமைப்பெண்’ படப்பிடிப்பு அப்போது தார் பாலைவனத்தில் நடந்துகொண்டிருந்தது. சினிமாவுக்கென சில விதிகள் இருக்கின்றன அல்லவா…. மைனஸ் டிகிரி குளிரில் கதாநாயகர்கள் ஆடை மேல் ஆடை போட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது, கதாநாயகிகள் மட்டும் மெலிதான உடை அணிந்து சிரமப்பட்டு நடித்துக்கொண்டிருப்பார்கள். அந்தச் சமயத்திலும் அதுதான் நிகழ்ந்தது. ஆம், தார் பாலைவனம் மிகக் கடுமையான வெப்பம். அனைவரின் கால்களிலும் தடிமனான செருப்புகள் அணிந்திருந்தபோது… அந்தக் காட்சியின் தேவை கருதி ஜெயலலிதாவுக்கு மட்டும் செருப்புத் தரவில்லை..

முதலில் ஜெயலலிதா எவ்வளவோ சமாளித்துப் பார்த்தார்… ஆனால், நேரம் ஆக ஆக வெப்பம் கூடிக்கொண்டே போனது. அவரால் ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியவில்லை. இதை யாரிடம் சொல்ல வேண்டும் என்றும் தெரியவில்லை…? ஆனால், இதை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டார். எங்கே ஜெயலலிதாவின் செருப்பு என்று கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டிருக்கிறார். அது வாகனத்தில் இருக்கிறது என்று தெரிந்ததும், அதை எடுக்க ஒரு நபரை அனுப்பி இருக்கிறார். வாகனம் வெகுதொலைவில் இருந்ததால், சென்றவர் வரத் தாமதமாகி இருக்கிறது. கோபமடைந்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டு, ஜெயலலிதாவை வாகனம்வரை தூக்கிச் சென்றிருக்கிறார்.

இதைப் பின்னர் ஒரு நிகழ்வில் நினைவுகூர்ந்த ஜெயலலிதா… “எம்.ஜி.ஆர் திரையில் மட்டும் அல்ல, நிஜத்திலும் நாயகன்தான்…!” என்றார்.

அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா உணவகம் என நீளும் பட்டியலில்… அந்த கதாநாயகன் பெயரை ஏதாவது ஒன்றுக்காவது வைத்து இருந்திருக்கலாம்…!

 

 

(தொடரும்)

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *