மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 12 | மு. நியாஸ் அகமது


மிகவும் உறுதியாக இருப்பது எந்த பலனையும் தராது…அதிக காயங்களும், துன்பங்களும்  வேண்டுமானால்  பரிசாக கிடைக்கலாம் என்பார் தென் ஆஃப்ரிக்க கலைஞர் கயோஸ்.  அவர் தன்  எந்த வலியிலிருந்து வார்த்தைகளை எடுத்து இதை வடித்தார் என்று தெரியவில்லை. ஆனால், இந்த சொற்கள், ஜெயலலிதாவின் வாழ்வுக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. ஆம், ஜெயலலிதா, தன் திரை உலக வாழ்வில் அனுபவித்த எல்லா வலிகளுக்கும், அவருடைய உறுதியான பண்புதான் காரணம். ஆனால், அதே உறுதிதான் அவர் தன் வலிகளில் இருந்து மீண்டு வரவும் உதவியது.

ஆளுமை செய்த எம்.ஜி.ஆர்… வெகுண்டெழுந்த ஜெ…!

திரை உலகமே திரண்டிருந்த ஜெயலலிதாவின் புதுமனை புகுவிழாவுக்கு  எம்.ஜி.ஆர் வரவில்லை என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம் அல்லவா….? அதற்கு ஒரு காரணம் இருந்தது. ஆம், எம்.ஜி. ஆர், தன்னை ஆளுமை செய்கிறார்,  தன் சுதந்திரத்தில் தலையிடுகிறார் என்று ஜெயலலிதா அப்போது நினைத்தார். அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தினால் தான் எம்.ஜி.ஆர், அந்த விழாவில் பங்கேற்காமல், அதே நேரம் மனம் கேட்காமல் பரிசுப் பொருளை  மட்டும் அனுப்பி வைத்தார். ஆனால், அடுத்த நாளே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.

ஜெயலலிதா தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அடுத்த நாள் , காஷ்மீரில் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக விமானத்தில் முன் பதிவும் செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதா விமானம் ஏறிய பிறகு தான் பார்த்தார். தன் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் எம்.ஜி.ஆர். இது ஏதேச்சையாக நடந்ததா அல்லது எம்.ஜி.ஆரின் திட்டமிட்ட ஏற்பாடா என்றெல்லாம் தெரியாது…? ஆனால், இதுதான் நிகழ்ந்தது. எம்.ஜிஆருக்கும் காஷ்மீரில் படப்பிடிப்பு இருந்தது. அதனால், அவரும் அதே விமானத்தில் பயணமானார். ஜெயலலிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை… கடலின் மேற்புறத்தில் காதைக் கிழிக்கும் சத்தம் கேட்டாலும், ஆழ்கடலில் ஒரு அமைதி நிலவுமே…? அது போல, விமானத்தின் சிறகுகள் சத்தத்தை கடந்து இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது.  விமானம் மேலே பறக்க பறக்க, அமைதியின் இறுக்கம் குறைந்தது. இருவரும் மீண்டும் பேசத் துவங்கினார்கள்.  காஷ்மீரில் விமானம் இறங்கியபோது, முற்றாக சகஜ நிலைக்கு திரும்பினார்கள்.

காஷ்மீரில் ஜெயலலிதாவுக்கு வேறொரு இடத்தில் படப்பிடிப்பு, எம்.ஜி,ஆருக்கு வேறொரு படத்தில் படப்பிடிப்பு. ஜெ, நடித்த படத்தின் கதாநாயகன் சிவாஜி. அந்த படப்பிடிப்பு தளம், எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தளத்திலிருந்து ஏறத்தாழ 60 மைல் தொலைவு. ஆனால், எம்.ஜி.ஆர் தன்னுடன் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். ஜெயலலிதாவால் மறுத்துப் பேச முடியவில்லை. தினமும் ஏறத்தாழ 60 மைல் அந்த பள்ளத்தாக்கு பகுதியில் பயணம் செய்துதான், ஜெ படப்பிடிப்பில் கலந்து கொண்டார், இதை ஜெயலலிதா விரும்பித் தான் செய்தாரா… அல்லது எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலை மீறி, ஜெயாவால் எதுவும் செய்ய முடியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் முடிவு தான், ஜெயாவின் வழியானது. அது தான் அவருக்கு வலியாகவும் அந்த சமயத்தில் ஆனது.

தனியாக ஒரு நாடக அணியை உண்டாக்கி, ஜெயலலிதா நாட்டிய நாடகம்  அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அந்த நாடகக்குழு மிகவும் பிரபலம் அடைந்தது. அந்த நாடகத்தை தங்கள் ஊரில் அரங்கேற்றச் சொல்லி உலகெங்கிலும் இருந்து அவருக்கு அழைப்புகள் வரத் துவங்கியது. ஜெயலலிதாவும் இதற்கு இன்முகத்துடன் சம்மதித்தார். அதற்கான முன் பணத்தையும் பெற்றார்.

அந்த சமயத்தில், உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த நிகழ்வுக்கு எம்.ஜி.ஆர் தான், சிறப்பு விருந்தினர். எம்.ஜி. ஆர், ஜெயலலிதாவையும் தன்னுடன் உலகத் தமிழ் மாநாட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், ஜெயலலிதா எனக்கு நாடக அரங்கேற்றம் இருக்கிறது. என்னால் வர முடியாது என்று மறுத்தார்.  ஆனால், எம்,ஜி. ஆரின் அழைப்பு  கட்டளையானது. சிங்கப்பூரிலிருந்து நீ நாட்டிய அரங்கேற்றத்துக்கு செல் என்று வற்புறுத்தினார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, தன் மொத்த திட்டத்தையும் ரத்து செய்துவிட்டு, வாங்கிய முன்பணத்தையும் திரும்ப தந்து விட்டார்.  அது மட்டுமல்ல, தன் நாடக குழுவையும் இதனால் கோபமடைந்து கலைத்து விட்டார்.

ஆம்… தம் முடிவுகள் அனைத்தையும் இன்னொருவர் எடுக்கிறார் என்றால், ஒருவருக்கு கோபம் வரத் தானே செய்யும்… வெகுண்டெழுந்து விட்டார் ஜெயலலிதா… ஆனால், இந்த கோபமும் வெகுநாட்கள் நீடிக்கவில்லை.  தனக்கு யாருமே இல்லை என்று உணரும் ஒருவர், இருக்கிற ஒரு உறவையும் இழக்க துணிய மாட்டார் அல்லவா…? அத்தகைய மனநிலையில் தான் அப்போது ஜெயலலிதா இருந்திருக்கிறார். நெகிழ்ந்திருக்கிறார்.

வாக்கு தவறாதவராக இருக்க வேண்டும்…!

நமக்கு இப்போது மிகவும் இறுக்கமானவராக தெரிகிறார் அல்லவா ஜெயலலிதா…? ஆனால், திரைப்படத்துறையில் உச்சத்தில் இருந்த போது இவ்வாறானவராக இல்லை. நகைச்சுவை உணர்வு அவரிடம் ததும்பி இருந்திருக்கிறது.

எழுபதுகளில் ஜெயலலிதா, ‘ ஆனந்த விகடனில்’ ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்… இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்…” என்று ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோல நிறைய கடிதம் வருகிறது. அதில் இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும், அதே நபரிடமிருந்து கடிதம்… மீண்டும் அதே புராணம்… “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்… இந்த தேதிக்குள் சம்மதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்…” என்று மீண்டும் ஒரு தேதியைக் குறிப்பிடுகிறார்.  இப்போதும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை…. நாட்கள் நகர்கிறது… மீண்டும் அதே நபரிடமிருந்து கடிதம் வருகிறது…  “என்னை திருமணம் செய்ய சம்மதியுங்கள்… இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்…” என்று.

அவருக்கு பதில் கடிதத்தை, இவ்வாறாக ஜெயலலிதா எழுதி இருக்கிறார், “எனக்கு கணவராக வர வேண்டியவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். மற்ற கொள்கைகளைவிட இது தான் முக்கியம்…சொன்ன வாக்கை மீண்டும் மீண்டும் மீறும் உங்களை எப்படி நான் மணக்க முடியும்…?”

ஆம்… அப்போது இது தான் ஜெயலலிதா…!

 

 

(தொடரும்)

 

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *