மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 13 | மு. நியாஸ் அகமது


“நீங்கள் ஒரு புதுமொழியை கற்கும்போது, மீண்டும் பிறக்கிறீர்கள்” – இது செக் குடியரசு பழமொழி. உண்மை தானே…? நம் தாய் மொழியை தாண்டி இன்னொரு மொழியை கற்கும்போது, அந்த மொழி பேசும் மக்களின் வாழ்வியலை, அவர்களின் பண்பாட்டை, அவர்களின் இலக்கியத்தை நம்மால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். அதன்மூலம் நமக்கு இன்னொரு பார்வை கிடைக்கும்… இன்னொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும். அதேநேரம், அந்த இன்னொரு பிறப்பு என்பது நம் விருப்பத்தினால் நிகழ வேண்டும். இன்னொரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தேடல் நம் ஆன்மாவுக்கு இருக்க வேண்டும். இவ்வாறாக இல்லாமல், நம்மிடம் இன்னொரு வாழ்க்கையைக் கொண்டு வந்து திணித்தால், இயல்பாக நமக்கு அந்த வாழ்க்கையின் மீது வரும் காதலும் இல்லாமல் போகுமே அன்றி நிச்சயம் எந்த நன்மையும் பிறக்காது.

கத்திக் கத்தி கற்றுக்கொண்ட தெலுங்கு!

ஜெயலலிதா குறித்து எல்லோரும் வியக்கும் விஷயம் அவரின் மொழி ஆளுமை. தமிழ் தவிர்த்து, அவரால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேச முடியும். 2007-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மிக சரளமாக இந்தி பேசியபோது, அந்த மேடையில் இருந்த முலாயம் சிங்கே வியந்துதான் போனார். அதுபோல ஒரு முறை, ஆந்திராவில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்கினார். பெரும் எண்ணிக்கையில் கூடி இருந்த பாமர மக்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்பதை உணர்ந்த அவர், சட்டென்று தெலுங்கில் உரையாற்றத் துவங்கி விட்டார்.

சிறுவயதில் மெட்ரிக் பள்ளியில் படித்ததால் அவருக்கு ஆங்கிலம் சுலபமாக வந்தது. இன்னும் சொல்லப்போனால் சர்ச் பார்க் பள்ளியில் படித்த காலத்தில் தமிழில் பேசத்தான் தடுமாறினாரே தவிர, ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். பிறகு கன்னடம்… தான் பால்ய வயதை மைசூரு மற்றும் பெங்களூரில் கழித்ததால் அவருக்கு அந்த மொழியும் இயல்பாக வந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளைத் தவிர மற்ற மொழிகளை எல்லாம், அவர் திரை உலகுக்கு வந்த பிறகு தனது தேவையின் கருதி கற்றவை. அதே நேரத்தில் மற்ற மொழிகள் மீதிருந்த விருப்பத்தினாலும் கூட…!

தாம் மொழிகள் கற்ற பின்னணியை அவரே முன்பொருமுறை அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அவரது வார்த்தைகளிலிருந்தே  – “தமிழ் எனது தாய் மொழி. மைசூரில் சிறு வயதில் சில காலங்கள் வரை இருந்ததால் அங்கு வீட்டில் வேலையாட்களுடனும், அக்கம் பக்கத்தில் உள்ள சிறுமிகளுடனும் பேசிப் பேசி கன்னடத்தைக் கற்றுக் கொண்டேன்.”

அதே நேரம் அவர் தெலுங்கு கற்ற கதை மிக சுவாரஸ்யமானது. அதையும் அவரே சொல்கிறார்.

“ நான் ‘மனசுலலு மமதலு’ என்ற தெலுங்குப் படத்துக்கு ஒப்பந்தமானேன். அப்போது தயாரிப்பாளர்களிடம், ‘எனக்குத் தெலுங்கு தெரியாதே!’ என்றேன். அவர்கள் உடனடியாக தெலுங்கு ஆசிரியரை எனக்கு மொழி கற்பிக்க பணியமர்த்தி விட்டார்கள். தினமும் காலை சரியாக ஆறு மணிக்கு அந்த தெலுங்கு ஆசிரியர் வருவார். நான் அந்த சமயத்தில் தான், நல்ல தூக்கத்தில் இருப்பேன். என்னை வீட்டில் எழுப்புவார்கள். தூக்க கலக்கத்தில் தான் வகுப்புக்குச் செல்வேன். அது மட்டுமல்லாமல், அப்போதெல்லாம் நான் மிகவும் சங்கோஜி. யாராவது நாலு வார்த்தை பேசினால், நான் ஒரு வார்த்தை தான் பதில் பேசுவேன். தெலுங்கு பண்டிட் ஏதாவது எனக்கு கோபம் வரும்படி சொல்லிச் சீண்டி விடுவார். நானும் அதற்குப் பலமாக பதில் அளிப்பேன். தெலுங்கில் அதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி, மேலும் சீண்டுவார். நான் கத்த, அவர் கத்த, பெரிய ரகளையாகி விடும். நான் இப்படிக் கத்தி கத்திக் கற்றுக் கொண்டதுதான் தெலுங்கு. இதனால் இரண்டு மாதத்தில் கற்க வேண்டிய தெலுங்கை சுமார் நாற்பது நாட்களிலேயே கற்றுக் கொண்டேன்” என்று தான் தெலுங்கு கற்ற அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
ஜெவின் அழகு குறிப்பு!

இப்போது வேண்டுமானால் ஜெயலலிதா தன்னை மிகவும் இறுக்கமானவராக காட்டிக் கொள்ளலாம். இயல்பான தன் விருப்பங்களை தனக்குள்ளேயே வைத்து பூட்டிக் கொள்ளலாம். ஆனால், தன் பதின்ம வயதில், அந்த வயதுக்கே உரிய அபிலாஷைகளுடன் தான் ஜெயலலிதா இருந்தார். அவருக்கு விருப்பமான நடிகராக ஷம்மி கபூரும், பிடித்தமான விளையாட்டு கிரிக்கெட் வீரராக நாரி காண்டிராக்டரும் இருந்திருக்கிறார்கள்.

அவரே சொல்கிறார், “அறுபதுகளில் ஏதோ ஒரு பொது நிதிக்காக வட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், தென்னிந்திய நட்சத்திரங்களுடன் சேர்ந்து நேரு ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது, திலீப் குமார், ஷம்மிகபூர், ராஜ்கபூர், மாலா சின்ஹா போன்ற பிரபல நட்சத்திரங்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஒரு ரூபாய் என்று அறிவித்திருந்தார்கள். அப்போது நானும் என் தோழியும் சேர்ந்து ரூபாய் கொடுத்து நட்சத்திரங்களிடம் கையெழுத்து வாங்கினோம். இதை எப்படி என்னால் மறக்க முடியும்…?”

ஜெயலலிதாவுக்கு தன் சிறு வயதிலேயே தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அலாதி விருப்பம் இருந்திருக்கிறது. சிறு வயதில் சந்தியாவுக்கு தெரியாமல், அவரின் மேக்கப் பாக்ஸை திறந்து தன்னை அலங்கரித்து இருக்கிறார். இதற்காக, சந்தியாவிடம் அடியும் வாங்கி இருக்கிறார். ஆனால், காலம்  அவரையும், மேக்கப் கிட்டையும் நெருக்கமாக்கி அழகு பார்த்தது. ஆம், நடிப்பில் பிஸியான பின், விருப்பம் இருக்கிறதோ இல்லையோ… தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்ளத்தானே வேண்டும்…!

ஜெயலலிதாவே ஒரு முறை தன் அழகு குறிப்பை பகிர்ந்திருக்கிறார். அந்த அழகுக் குறிப்புக்கு அவர்  ‘கிளியோபாத்ரா ஸ்டைல்’ என்று பெயரும் வைத்தார். அந்த அழகு குறிப்பை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம், “கிளியோபாட்ரா பாலில் குளித்தது போல நான் உடம்பு முழுவதும் வெண்ணெயைத் தேய்த்து, அது சிறிது ஊறிய பிறகு பயித்தம் மாவை தேய்த்துக் குளிப்பேன். அதுபோல, முகம் பொலிவுடன் விளங்க விளக்கெண்ணெயைத் தேய்த்துச் சிறிது நேரம் ஊறின பிறகு பச்சை பயிரை அரைத்து தேய்த்துக் கழுவுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல… அவர் அப்போது இன்னொரு அழகுக் குறிப்பையும் பகிர்ந்திருக்கிறார்.  அது மிகவும் எளிமையான அழகுக் குறிப்பு தான். ஆண், பெண் என எந்த பேதங்களும் இல்லாமல் அனைவரும் பின்பற்ற வேண்டியதும் கூட…  அந்த அழகுக் குறிப்பு இது தான், “மனதை அழுக்கில்லாமல், குழப்பமில்லாமல்… தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.. நிச்சயம் உங்கள் முகம் மிளிரும்…”

உண்மைதானே…?

 

 

(தொடரும்)

 

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *